டாக்டர் முகைதீன் படுகொலை வழக்கும் சிவில் சமூகத்தின் முன்னுள்ள பொறுப்பும்
அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இது விடயத்தில் அக்கறை காட்டாதது ஏன்?
மகப்பேற்று மற்றும் பெண்ணியல் விசேட வைத்திய நிபுணர் முஹம்மது சுல்தான் மீரா முகைதீன் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் மூலம் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வவுனியாவில் இடம்பெற்றது.
போர்க்களத்தில் வவுனியா, மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் வாழ்ந்த அரை மில்லியன் மக்களுக்கும் மிகவும் உக்கிரமான வேலைப்பளுவுக்கு மத்தியில் மிகவும் அர்ப்பணிப்புடன் மகப்பேறு மற்றும் பெண்ணியல் மருத்துவ சேவை வழங்கிய ஒரே விஷேட வைத்திய நிபுணர் இவராவார். வவுனியா பொது மருத்துவமனையை மையமாக வைத்து தனது சேவையை வழங்கி இருந்தார்.
சம்பவம் இடம்பெற்ற போது வவுனியா பொது வைத்தியசாலையில் அவசர சிசேரியன் சத்திர சிகிச்சை செய்ய வேண்டிய நிலையில் அப்போது அவர் வவுனியா கற்குளியில் அமைந்துள்ள வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சிவமேகன் அவர்களின் அபீஷா தனியார் வைத்தியசாலையில் இருந்து வவுனியா பொது வைத்தியசாலைக்கு வரும் போதே படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கோழைத்தனமான சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்ட வவுனியாவை சேர்ந்த நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபரை குற்றவாளியாக இனங்கண்ட வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், அவருக்கு மரணதண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு வாக்குமூலம் அளித்த குறித்த தனியார் வைத்தியசாலையின் உரிமையாளரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் எஸ். சிவமோகன் சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் வைத்தியர் முகைதீன் அவர்கள் தனியார் வைத்தியசாலையில் சேவையாற்றியுள்ளார். அத்தோடு, குற்றம் சுமத்தப்பட்டவர் மிக மோசமான முறையில் அவரை துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு கொலை செய்தார்.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் நெடுமாறன் என்ற குறித்த நபர் தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்பட்டிருந்தார்.
உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக நிரூபிக்கப்பட்ட நிலையில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக தீர்ப்பளித்த நீதிபதி, அவருக்கு மரண தண்டை விதித்து தீர்ப்பளித்தார். குறித்த சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் 14 ஆண்டுகளாக இடம்பெற்று வந்தன. இத்தகைய ஒரு நீண்ட விசாரணையின் பின்னரே சந்தேக நபர் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டார்.
நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன், நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
ஒரு திருப்புமுனையாக கடந்த 2025 மே மாதம் இருபதாம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் பிரகாரம் நெடுமாறன் என்பவர் இந்த குற்றத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தீர்ப்பினை இருவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் வெளியிட்டது. இதில் நீதிபதி பி சசி மகேந்திரன் மற்றும் அமல் ரணராஜா ஆகியோர் உள்ளடங்கினர். இந்த தீர்ப்பு மேல்முறையீட்டு நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருப்பதனால் தீர்ப்பு குறித்து எந்தவிதமான நிலைப்பாட்டையும் பொதுவெளியில் வெளிப்படுத்துவது பொருத்தமாக அமையாது.
எனினும் அவுஸ்திரேலியாவில் தனக்கு கிடைத்த மகப்பேறு பெண்ணியல் மருத்துவ தொழிலை விட்டு இலங்கை வந்து யுத்தம் இடம்பெற்ற சூழ்நிலையில் பொது மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் தனது உயிரை பணயம் வைத்து சேவை மனப்பான்மையோடு கடமையாற்றிய ஒரு முஸ்லிம் வைத்தியர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அனைவராலும் இலகுவாக மறக்கடிக்கப்பட்டமை கவலைக்குரியதாகும். அந்த வகையில் இந்த விடயத்தில் உள்ள சிவில் சமூக கடமைப்பாடு பற்றி பேச வேண்டியது முக்கியமாகும்.
கொலை முயற்சியோடு சந்தேகிக்கப்பட்டு அண்மையில் விடுவிக்கப்பட்டவர் புளொட் இயக்கத்தின் முக்கிய செயற்பாட்டாளர். இறுதி யுத்தத்தின் போதும் அதனைத் தொடர்ந்தும் வவுனியா உள்ளிட்ட பல்வேறு பிரதேசங்களில் மனித உரிமை மீறல் சம்பவங்களையும் கொலை முயற்சிகளையும் நடத்தி வந்தமை சர்வதேச ரீதியாக அறியப்பட்ட உண்மையாகும்.
2007 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமைகள் நிறுவனமான ஹியூமன் ரைட்ஸ் வாட்ச் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி புளொட் போன்ற அரச ஆதரவுடன் செயல்படும் ஆயுதக்குழுக்கள், காணாமல் போனவர்கள் குறித்த உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தின் மற்றுமொரு அறிக்கையில் (2008) புளொட் அமைப்பு, வவுனியா போன்ற பகுதிகளில் சட்டப்படி அங்கீகரிக்கப்படாத தடுப்பு மத்திய நிலைங்களை இயக்கியதாகவும், கைதிகளை துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. 2013 ஆம் அறிக்கையில், புளொட்அமைப்பின் உறுப்பினர்கள், கைதிகளை துன்புறுத்தி, பாலியல் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாகவும், சில வழக்குகளில், இவ்வமைப்பின் உறுப்பினர்கள் நேரடியாக ஈடுபட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியா டைம்ஸ் வெளியிட்ட 2002 ஆம் ஆண்டு கட்டுரையில், புளொட் அமைப்பு, “மரணக் குழுக்கள்” எனப்படும் குழுக்களில் ஈடுபட்டதாகவும், விடுதலைப் புலி ஆதரவாளர்களை அடையாளம் காண்பதில், புளொட் உறுப்பினர்கள் முக்கிய பங்கு வகித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புலிட்சர் சென்டர் அறிக்கையில் (2009) இவ்வமைப்பு, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து, அரசாங்கத்துடன் இணைந்து பராமிலிடரி அமைப்பாக செயல்பட்டதாகவும், வவுனியா போன்ற பகுதிகளில், கைதிகளை துன்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம் சிவில் சமூகம் மற்றும் இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் ஆகியன கருத்தில் கொள்ள வேண்டிய மூன்று விடயங்கள் உள்ளன.
முதலாவது, வைத்தியர் முகைதீன் அவர்களின் கொலையோடு தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்பட்டு இப்போது நீதிமன்றத்தின் மூலம் நிரபராதியாக விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் டாக்டர் முகைதீன் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட முடியும். அவரது பிள்ளைகள் நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் வைத்தியத்துறையில் கடமையாற்றிக் கொண்டிருப்பவர்கள். சம்பவம் இடம்பெற்றதை தொடர்ந்து தொடர்ச்சியாக அச்சத்தின் காரணமாக பாதுகாப்பின்மையை உணர்ந்தவர்கள். சம்பவம் இடம்பெற்ற 2009 ஆம் ஆண்டிலிருந்து அவர்களது வாழ்க்கை வவுனியா பகுதியில் சுதந்திரமானதாக அமையவில்லை. எனவே அவரது குடும்பத்தின் பாதுகாப்பு குறித்து அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
இரண்டாவது ஒரு அரசாங்க வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய ஒருவர் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கடமை முடிந்து விடுவதில்லை. படுகொலை தொடர்பான ஆவணப்படுத்தல்கள், குடும்பத்துக்கு நஷ்டஈடுகளை பெற்றுக் கொடுத்தல் போன்றன இதன் பொறுப்புகளில் சிலவாகும்.
ஆனால் பொதுவாக வேறு சம்பவங்களில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் காட்டும் அக்கறையை ஏன் இந்த சம்பவத்தில் காட்டவில்லை என்பது பொதுவான நிலைப்பாடாகும். இது தொடர்பில் பிரதேசவாசிகள் மிகுந்த ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இதற்கு முன்னர் அரச வைத்திய அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களின் போது அல்லது தனது சேவை நேரத்தில் தாக்குதலுக்கு உட்பட்ட போது அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் மிக கடுமையாக செயல்பட்டது. அவர்களுக்கு சட்ட உதவிகளை பெற்றுக் கொடுக்க முற்பட்டது. நஷ்ட ஈடுகளை பெற்றுக் கொடுப்பதில் மும்முரமாக செயல்பட்டது. ஆனால் வைத்தியர் முகைதீன் அவர்களின் விடயத்தில் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கம் தெளிவான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமை ஏமாற்றத்தை தருகிறது.
மூன்றாவது முஸ்லிம் சிவில் சமூகத்தின் பொறுப்பும் கடமையும். மிக கஷ்டமான ஒரு காலகட்டத்தில் நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் சேவையாற்ற வேண்டும் என்ற மனப்பான்மையோடு வெளிநாட்டில் தனக்கு கிடைத்த தொழிலையும் தூக்கி எறிந்து விட்டு தாய் நாட்டில் கடமையாற்றிய ஒரு தியாகியாகவே வைத்தியர் முகிதீனைப் பார்க்க வேண்டும். அவருடைய படுகொலையை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கான பாதுகாப்பையும் சட்டரீதியான நியாயத்தையும் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் சிவில் சமூகம் தவறியுள்ளது என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நபர் தொடர்பான குற்றத்தினை மேலும் உறுதிப்படுத்துவதற்கான சான்றுகளை உரிய தரப்பினர் முன்வைக்காமை இந்த வழக்கில் தீர்ப்பில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மிக நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர் அப்போது கிடைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வவுனியா நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டதன் பின்னணியில் அவதானிக்கப்பட்ட சட்டப் பிரச்சினைகள், ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல் தொடர்பான பிரச்சினைகள் இருந்திருக்க முடியும். அவற்றைத் தொகுத்து நீதிமன்றத்திற்கு வழங்குவதற்காக அச்சத்திலிருந்த குடும்பத்தினருக்கு உதவி செய்யும் சமூக நிறுவனங்கள் செயற்பட்டதாக அறிய முடியவில்லை. சந்தேகத்துக்கு அப்பால் குறிப்பிட்ட நபரின் குற்றத்தை உறுதி செய்வதற்கான சான்றுகளை கொலை செய்யப்பட்டவர் சார்பாக ஆஜரானவர்கள் முன்வைக்கத் தவறியிருந்தமையை மேல்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டி உள்ளது.
புளொட் அமைப்பு இந்தக் கொலையை செய்ததாக பரவலாக நம்பப்பட்டது. இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வைத்தியரை படுகொலை செய்வதற்கான விசேடமான தேவை புளொட் அமைப்புக்கு இருந்ததா? இது பதில் தேட வேண்டிய மிக முக்கியமான வினா. ஊடகத்துறையினரும், சிவில் சமூகத்தினரும், அரசாங்கப் புலனாய்வுத் துறையினரும், முஸ்லிம் அரசியல்வாதிகளும் இதற்கான பதிலை தேடுவது மிக முக்கியமாகும்.
வவுனியா மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் இந்த கொலைக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் எந்த விதமான தொடர்புகளும் இல்லை என நம்பினர். ஒரு சிலர் இந்த கொலையை விடுதலைப் புலிகளின் தலையில் கட்டுவதற்கு முயற்சித்தனர். எனினும், விடுதலைப் புலிகள் இயக்கம் இந்த கொலையை செய்திருக்க முடியாது என்பதே பலரதும் நம்பிக்கையாக உள்ளது. விடுதலைப் புலிகளை ஆத்திரமூட்டக்கூடிய எந்த ஒரு செயற்பாட்டிலும் வைத்தியர் ஈடுபட்டமைக்கான சாட்சிகள் எதுவும் கிடைக்கவில்லை. கடைசி யுத்தத்தின் போது பாலியல் வன்புணர்வுகளுக்கு உட்பட்ட பெண்கள் தொடர்பான வைத்திய நடவடிக்கைகளை இவர் மேற்கொண்டுள்ளார். யுத்த சூழ்நிலையை மையமாகக் கொண்டு பல்வேறு தரப்பினரும் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட வன்புணர்வு சம்பவங்களும் இடம்பெற்றன. அவை பற்றிய பல இரகசியங்கள் வைத்தியரிடம் இருந்துள்ளன. வண்புணர்வு சம்பவங்களை சட்டத்தின் முன் மறைப்பதற்காக அல்லது அத்தாட்சிகளை அழிப்பதற்காக இவரை சம்பந்தப்பட்ட தரப்பினர் படுகொலை செய்திருக்கலாம். புளொட் அமைப்பு அரச இராணுவத்தின் ஏவல் படையாக செயல்பட்டமை தொடர்பான சர்வதேச அறிக்கைகள் உள்ளன. அவற்றின் பின்னணியில் அப்போதைய இராணுவத்துறையினருக்கும் புளொட் அமைப்புக்கும் இந்த சம்பவத்தோடு ஏதாவது தொடர்பு உள்ளதா என்று தேடிப் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.- Vidivelli