காஸா மீதான தாக்குதல்களின் எதிரொலி – சர்வதேச சமூகவியல் சங்கத்தின் உறுப்புரிமையிலிருந்து இஸ்ரேல் இடைநிறுத்தம்
எம்.ஐ.அப்துல் நஸார்
காஸாவில் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு எதிர்வினையாற்றும் விதமாக மொரோக்கோ சமூகவியலாளர்கள் மற்றும் உலகளாவிய சிவில் சமூகத்திடமிருந்துவரும் அழுத்தங்களைத் தொடர்ந்து சர்வதேச சமூகவியல் சங்கம் (ஐ.எஸ்.ஏ) இஸ்ரேலிய சமூகவியல் சங்கத்தின் உறுப்புரிமையினை இடைநிறுத்தியுள்ளது.
ரபாத்தில் அமைந்துள்ள முகமது வீ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ஐந்தாவது ஐ.எஸ்.ஏ மாநாட்டில் இஸ்ரேல் பங்கேற்பிற்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமையினைத் தொடர்ந்து மேற்படி முடிவு எடுக்கப்பட்டது.
சர்வதேச சமூகவியல் சங்கம் கடந்த வாரம் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில், இஸ்ரேலின் தாக்குதல் நடவடிக்கைகளை ‘காஸாவில் பலஸ்தீன மக்ககளுக்கு எதிராக செய்யப்பட்ட இனப்படுகொலை செயல்கள்’ என இவ்வமைப்பு வர்ணிப்பதற்கு அமைவாக இவ்வுறுப்புரிமை நீக்கம் பிரதிபலிக்கிறது என ஐ.எஸ்.ஏ அறிவித்துள்ளது, மேலும் இஸ்ரேலிய சமூகவியல் சங்கம் பலஸ்தீனத்தில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியைக் கண்டிக்கத் தவறியதையும் ஐ.எஸ்.ஏ மேற்கோள் காட்டியுள்ளது.
‘காஸாவில் பலஸ்தீன மக்களின் இனப்படுகொலைக்கு எமது பொது எதிர்ப்பின் ஒரு பகுதியாக, இஸ்ரேலிய பொது நிறுவனங்களுடன் எந்த நிறுவன ரீதியான உறவுகளையும் நாம் பேணவில்லை’ என அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
‘காஸாவில் நிலவும் துயரமான சூழ்நிலைக்கு இஸ்ரேலிய சமூகவியல் சங்கம் தெளிவான கண்டனத்தை வெளியிடாததற்கு நாங்கள் வருந்துகிறோம். தற்போதைய நிகழ்வுகளில் இஸ்ரேலின் பங்கேற்பிற்கு பரவலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டமையினால் நிருவாகக் குழு இஸ்ரேலிய சமூகவியல் சங்கத்தின் உறுப்புரிமையினை இடைநிறுத்த முடிவு செய்துள்ளது.’
மொரோக்கோ கல்வியாளர்கள் மற்றும் இஸ்ரேலின் கல்வி மற்றும் கலாச்சார புறக்கணிப்புக்கான மொரோக்கோ பிரச்சார அமைப்பு (MACBI) உட்பட மனித உரிமை அமைப்புகளின் தொடர்ச்சியான எதிர்பினைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது. இஸ்ரேலிய கல்வியாளர்களுக்கு வழங்கப்பட்ட அழைப்புகளை திரும்பப் பெறுமாறு மொரோக்கோ சமூகவியல் சங்கத்தை இந்த பிரச்சார அமைப்பு ஏலவே வலியுறுத்தியிருந்தது,
இஸ்ரேலிய பங்கேற்பினை அங்கீகரிப்பது அதன் ஆக்கரமிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றங்கள் என்பவற்றினை ஆதரித்து அவற்றுக்கு உடந்தையாக இருப்பது போன்றதாகும் எனவும் அவ்வமைப்பு வலியுறுத்தி இருந்தது.
எனினும், அனைத்து தரப்பும் இந்த உறுப்புரிமை நீக்கத்திற்கு உடன்படவில்லை. சமூகவியல் பேராசிரியர் ஜமால் பாசா உறுப்புரிமை நீக்கத்தினை ஒரு கருத்தியல் மீறல் என்று விவரித்தார். ‘விஞ்ஞானம் மற்றும் விஞ்ஞானிகளை அரசியல் மற்றும் கருத்தியல் மோதல்களுக்குள் இழுப்பது சமூகவியல் சங்கத்தின் நோக்கத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது,’ என தெரிவித்தார்.
‘ஆக்கிரமிப்பு மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தில் ஈடுபடும் ஆட்சியாளர்களின்’ பிரதிநிதிகளை ஒரு பெரிய சர்வதேச கல்வி நிகழ்வில் கலந்து கொள்ள அனுமதிப்பதில் பல்கலைக்கழகம் உடந்தையாக இருப்பதாக தேசிய உயர்கல்வி ஒன்றியத்தின் மொரோக்கோ பிரிவு, தெரிவித்துள்ளதோடு ‘ஆழ்ந்த கவலையையும்’ வெளிப்படுத்தியுள்ளது.
காஸாவில் இஸ்ரேலின் செயற்பாடுகள் தொடர்பில் உலகளவில் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த நிகழ்வு கல்விசார் இராஜதந்திரத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் சுட்டிக்காட்டுகின்றது. முன்னணி சர்வதேச அமைப்புகள் நிறுவன இணைப்புகளின் அரசியல் தாக்கங்களையும் அவற்றுடன் வரும் பொறுப்புகளையும் கருத்தில் கொள்ளத் தொடங்கியுள்ளன என்பதை இது காட்டுகின்றது.- Vidivelli