(எம்.வை.எம்.சியாம்)
அனைவருக்கும் ஜனநாயக ரீதியாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் திறன் இருந்தாலும் இனவாதம் மீண்டும் தலைதூக்க ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கு சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால் சட்டங்கள் பலப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
கல்னேவா மகாவலி மைதானத்தில் நேற்று (30) பிற்பகல் நடைபெற்ற இலங்கை ராமான்ய மகா பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தனது அரசாங்கத்தின் நோக்கம்.
மேலும் சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியுள்ளது. அதன் ஊடாக அரசியல்வாதிகளன்றி வடக்கிலும் தெற்கிலும் உள்ள அப்பாவி பெற்றோர்களின் பிள்ளைகளே பலியாகினர். இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.- Vidivelli