ஜூன் 13 அன்று இஸ்ரேல் ஈரான் மீதான காரணமற்ற தாக்குதலைத் தொடங்கியதைத் தொடர்ந்து, ஈரானிய புரட்சிகரக் காவல்படை, இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி சக்திவாய்ந்த ஏவுகணைத் தாக்குதல்களை ஆரம்பித்தது. 12 நாட்கள் தொடர்ந்த இந்த மோதலில், இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் இராணுவத் தளங்கள் மற்றும் முக்கிய உட்கட்டமைப்புகள் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்தினர்.
ஜூன் 23 அன்று, ஈரானிய ஏவுகணைத் தாக்குதல்களின் 21 ஆவது அலை நடைபெற்றபோது, புரட்சிகரக் காவல்படை முதன்முறையாக, பலமுனை வெடிபொருள் கொண்ட பாலிஸ்டிக் ஏவுகணையை இஸ்ரேலிய இலக்குகளை நோக்கி ஏவியது. இதற்கு முன்னர், ஜூன் 18 அன்று ஈரான் ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணை வகையான ஃபத்தாவை பயன்படுத்தியிருந்தது.
ஃபத்தா ஏவுகணை சுமார் மாக் 13-15 வேகத்தில் தாக்குதல்களை நடத்தியது.இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு இது ஒரு பெரும் சவாலாக அமைந்தது.
பலமுனை வெடிபொருள் கொண்ட ஏவுகணைகள், ஒரே ஒரு தாக்குதலில் பல இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டிருப்பதால், பாரிய அச்சுறுத்தலை உருவாக்குகின்றன. இது இஸ்ரேலின் ஏற்கனவே அதிக சிரமத்திற்குள்ளாகியிருக்கும் ஏவுகணை எதிர்ப்பு ஆயுதக் களஞ்சியத்தை, மேலும் செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டுள்ளது.
பலமுனை வெடிபொருட்கள் பொருத்தப்பட்டதாக அறியப்படும் ஈரானின் ஒரே பாலிஸ்டிக் ஏவுகணை வகை “கைபர் ஷேகன்” (Kheibar Shekan) ஆகும். இது ஒரு பழைய வடிவமைப்பு என்பதால், ஏவுவதற்கு அதிக நேரம் எடுத்தாலும், குறிப்பிடத்தக்களவு எடை கொண்ட வெடிபொருட்களை ஏந்திச் செல்ல முடியும். ஒவ்வொரு பலமுனை வெடிபொருளும் ஒரு குறிப்பிட்ட துல்லியமான வழிகாட்டுதலுக்கு அமைய செயற்படும் திறன் வாய்ந்தவை. இது இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையம், ஒரு முக்கிய உயிரியல் ஆராய்ச்சி மையம் மற்றும் பல இராணுவக் கட்டளை மையங்கள் போன்ற முக்கிய தளங்களைத் தாக்க பயன்பட்டது. இஸ்ரேலில் ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்படுத்திய சேதங்களை அங்கிருந்து வெளிவந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காண்பிக்கின்றன. அங்கு கடுமையான ஊடக தணிக்கைகள் உள்ள போதிலும் இதுவரை வெளிவந்துள்ள காட்சிகளே ஈரானின் ஏவுகணைகளின் வீரியத்தையும் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் திறனையும் பறைசாற்றுகின்றன.
1970கள் முதல் கண்டம் விட்டு கண்டம் பாயும் தாக்குதல்களுக்கு பலமுனை வெடிபொருள் கொண்ட ஏவுகணைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் அத்தகைய வெடிபொருட்களுடன் கட்டமைக்கப்பட்டுள்ளன. ஆனால், அத்தகைய நடுத்தர தூர ஏவுகணைகளின் வளர்ச்சிக்கு ஒப்பீட்டளவில் மிகக் குறைவான முன்னுதாரணங்களே உள்ளன. சீனா, ரஷ்யா மற்றும் வட கொரியா ஆகியவை தங்களது நடுத்தர மற்றும் இடைப்பட்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் களஞ்சியங்களை மேம்படுத்துவதில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் நிலையில், இத்தகைய ஏவுகணைகளின் நன்மைகள், ஈரானின் கைபர் ஷேகன் ஏவுகணையின் போர் கால பயன்பாடு குறித்த ஆய்வுகளின் அடிப்படையில் மதிப்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தன்னிடமுள்ள முழுமையான ஏவுகணைப் பலத்தை பயன்படுத்தாத ஈரான்
இஸ்ரேலுடனான பதற்ற நிலை 12 நாட்கள் நீடித்த போதிலும், ஈரான் தன்னிடமிருந்த ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்தை முழுமையாகப் பயன்படுத்தவில்லை என இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஈரான் பிராந்தியத்தில் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்ட ஏவுகணை ஆயுதக் களஞ்சியங்களைக் கொண்டுள்ளது. இதில் குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட தூர அமைப்புகள் அடங்கும். அதிநவீன தாக்குதல் திறன்களுடன், இந்த ஏவுகணைகள் ஈரானின் மிக உயர்ந்த இராணுவ மூலோபாய பலமாக கருதப்படுகின்றன.
கிரூஸ் ஏவுகணைகள்:
ஈரான் அதிவேக, குறைந்த உயரத்தில் பறக்கும் கிரூஸ் ஏவுகணைகளை வைத்துள்ளது. இவற்றை கண்டறிந்து இடைமறிப்பது கடினம். இந்த ஏவுகணைகள், குறிப்பாக இஸ்ரேலுக்குள் உள்ள முக்கிய இராணுவத் தளங்களுக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலை உருவாக்குகின்றன.
கோரம்ஷார்-கைபர் (Khorramshahr-Khyber):
கோரம்ஷார் குடும்பத்தின் சமீபத்திய தலைமுறையான கைபர் ஏவுகணை, 2,000 கிலோமீட்டர் தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. இதற்கு சிக்கலான ஏவுகணைத் தளங்கள் தேவையில்லை. இவை மூலோபாய இலக்குகளை ஆழமாகத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது எந்தவொரு முன்கூட்டிய தாக்குதலுக்கும் அல்லது பதிலடி கொடுப்பதற்கும் ஏற்றதாகும்.
ஃபத்தா 2 (Fattah 2):
ஈரான் ஃபத்தா 2 எனப்படும் ஒரு மேம்பட்ட ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வைத்திருப்பதாகக் கூறுகிறது. இது நவீன வான் பாதுகாப்பு அமைப்புகளைத் தவிர்த்து, அதிக வேகத்தில் வளிமண்டலத்தில் நுழையக்கூடியது என்றும், 1,400 கிலோமீட்டர் தூரம் வரை செல்லக்கூடியது என்றும் ஈரான் தெரிவிக்கிறது.
காஸிம் (Qasem):
உயர் துல்லியத்திற்குப் பெயர் பெற்ற காஸிம், திட எரிபொருளால் இயங்கும் ஏவுகணையாகும். இது விரைவாக ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், ஈரான் படைகள் நீண்ட தயாரிப்புகள் இல்லாமல் உடனடி தாக்குதல்களை மேற்கொள்ள உதவுகிறது.
சுல்ஃபகார் கடற்படை(Zolfaqar Naval):
கடல்சார் நடவடிக்கைகளில், சுல்ஃபகார் ஏவுகணை 700-–1,000 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. இது இராணுவ மற்றும் வணிகக் கப்பல்களைத் தாக்கும் திறன் கொண்டது. இது எந்தவொரு முற்றுகையையும் எதிர்கொள்ள அல்லது கடல்வழி விநியோகப் பாதைகளைத் தாக்க ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.
செளமர் (Shumar):
சௌமர் ஏவுகணை 2,500 கிமீ தூரம் வரை செல்லும் திறன் கொண்டது. இது கண்டறிய முடியாத உயரத்தில் பறக்கும் திறன் கொண்டதால், வான் பாதுகாப்புகளை ஊடுருவி, தொலைதூர இலக்குகளைத் துல்லியமாக அடையும்.
ராஅத் (Ra’ad):
லேசான எடை கொண்ட மற்றும் விரைவாக ஆயுதமாக்கக்கூடிய ராஅத் ஏவுகணை, மின்னல் வேக மற்றும் திடீர் தாக்குதல்களுக்கு ஏற்ற ஆயுதமாகும். தரை வழியான போருக்கு இது மிக உகந்ததாகும்.
இதுவரை இந்த ஏவுகணைகளைப் பயன்படுத்த ஈரான் தயக்கம் காட்டுவது பலவீனம் அல்ல, மாறாக இராணுவ தந்திரோபாயத்தின் ஒரு பகுதி என்று இராணுவ வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த ஆயுதங்களை மோதலுக்குள் கொண்டு வருவது ஒரு முழு அளவிலான போருக்கு வழிவகுக்கும் அல்லது அமெரிக்கா தலைமையில் பரந்த சர்வதேச பிரதிபலிப்பைத் தூண்டும் என்பதை தெஹ்ரான் உணர்ந்துள்ளது.
மறுபுறம், இந்த ஆயுதக் களஞ்சியம் ஓர் அரசியல் மற்றும் இராணுவ அழுத்தக் கருவியாக இருக்கலாம். மோதலின் முடிவில் உணர்வுபூர்வமான இலக்குகளைத் தாக்க அல்லது பேச்சுவார்த்தை மேசையில் தனது நிபந்தனைகளை வலுவாக முன்வைக்க இந்த ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்று ஈரான் கருதுகிறது.
மொத்தத்தில், ஈரானின் ஏவுகணைத் திறன்கள் ஒரு வலுவான மூலோபாய சொத்தாக உள்ளன. இது பிராந்தியத்தில் அதன் செல்வாக்கையும், மோதல்களில் அதன் பதிலடி திறனையும் எடுத்துக்காட்டுகிறது.- Vidivelli