எம்.ஐ.அப்துல் நஸார்
ஈரானில் உள்ள மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது கடந்த ஞாயிறன்று அமெரிக்க விமானப்படையும் கடற்படையும் தாக்குதல்களை நடத்தியிருந்தன. போர்டோ யுரேனியம் செறிவூட்டல் நிலையம், நடான்ஸ் அணுசக்தி நிலையம் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி தொழில்நுட்ப மத்திய நிலையம் ஆகியவையே தாக்குதலுக்கு இலக்கான இடங்களாகும். நார்த்ரோப் B -2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களால் சுமந்து செல்லப்பட்ட பதினான்கு GBU-57A/B MOP 30,000 இறாத்தல் கொண்ட (14,000 கிலோ) ‘பதுங்கு குழி அழிப்பு’ குண்டுகளாலும், நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட டோமாஹாக் ஏவுகணைகளாலும் குறிவைக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
ஒபரேஷன் மிட்நைட் ஹெமர் என்ற குறியீட்டுப் பெயர் வழங்கப்பட்ட இந்தத் தாக்குதல், ஜூன் 13 ஆந் திகதியன்று இடம்பெற்ற திடீர் இஸ்ரேலிய தாக்குதல்களுடன் ஆரம்பமாகிய முழு வீச்சிலான ஈரான்- – இஸ்ரேல் யுத்தத்தில் அமெரிக்காவின் முதல் தாக்குதல் நடவடிக்கை இதுவாகும்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் இந்த நடவடிக்கையை ‘மிகவும் வெற்றிகரமான தாக்குதல்’ என்று விவரித்தார். அமெரிக்க காங்கிரஸின் குடியரசுக் கட்சியினர் பெரும்பாலும் ட்ரம்பின் நடவடிக்கையை ஆதரித்தனர், அதே நேரத்தில் பெரும்பாலான ஜனநாயகக் கட்சியினரும் சில குடியரசுக் கட்சியினரும் இந்த நடவடிக்கையின் அரசியலமைப்புச் சட்டம், அதன் விளைவுகள் மற்றும் ஈரானின் பதில் குறித்து கவலை தெரிவித்தனர். சில உலகத் தலைவர்கள் ஈரானின் அணுசக்தி திட்டத்தை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கையை வரவேற்றனர், ஏனையோர் தாக்குதல்கள் அதிகரிப்பது தொடர்பில் கவலை தெரிவித்தனர்இ சில உலகத் தலைவர்கள் கண்டனங்களையும் தெரிவித்தனர். இந்தத் தாக்குதலுக்கு பதிலடியாக ஈரான் கட்டாரிலுள்ள அமெரிக்க தளத்தைத் தாக்கியது.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் இராணுவத் தலையீடு தொடர்பில் தான் பரிசீலனை செய்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் ஏலவே தெரிவித்திருந்தார்
கடந்த புதன்கிழமை (18) வெள்ளை மாளிகையின் தெற்கு பகுதி புல்வெளியில் நின்றுகொண்டு, ‘அடுத்த வாரம் பெரிய சம்பவங்கள் இருக்கும்’ எனத் தெரிவித்திருந்தார், ஈரானிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த ஆர்வமாக இருந்தனர் எனவும், இருப்பினும், அவர்கள் என்னைத் தொடர்பு கொண்டபோது, ‘பேசுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டது’ என தான் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
அமெரிக்காவின் 30,000 இறாத்தல் (13,000 கிலோ) பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டு மட்டுமே தெஹ்ரானின் அணுசக்தி திட்டத்தின் மையமாக நம்பப்படும் மற்றும் மலையில் ஆழமாக அமைக்கப்பட்டுள்ள போர்டோ எரிபொருள் செறிவூட்டல் மையத்தினை அழிக்கக்கூடிய ஒரே ஆயுதம் என அதிகாரிகளும் நிபுணர்களும் சிபார்சு செய்திருந்தனர்.
இந்த குண்டுகளை வைத்திருக்கும் ஒரேயொரு நாடு அமெரிக்கா, இது B-2 ரக குண்டுவீச்சு விமானங்களைப் பயன்படுத்தி குண்டு வீச்சினை நடத்தக்கூடியது. ஈரானுக்கு எதிராக இது பயன்படுத்தப்பட்டால், அது இஸ்ரேலின் சார்பாக ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் இடத்திலிருந்து ஈரானுக்கு எதிராக தீவிர தாக்குதல்களை நடத்துவதற்கான ஒரு பெரிய வாய்ப்பாக அமையும் என முன்னதாகவே சர்வதேச ஊடகமொன்று கட்டுரையொன்றினை வெளியிட்டிருந்தது.
பதுங்கு குழிகளை அழிக்கும் குண்டுகள் என்றால் என்ன?
பதுங்கு குழிகளை அழிக்கும் ‘பங்கர் பஸ்டர்’ என்பது வழக்கமான குண்டுகள் அடைய முடியாத ஆழமான நிலத்தடி இலக்குகளை அழிக்க வடிவமைக்கப்பட்ட குண்டுகளுக்கான பொதுவான சொல்.
அமெரிக்க இராணுவத்தின் மிகவும் சக்திவாய்ந்த பதுங்கு குழிகளை அழிக்கும் பங்கர் பஸ்டர் GBU-57 Massive Ordnance Penetrator ஆகும். 2,700 கிலோ (6,000 இறாத்தல்) வெடிமருந்து உள்ளடங்கலாக சுமார் 30,000 இறாத்தல் (13,600 கிலோ) எடையுள்ள இந்த துல்லிய-வழிகாட்டப்பட்ட குண்டு அதிக வலிமை கொண்ட உருக்கினால் ஆனது மற்றும் வெடிப்பதற்கு முன்பு 200 அடி (61 மீட்டர்) நிலத்திற்கடியில் ஊடுருவிச் செல்லும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.
ராடார்களுக்குச் சிக்காத அமெரிக்காவின் குண்டுவீச்சு விமானங்களான B-2 ஸ்பிரிட், தற்போது GBU-57 ஐ பயன்படுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்கப்பட்ட ஒரே விமானமாகும். மேலும் ஒரே நேரத்தில் இரண்டு குழிகளை அழிக்கும் குண்டுகளை சுமந்து செல்ல முடியும். அமெரிக்க விமானப்படை இது தொடர்பில் தெரிவிக்கையில், ஒரே விமானம் அல்லது பல விமானங்களால் பல குண்டுகளை தொடர்ச்சியாக வீச முடியும், இதனால் ஒவ்வொரு தாக்குதல்களிலும் ஆழமான துளைகள் ஏற்படும், இது ஒட்டுமொத்த தாக்கத்தை அதிகரிக்கும்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பதுங்கு குழிகளை அழிக்கும் ஏவுகணைகளை இஸ்ரேலும் பயன்படுத்துகிறது, இதில் GBU-28 மற்றும் BLU-109 ஆகியவை அடங்கும், அவை பொதுவாக F-15 போன்ற போர் விமானங்களிலிருந்து வீசப்படுகின்றன. இருப்பினும், இந்த ஆயுதங்கள் மிகவும் ஆழமாக நிலத்தைத் துளைத்துச் சென்று தாக்கக் கூடியனவல்ல, மேலும் ஈரானின் போர்டோ அணுசக்தி நிலையம் போன்ற மிகவும் பாதுகாப்பான தளங்களின் ஆழத்தை அடையும் திறன் கொண்டவை அல்ல. 2024 ஆம் ஆண்டில், ஹிஸ்புல்லாஹ் அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ருல்லாஹ்வை பெய்ரூட்டில் உள்ள அவரது நிலத்தடி தலைமையகத்தில் வைத்துக் கொல்ல இஸ்ரேல் தொடர்ச்சியான BLU -109 குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
ஈரானின் போர்டோ அணுசக்தி நிலையம் எவ்வளவு ஆழத்தில் உள்ளது?
தெஹ்ரானுக்கு தென்மேற்கே சுமார் 95 கிமீ (60 மைல்) தொலைவில் அமைந்துள்ள ஈரானின் போர்டோ செறிவூட்டல் நிலையம், வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பதுங்கு குழி அழிப்புத் தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, 80-90 மீட்டர் (260-300 அடி) நிலத்தடியில் ஒரு மலையின் ஓரத்தில் கட்டப்பட்டிருந்தது.
போர்டோ செறிவூட்டல் நிலையத்தின் கட்டுமானம் 2006 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது, மேலும் அது 2009 இல் செயல்பாட்டுக்கு வந்தது, அதே ஆண்டில் ஈரான் அதை உத்தியோகபூர்வமாக ஒப்புக்கொண்டது.
JCPOA எனப்படும் 2015 ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், போர்டோவில் செறிவூட்டலை நிறுத்தி, அந்த இடத்தை ஒரு ஆராய்ச்சி மத்திய நிலையமாக மாற்ற ஈரான் ஒப்புக்கொண்டது. இருப்பினும், 2018 இல் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகிய பின்னர், ஈரான் அந்த நிலையத்தில் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்கியது. ஈரான் தனது அணுசக்தி திட்டம் சிவில் நோக்கங்களுக்கானது என்று வலியுறுத்தியுள்ளது.
போர்டோ ஈரானிய மற்றும் ரஷ்யாவின் தரையிலிருந்து வான் ஏவுகணை அமைப்புகளால் பாதுகாக்கப்படுவதாக கூறப்படுகிறது, இருப்பினும் இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் அந்தப் பாதுகாப்புகள் ஏற்கனவே குறிவைக்கப்பட்டிருக்கலாம்.
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஈரானின் ஏவுகணை மற்றும் அணுசக்தி திறன்களை அகற்றுவதற்கான ஒரு பணியாக இந்த நடவடிக்கையினை வடிவமைத்துள்ளார், அவற்றை ‘தற்போதுள்ள அச்சுறுத்தல்கள்’ என விவரித்துள்ளார். போர்டோ ஒரு முக்கிய இலக்கு என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியிருந்தனர்.
‘இந்த முழு நடவடிக்கையும் … உண்மையில் போர்டோவை ஒழிப்பதன் மூலம் முடிக்கப்பட வேண்டும்,’ என்று அமெரிக்காவிற்கான இஸ்ரேலின் தூதர் யெச்சியல் லீட்டர் பொக்ஸ் நியூஸுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்திருந்தார்.
ஏனைய அணுசக்தி தளங்கள்
குறிவைக்கப்பட்டன
ஈரானின் மிகப்பெரிய அணுசக்தி தளமான நடான்ஸில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தின் நிலத்தின் மேல் பகுதியிலுள்ள நிர்மாணிப்புப் பகுதியை இஸ்ரேல் அழித்ததாக நம்பப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச அணுசக்தி அமைப்பின் (IAEA) கூற்றுப்படி, இதன் விளைவாக ஏற்பட்ட சக்தி இழப்பு, நிலையத்தில் உள்ள நிலத்தடி செறிவூட்டல் பகுதிகளுக்கும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
அணு மற்றும் இரசாயன
மாசுபாட்டிற்கான சாத்தியக்கூறுகள்
கடந்த திங்கட்கிழமை, ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்பின் தலைவரான ரபேல் க்ரோஸி, சேதமடைந்த நடான்ஸ் தளத்திலிருந்து கதிரியக்க மற்றும் இரசாயன மாசுபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகத் தெரிவித்தார்.
வியன்னாவில் நடந்த அவசரகால அமர்வில் பேசிய க்ரோஸி, ஈரானின் நடான்ஸ் மற்றும் இஸ்பஹான் அணுசக்தி நிலையங்களுக்கு வெளியே கதிர்வீச்சு அளவுகள் சாதாரணமாகவே இருப்பதாகக் கூறினார். இவை இரண்டும் இஸ்ரேலிய தாக்குதல்களால் பாதிக்கப்பட்டன. இருப்பினும், தொடர்ந்து வரும் இராணுவ நடவடிக்கைகள் கதிரியக்க வெளியீட்டின் அபாயத்தை அதிகரிக்கிறது என அவர் மேலும் எச்சரித்தார்.
போர்டோவ், ஈரானின் ஏழாவது பெரிய நகரமான கும் நகரிலிருந்து சுமார் 32 கிலோமீட்டர் (20 மைல்) தெற்கே அமைந்துள்ளது. இந்த நகரத்தில் சுமார் 1.4 மில்லியன் மக்கள் வாழ்வதோடு முக்கியமான சமய மற்றும் அரசியல் நிறுவனங்களை இந்த நகரம் கொண்டுள்ளது.- Vidivelli