இஸ்ரேலிய துருப்புக்கள் காசாவிலிருந்து வெளியேறினால், தமது தரப்பிலுள்ள 50 பணயக் கைதிகளை விடுவித்து போர் நிறுத்தத்திற்கு செல்லத் தயார் என ஹமாஸ் அறிவித்துள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதங்களை களைந்து முழுமையாக சரணடைந்தாலே போர் நிறுத்தத்திற்கு தயார் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகுவின் ஆலோசகரான ரான் டெர்மர் போர்நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைக்காக இந்த வாரம் வொஷிங்டனுக்கு விஜயம் செய்யவுள்ளதாக ஏ.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன், அடுத்த வாரமளவில் இஸ்ரேலியப் பிரதமரும் அங்கு பயணிக்கவுள்ளதாகவும் இதன்போது, போர்நிறுத்த ஒப்பந்தம் குறித்து கவனம் செலுத்துவதற்கான அறிகுறிகள் இருப்பதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையினால் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் இழுபறி நிலையிலேயே இருந்து வருகின்றது. எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தமானது யுத்தத்தை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டுவருவதற்கான முனைப்பாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நெதன்யாகு தற்போது ஹமாஸுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகளுக்கான பணிகளை மேற்கொண்டுவருவதாகவும் அதில் பணயக் கைதிகளை திரும்பப் பெறுவது குறித்த விடயமும் அடங்குவதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.