காஸா பகுதியில் உள்ள மனிதாபிமான உதவி மையங்கள், சிற்றுண்டி விடுதி மற்றும் பாடசாலை என்பவற்றின் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுவீச்சு தாக்குதலில் 95 பலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர்.
நேற்று திங்கட்கிழமை 62 பேர் வரை காஸா நகரிலும், காஸாவின் வடக்கு பிரதேசத்திலும் பாதிக்கப்பட்டனர். வடக்கு காஸா நகரில் உள்ள அல்பகா கஃபே எனும் கடலோர சிற்றுண்டி விடுதி மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 39 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்தனர்.
இந்த சம்பவத்தில் இஸ்மாயில் அபு ஹதாப் எனும் ஊடகவியலாளர் ஒருவரும் அங்கு குடியிருந்த பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடங்குவர்.
இந்த குண்டுத் தாக்குதலால் சிற்றுண்டி விடுதி முற்றாக தரை மட்டமானதுடன் தரையில் ஒரு பெரிய குழி ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்றின் செய்தியாளர் ஒருவர் விபரித்துள்ளார்.
அத்துடன், குறித்த சிற்றுண்டி விடுதி அமைந்துள்ள பகுதி இடம்பெயர்ந்த மக்களுக்கு புகலிடமாக அமைந்திருந்ததாகவும், தாக்குதலையடுத்து இரத்த வெள்ளத்தில் சிதைந்த உடல்கள், சதைத் துண்டுகள் கிடந்ததாகவும் செய்தியாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, நேற்றைய தினம் காஸா, ஜெய்டவுன் சுற்றுப்புறத்தில் உள்ள மனிதாபிமான உதவி வழங்கும் நிலையமொன்றில் இஸ்ரேல் வான்படை நடத்திய தாக்குதலில் நிவாரண பொருட்களை பெற்றுக்கொள்ள முயன்ற 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்தோடு, இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் தங்கியிருந்த காஸா நகரிலுள்ள யாஃபா எனும் பாடசாலை மீது இஸ்ரேல் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியிருந்தது.
இந்த தாக்குதலுக்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறுவதற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக அங்கிருந்து தப்பிய ஹமா அபு ஜராதே என்பவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தஞ்சமடைந்திருந்த டெய்ர் எல்-பலாவில் உள்ள அல்-அக்ஸா மருத்துவமனை முற்றவெளியிலும் நேற்றைய தினம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியிருந்தது. இதனால், அந்த மருத்துவமனை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது.
காசா மீதான 22 மாதப் போரின் போது இஸ்ரேல் டசின் கணக்கான மருத்துவமனைகளை மீண்டும் மீண்டும் குறிவைத்துள்ளது.
மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு பெற்ற நிபுணர்களின் தங்குமிடங்கள் மற்றும் சுகாதார நிலையங்களையே இஸ்ரேல் திட்டமிட்டு அழித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.- Vidivelli