ஸ்னாப் சாட் தளத்தில் உள்ள புள்ளிகள் மற்றும் கீற்றுகள் (Scores and Streaks)
நேரடிப் பொருள் கொண்டால் ஸ்கோர்ஸ் என்பது ஒருவர் பெற்றுக் கொள்கின்ற புள்ளிகளை குறிக்கிறது. ஆங்கிலத்தில் ஸ்டீக்ஸ் (Streaks) என்பது, Snapchat என்னும் சமூக ஊடகத்தளத்தில் நீங்களும் உங்களுடைய நண்பர்களும் புகைப்படங்களை அல்லது வீடியோக்களை தொடர்ச்சியாக அனுப்பிக் கொண்டிருந்தால் உருவாகும் ஒன்றைக் குறிக்கும். 24 மணித்தியாலத்திற்குள் நீங்களும் உங்களது நண்பரும் குறைந்தது எத்தனை புகைப்படங்களை அல்லது வீடியோக்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதயும் இது குறித்துக் காட்டும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு புகைப்படங்களையும் வீடியோக்களையும் பரிமாறிக் கொண்டால் இதில் விசேடமாக நெருப்பு இமோஜி தோன்றும். இவ்வாறு தொடர்ந்து பரிமாற்றங்களை மேற்கொள்ளும் போது, ஒருவரது ஸ்டீக்ஸ் (Streaks) அதிகரிக்கின்றது. இது ஒரு விதமான அடைவு மட்டத்தை குறிக்கிறது.
உதாரணமாக ஒருவர் 10 நெருப்பு இமோஜிகளை பெற்றுக் கொண்டால் அவர் 10 ஸ்டீக்ஸ் (Streaks) பெற்றுக் கொண்டதாக கருதப்படும். ஒரு நாளைக்காவது புகைப்படங்களை அல்லது வீடியோக்களை அனுப்பாவிட்டால் ஒருவரது ஸ்டீக்ஸ் (Streaks) அளவுகோல் உடைந்து சரிந்து விடும். தொழில்நுட்ப நிறுவனம் அத்தோடு உங்களை விட்டு விடாது. உங்களுடைய ஸ்டீக்ஸ் (Streaks) அளவுகோலின் சரிவு தவறானது என நீங்கள் கருதுகின்ற போது, அது தொடர்பாக நீங்கள் ஸ்னாப்ஷாட்டுக்கு புகார் வழங்கலாம். அவர்கள் சரி பார்த்த பின்னர் ஒன்றில் உங்களுடைய ஸ்டீக்குகளின் அளவை திருத்தி தரலாம் அல்லது அதேநிலையில் வைத்திருக்கலாம். எனவே, ஒருவருடைய புள்ளிகளும் ஸ்டீக்ஸ்களும் அவர் எந்த அளவு ஈடுபாடு காட்டுகின்றார் என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இது சிறுவர்களை இணையதளத்தில் அல்லது சமூக ஊடகங்களில் அதிக நேரம் செலவிடும் படி தூண்டுகின்றது.
இரண்டு நண்பர்கள் தமக்கு இடையில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு பரிமாறிக் கொண்டால் அவர்களுடைய புள்ளிகளும் ஸ்டீக்குகளும் அதிகரிக்கின்றன. எனினும் ஸ்டீக்குகள் உடைந்து விட்டால் அவர்கள் மீண்டும் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு புகைப்படங்களை அல்லது வீடியோக்களை தமக்குள் பரிமாறிக் கொள்ள வேண்டும். இது ஒரு கஷ்டமான நிலையை தோற்றுவிக்கும். அதன் பின்னர், மீண்டும் இயல்பாக அவர்களது ஸ்டீக்குகள் அதிகரிக்கும். அதனை தொடர்ந்து ஸ்டீக்குகளை பேணிக்கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு இருவரும் தள்ளப்படுகிறார்கள்.
இது ஒரு சாதாரண விளையாட்டு போல தோன்றினாலும் சிறுவர்களை அதிகம் பாதிக்கக்கூடிய ஒன்றாகும். அவர்களுடைய நேர விரயம் ஒருபுறம் இருக்க, மன அமைதி பாதிக்கப்படுகிறது; கல்வி நடவடிக்கைகளில் அவர்களால் கவனம் செலுத்த முடியவில்லை; சமூகத்தில் அவர்களுக்காக வழங்கப்பட்ட கடமைகளில் கரிசனையோடு செயல்பட முடியாமல் போகிறது; மன உளைச்சல் ஏற்படுகிறது. குறித்த நண்பர்கள் இருவரையும் ஸ்னாப்செட் ஒருவித நிர்ப்பந்தத்திற்குள் தள்ளிவிட்டு தொடர்ச்சியாக அவர்களுக்கு இடையிலே ஊடாட்டத்தை தொடங்கி விடுகிறது. சில போது, தவறான நட்புகளுக்குள் சிறுவர்கள் தள்ளப்படுகிறார்கள். ஆரம்பத்தில் நல்ல புகைப்படங்களை பரிமாறிக் கொண்டவர்கள், போட்டித் தன்மை அதிகரிக்க அதிகரிக்க தமது அந்தரங்க புகைப்படங்களை பரிமாறிக் கொள்ள தூண்டுகின்றார்கள். இவ்வாறான பல சம்பவங்கள் இலங்கையிலும் இடம் பெற்றுள்ளன.
அண்மையில் ஒரு இளைஞர் ஸ்னப்சட் (snapchat) இல் தன்னோடு புகைப்படங்களை பரிமாறிக் கொண்டிருந்த நண்பியிடம் புகைப்படங்களை பரிமாறிக் கொள்ளத் தொடங்கினார். இருவரும் இதற்கு முன்னர் அறிமுகமானவர்கள் அல்லர். இளைஞர் அவர்களுக்கிடையில் புகைப்படங்களை பரிமாறிக் கொள்கின்ற போட்டியை ஆரம்பித்து வைக்கிறார். முதலில், தனது தோழியிடம், நாம் மொத்தமாக 15 புகைப்படங்களை பரிமாறிக் கொள்ள வேண்டும் -என நிபந்தனை விதிக்கிறார். நண்பியும் அதனை ஏற்றுக் கொள்கிறார். இருவரும் புகைப்படங்களை பரிமாற தொடங்குகிறார்கள். முதலாவது புகைப்படமாக உங்களது வீட்டு முற்றத்தில் உள்ள ஒரு மரத்தின் புகைப்படத்தை அனுப்புங்கள் என நண்பர் கூறுகிறார். இது ஒரு சாதாரண விடயம் தானே. மரத்தின் புகைப்படத்தை எடுத்து அனுப்புவதில் என்ன சிக்கல் இருக்கிறது. உடனடியாக யுவதி தன்னுடைய நண்பரின் வேண்டுகோளுக்கு கட்டுப்படுகிறார். இரண்டு பக்கங்களிலும் புகைப்படங்கள் பரிமாறப்படுகின்றன. இரண்டாவது மூன்றாவது புகைப்படங்களின் போது, குறிப்பிட்ட இளைஞர், தனது பெண் நதியின் வீடு, கற்றல் அறை, அவர் கற்கும் மேசை, அவரது ஆடைகள் தொங்கவிடப்பட்டிருக்கும் இடம் என்பனவற்றை பெற்றுக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் யுவதியின் முகத்தோற்றத்தின் நெருங்கிய வடிவத்தை புகைப்படமாக அனுப்பக் கூறுகிறார். அவ்வாறே செய்யப்படுகிறது. போட்டி தொடர்கிறது. இந்த போட்டி தீவிரமடைந்த போது தன்னுடைய அந்தரங்க புகைப்படத்தை பரிமாறிக் கொள்ளுமாறு நண்பர் வேண்டுகோள் விடுகிறார். ஒரு சிறு தயக்கத்தின் பின்னர் அது உன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. போட்டி முடிவடைகின்ற போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி யுவதியிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட புகைப்படங்கள் நிர்வாண படங்களாக மாற்றப்படுகின்றன. நண்பர் அவற்றை பரிமாறிய போது அந்த யுவதி அதிர்ந்து போகிறார். இப்போது என்ன செய்வது. நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்வதாகவும், யுவதியின் குடும்பத்தினருக்கோ அல்லது நண்பர்களுக்கோ அனுப்பி விடுவதாகவும் கூறி இளைஞர் அச்சுறுத்தல் விடுக்கிறார். அதற்கு பதிலாக தனது வகுப்பில் உள்ள அழகான பெண் மாணவி ஒருவரின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை கேட்டார். அதனை கொடுக்காவிட்டால், தனது அந்தரங்க புகைப்படங்கள் வெளியே வரும் என்ற நிலையில் குறித்த யுவதி தனது நண்பியின் தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்தை குறித்த இளைஞருக்கு வழங்குகிறார். ஒரு கட்டத்தில் குறித்த இளைஞன் சிக்கிக் கொள்கிறார். அப்போது அவரது கையடக்க தொலைபேசி பரிசோதிக்கப்பட்ட போது, பல இளம் பெண்களது நிர்வாண புகைப்படங்கள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது. இது சிறுவர்கள் எதிர்கொள்ளக்கூடிய பல்வேறு ஆபத்துகளின் ஒரு சிறு துளியாகும். இவ்வாறான ஒரு சம்பவம் நடந்து விட்டால் அதன் பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி அல்லது சிறுவர் உளவியல் ரீதியாக தாக்கத்திற்கு உட்படுகிறார். அவரது கல்வி பாதிக்கப்படுகிறது. குடும்ப அங்கீகாரத்தை இழக்க நேரிடுகிறது. சமூக விடயங்களில் கலந்து கொள்ள முடியாமல் போகிறது. சுய நம்பிக்கை குறைவடைகிறது. தாழ்வுச் சிக்கல் ஏற்படுகிறது. எந்த ஒரு விடயத்திலும் ஆர்வமில்லாமல் போகிறது.
சிறுவர்கள் ஏக காலத்தில் பல்வேறு நண்பர்களின் ஸ்டீக்குகளை பேணிக் கொள்கிறார்கள். இதன் மூலம் எந்த நட்பு அதிகம் பேணப்படுகிறது என்கிற தேவையற்ற ஒரு போட்டி நிலையும் உருவாக்கப்படுகிறது. இங்கு நட்பின் தரம் உண்மைத்தன்மை என்பனவற்றுக்கு அப்பால் கவர்ச்சிமிக்க ஊடாட்டம் என்பது முக்கியமாக கருதப்படுகிறது. இந்த ஸ்டீக்குகளை பராமரிப்பது என்பது நேர விரயமாகும். சிறுவர்கள் தம்மை அறியாமலே அதிக நேரத்தை இதில் செலவிடுகிறார்கள். நட்பில் உள்ள சிறுவர்கள் புதிதாக ஸ்டீக் அடைவுகளை பெறுகின்ற பொழுது அது பற்றிய அறிவித்தல்கள் அவர்களுக்கு கிடைக்கின்றன. இதனால், மிக அவசரமாக துலங்களை வழங்கி தன்னுடைய ஊடாட்டத்தை சிறுவர்கள் பேணிக் கொள்ள முற்படுகிறார்கள்.
ஸ்னப்சட்டில் (Snapchat) நட்புக்களை பேணிக் கொள்கின்றவர்கள் தமக்குள் நெருக்கமான ஊடாட்டம் இருக்க வேண்டும் என்பதை விரும்புகிறார்கள். யாருடைய கவனயீனம் ஸ்டீக்குகளின் சரிவுக்கு காரணமாக அமைகிறதோ, அவர் நட்பினை மதிக்காதவர் என்கிற நிலை உருவாகிறது. அவ்வாறான நிலை உருவாகின்ற பொழுது சிறுவர்கள் மனச்சோர்வடைகிறார்கள். இத்தகைய நிலையை தவிர்த்துக் கொள்வதற்காக சிறுவர்கள் நாள் ஒன்றுக்கு பல தடவைகளில் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பரிமாறிக் கொள்கிறார்கள். இவ்வாறு பரிமாறிக் கொள்வதன் மூலம் நட்புக்கு விசுவாசமாக நடந்து கொள்ளலாம் என அவர்கள் கருதுகிறார்கள். இணையதளம் எவ்வாறு சிறுவர்களின் நலனை பாதிக்கின்றது என்பது பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுகின்ற உளவியலாளர்கள் இதனை “கடப்பாட்டு வட்டம்” (obligation cycle ) என்று சொல்வார்கள்.
பல்வேறு ஆய்வுகளின் படி ஸ்டீக்குகளை (Streaks) பேணிக் கொள்வதற்காக வாரம் ஒன்றுக்கு பல மணித்தியாலங்கள் தேவைப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் 5 ரைட்ஸ் பவுண்டேஷன் நிறுவனம் நடத்திய செயலமர்வுகளில் ஆச்சரியமிக்க ஒரு விடயம் வெளிச்சத்துக்கு வந்தது. செயலமர்வில் கலந்து கொண்ட ஒரு சிறுவர், தனது Streaksகளை பராமரிப்பதற்காக, நான்கு நாட்களுக்குள் 32 மணித்தியாலங்களை செலவிட்டதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால், இலங்கையில் இது தொடர்பான ஆய்வுகள் இன்னும் பெரியளவில் வெளிவரவில்லை. இதனால், இலங்கையில் ஸ்னப்சட் (Snapchat) தளத்தை பரவலாக பயன்படுத்தும் சிறுவர்கள் நட்புகளை பேணிக் கொள்வதற்கு எவ்வாறு நேரத்தை செலவிடுகின்றார்கள் என்பதை பற்றிய எத்தகைய தெளிவான தகவல்களும் கிடைப்பதற்கில்லை.
(தொடரும்…)
- Vidivelli