ஈரானின் அணு உட்கட்டமைப்புகள் அழிக்கப்படவில்லை
அமெரிக்க ஊடகங்கள் தெரிவிப்பு
ஈரானின் அணுசக்தி திட்டம் “முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது” என ட்ரம்ப் அறிவித்த போதிலும் அதில் உண்மையில்லை என அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் அணு சக்தி நிலையங்களுக்கு ஏற்பட்ட சேதம் குறித்து பென்டகன் உளவுத்துறை மேற்கொண்ட ஆய்வுகளிலேயே இந்த உண்மை தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய 3 அணுசக்தி நிலையங்களை “பதுங்கு குழி” குண்டுகள் மூலம் அமெரிக்கா தாக்கியது. இந்த தாக்குதலுக்குப் பிறகும் ஈரானின் அணு கட்டமைப்புகள் பெரும்பாலும் “அப்படியே” இருப்பதாகவும், நிலத்தடிக்கு மேலே உள்ள கட்டமைப்புகள் மட்டுமே சேதமடைந்ததாகவும் பென்டகன் மதிப்பீடு செய்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன.
“இரண்டு அணுசக்தி நிலையங்களுக்கான நுழைவு வாயில்கள் சீல் வைக்கப்பட்டுவிட்டன, சில உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன அல்லது சேதமடைந்தன. ஆனால் நிலத்தடியில் ஆழமாக உள்ள பெரும்பாலான கட்டமைப்புகள் அப்படியே உள்ளன.” என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல் ஈரானின் அணுசக்தி திட்டத்தை “சில மாதங்கள்” பின்னுக்குத் தள்ளியதாக மதிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்குவது, சேதங்களை சரி செய்ய எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைப் பொறுத்தது என்றும் அமெரிக்க ஊடகங்களுக்கு பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈரான் கையிருப்பில் இருந்த செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் ஒரு பகுதி தாக்குதல்களுக்கு முன்னரே வேறு இடங்களுக்கு நகர்த்தப்பட்டுவிட்டதாக சிபிஎஸ்ஸிடம் உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை, ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து கசிந்துள்ள இந்த உளவுத்துறை தகவல்கள் குறித்த செய்திகளுக்கு டொனால்ட் டிரம்ப் பதிலளித்துள்ளார்.
தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், அமெரிக்க ஊடகங்களையும் மற்றும் அவர்கள் வெளியிட்ட தகவல்களையும் கடுமையாக சாடியுள்ளார்.
“போலி செய்தி வழங்கும் சிஎன்என், தோல்வியுற்ற நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையுடன் இணைந்து, வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான இராணுவத் தாக்குதல்களில் ஒன்றின் மாண்பை குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டது. டைம்ஸ் மற்றும் சிஎன்என் இரண்டும் பொதுமக்களால் விமர்சிக்கப்படுகின்றன” என்று அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல் குறித்து உளவுத்துறை மதிப்பீடு கசிந்திருப்பதை “தேசத் துரோகம்” என்று மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கான ட்ரம்பின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்காஃப் குறிப்பிட்டுள்ளார்.
“இது கொடியது, இது துரோகம். இது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். இதற்கு காரணமானவர்களே பொறுப்பேற்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
அனைத்து சேத மதிப்பீட்டு அறிக்கைகளையும் தான் படித்ததாகவும், அமெரிக்கா தாக்கிய மூன்று அணுசக்தி நிலையங்களும் “அழிக்கப்பட்டன” என்பதில் “சந்தேகமில்லை” என்றும் அவர் கூறினார்.
“ஃபோர்டோவில் 12 பதுங்கு குழி குண்டுகளை வெடிக்கச் செய்தோம். அது அதன் மையத்தை உடைத்தது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அது அழிக்கப்பட்டுவிட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே, நாம் இலக்கை அடையவில்லை என்னும் வகையில் வெளியாகும் அறிக்கை முற்றிலும் அபத்தமானது” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.- Vidivelli