காசாவில் இஸ்ரேலிய இராணுவத்தினர் நேற்று புதன்கிழமை நடத்திய கடுமையான தாக்குதல்களில் 51 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் என்று காசா சுகாதார அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு காசா நகரத்தின் ஷெஜையா பகுதியில் நடந்த தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் தெரியவருகிறது.
மத்திய காசாவில் உள்ள நெட்சாரிம் பகுதியில் மனிதாபிமான உதவி பெற முயன்றபோது இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் மேலும் எட்டு பேர் கொல்லப்பட்டதாக சுகாதார தரப்பை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனிடையே, தெற்கு காசாவில் உள்ள ரஃபா நகருக்கு மேற்கே இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் மனிதாபிமான உதவியை பெற்றுக்கொள்வதற்காக காத்திருந்த மேலும் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.
அத்துடன், நேற்று புதன்கிழமை மத்திய காசா நகரில் இஸ்ரேலிய இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் சுகாதர அமைச்சு தெரிவிக்கிறது.
காசா நகரத்தின் மேற்கே பொதுமக்களை குறிவைத்து நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவம் ஐந்து பலஸ்தீனியர்களையும் கொன்றதாகவும், பலர் காயமடைந்ததாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அல்-நஸ்லாவில் இரண்டு வீடுகளின் இடிபாடுகளில் இருந்து மீட்புக் குழுவினர் மூன்று பாலஸ்தீனியர்களின் உடல்களை மீட்டனர் மற்றும் ஐந்து பேர் இடிபாடுகளுக்கு அடியில் காணாமல் போயுள்ளனர்.
டெய்ர் அல்-பலாவில் உள்ள இரண்டு வீடுகள் மற்றும் மத்திய காசாவில் உள்ள நுசைரத் அகதிகள் முகாம் மீதான மற்றொரு இஸ்ரேலிய தாக்குதலில் பத்து பாலஸ்தீனியர்களும் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.
கிழக்கு கான் யூனிஸில் உள்ள அபாசன் நகரில் இடிபாடுகளில் இருந்து ஒரு இளம் பலஸ்தீனியரின் உடலை மீட்புக் குழுவினர் மீட்டதாக மருத்துவ வட்டாரம் தெரிவித்துள்ளது.
உதவி விநியோகத்திற்காக காத்திருந்த இருவர் உட்பட மேலும் ஐந்து பலஸ்தீனியர்கள் கான் யூனிஸில் இஸ்ரேலிய தாக்குதல்கள் மற்றும் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அல்-பலாத்தில் உள்ள ஒமாரி மசூதிக்கு அருகில் மக்கள் கூடியிருந்ததை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் மேலும் இரண்டு பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், மேலும் மற்றவர்கள் காயமடைந்தனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.- Vidivelli