மத்திய கிழக்கு அமைதியை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளில் கத்தார் ஈடுபட்டுள்ளது.
காசா மீதான இஸ்ரேலின் யுத்தத்தை நிறுத்துவதற்கும், இஸ்ரேல் – ஈரானுக்கு இடையிலான யுத்தத்தை தொடர்ந்தும் நிறுத்தி வைத்திருக்கவும் காத்தார் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
அணுசக்தி பிரச்சினையில் ஈரானுடனான உடன்பாட்டை எட்டுவதற்கான முயற்சியிலும் கத்தார் ஈடுபட்டுள்ளதாகவும், மீண்டும் யுத்தம் தீவிரமடையாதிருப்பதற்கான உத்தரவாதத்தை அனைத்து தரப்பினரிடமிருந்தும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக கத்தாரின் வெளிவிவகார அமைச்சின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
காசா மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு செல்வதற்காக அமெரிக்கா முயற்சிகளை தொடர்கின்றபோதிலும் அதில் சிக்கல்கள் இருப்பதாக கத்தார் தெரிவித்துள்ளது.
காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் உள்நுழைவதை தடுப்பதில் இஸ்ரேல் பிடிவாதமாக உள்ளதாகவும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கத்தார் சுட்டிக்காட்டியுள்ளது.
அல் உதெய்த் விமான தளம் குறிவைக்கப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கத்தார் அமீரை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஈரான் ஜனாதிபதி மன்னிப்பு கேட்டதாகவும் கத்தார் வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.