கெஹலியவின் மருந்து கொள்வனவு மோசடி: ஊழலால் சிதைந்த மக்கள் நம்பிக்கையை நீதித்துறையே மீட்டெடுக்க வேண்டும்!
எஸ்.என்.எம்.சுஹைல்
சுகாதாரத்துறை மீதான நம்பிக்கைக்கு குந்தகத்தை ஏற்படுத்தும் சம்பவமாக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பதவிக் காலத்தில் இடம்பெற்ற மருந்து கொள்வனவு மோசடியைக் குறிப்பிடலாம். மக்களின் உயிரை துச்சமாகக் கருதி பொறுப்புள்ள அமைச்சரும் அதிகாரிகளும் செய்த இந்த கொடூரமான செயற்பாடானது எந்தவகையிலும் மன்னிக்க முடியாததாகும்.
உயிர் காக்கும் மருந்துகளாகக் கருதப்படும் Human Immunoglobulin மற்றும் Rituximab போன்றவை, 144 மில்லியன் ரூபா அசர நிதி ஒதுக்கீட்டின் மூலம் அவசர கொள்முதல் திட்டத்தின் கீழ் வாங்கப்பட்டாலும், அவை தரமற்றதும், ஆபத்தானதும் என நிரூபிக்கப்பட்டது.
இந்த மோசடி சம்பவம் அரச திணைக்களங்களின் பொறுப்பின்மை, அரசியல் அதிகாரத்தின் துஷ்பிரயோகம் மற்றும் மக்கள் நலனை புறக்கணித்த நிர்வாகத்தின் வெளிப்படையான எடுத்துக்காட்டாக மாறியுள்ளது. இதன் அடிப்படையில் பல உயர் அதிகாரிகள், கொள்முதல் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகள் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
2022 ஒக்டோபர் – 2023 மார்ச்
IVIG (Human Immunoglobulin) மற்றும் Rituximab ஆகிய மருந்துகள் அவசர ஒப்பந்தத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டது. நிதி: ரூ. 144 மில்லியன் (திட்டமிடப்படாத அவசர செலவீடு).
2023 மே – ஜூலை
மருந்துகள் நோயாளிகளுக்கு அரச வைத்தியசாலைகளில் பயன்பாட்டிற்கு வந்தது. சில நோயாளிகளில் பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டது.
2023 ஆகஸ்ட் – நவம்பர்
கொள்வனவு செய்யப்பட்ட மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. ஆரம்ப பரிசோதனைகளில் அந்த மருந்தில் பாக்டீரியா கலந்த நீர், சேலைன் மட்டுமே இருப்பதாக வெளிப்படுத்தப்பட்டது.
2023 டிசம்பர்
மருந்து விநியோகஸ்தர்களுக்கும், கொள்முதலுடன் தொடர்புடைய அதிகாரிகளுக்கும் எதிராக குற்றப் புலனாய்வு பிரிவின் விசாரணைகள் ஆரம்பமாகின.
2024 பெப்ரவரி 1
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அரச மருந்து விநியோக நிறுவனம் மற்றும் NMRA அதிகாரிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.
2024 பெப்ரவரி 2–5
அமைச்சர் கெஹலிய கைது
2024 மார்ச்
அரசு பொது நிதி மோசடியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
2024 டிசம்பர்
கெஹலிய ரம்புக்வெல்லவின் சொத்துகள் மற்றும் வங்கி கணக்குகள் முடக்கம்.
இந்நிலையில், 2023 செப்டம்பர் 6 ஆம் திகதி, அப்போதைய எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் சுகாதார அமைச்சர் கெஹலியவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
45 எதிரணி பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரேரணையை கையெழுத்திட்டு சமர்ப்பித்தனர். மூன்று நாட்கள் இவ்விவகாரம் விவாதத்திறகு எடுத்துக்கொள்ளப்பட்டதுடன் 2023 செப்டம்பர் 8 ஆம் திகதி, நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெற்றது.
பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும், பிரேரணைக்கு எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 38 உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
சுகாதார அமைச்சர் கெஹலிய மீது நம்பிக்கையில்லை என (அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக) அன்றைய பாராளுமன்றில் அங்கம் வகித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.ஏ.ஹலீம், பைஸல் காஷிம், இம்ரான் மகரூப், இம்தியாஸ் பாக்கிர் மாக்கார், இஷாக் ரகுமான், கபீர் ஹாஷிம், எம்.எஸ்.தௌபீக், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுதீன் ஆகியோர் வாக்குகளை பிரயோகித்தனர்.
கெஹலிய மீதான நம்பிக்கையை வெளிப்படுத்திய (அதாவது நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராக) முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர். ஏ.எல்.எம். அதாவுல்லாஹ், அலி சப்ரி ரஹீம், காதர் மஸ்தான், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.யூ.எம்.அலிசப்ரி, மர்ஜான் பழீல், நஸீர் அஹமட் ஆகியோர் கெஹலியவை காப்பாற்றுவதற்கு கை உயர்த்தினர்.
இதுபோக, ஏ.எச்.எம்.பௌஸி, எச்.எம்.எம்.ஹரீஸ், மொஹமட் முஸம்மில், எஸ்.எம்.எம்.முஸர்ரப் ஆகிய நால்வரும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.
எவ்வாறாயினும் 113 அறுதிப் பெரும்பான்மையுடன் அமைச்சர் கெஹலிய பாதுகாக்கப்பட்டார். அதன்பின்னர் ‘சுகாதாரத் துறை முன்னேறியுள்ளது’ என்றவாறான கருத்தை முன்வைத்தார். எவ்வித மனசாட்சியும் குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அவர் பேசிய விடயங்கள் அவர் மீது அருவருப்பையே தூண்டுகின்றது. ஏனெனில், அப்பாவி மக்களின் உயிரை குடிக்கும் காரியத்தை செய்துவிட்டு மக்கள் முன் ஆடிய நாடகங்கள் வெளிப்படையானவை.
கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையில், 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதவர்கள் கூட கெஹலியவுக்கு துணைபோனவர்களாகவே கருதப்படுவர்.
கொள்கை ரீதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறுவது, தவறுகளை சுட்டிக்காட்டவும், பொறுப்புக்கூறலைக் கோரவும் தவறுவது வெறும் அரசியல் அலட்சியம் மட்டுமல்ல; அது பொதுமக்கள் நம்பிக்கைக்கு ஒரு துரோகம் என சட்டத்தரணி லிகிணி பெர்னாண்டோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நீதிமன்ற விசாரணைகள் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளன. குறிப்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் மேலும் 12 சந்தேக நபர்களின் மேற்பார்வையின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட Human Immunoglobulin எனப்படும் சிகிச்சைக்கான நோயெதிர்ப்பு மருந்து தொகுதியில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பற்றீரியா கலந்த நீர் காணப்பட்டமை உறுதியாகியுள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஜேர்மன் ஆய்வகம், இலங்கையின் பொது சுகாதார துறையில் முன்னர் விநியோகிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மற்றும் Rituximab ஆகிய இரண்டு மருந்துகளும் தரமற்றவை மற்றும் ஆபத்தானவை என்றும், அவற்றில் எந்த மருத்துவ குணங்களும் இல்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
Human Immunoglobulin குப்பிகளில் மனித ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பற்றீரியா கலந்த நீர் இருந்ததாகவும், புற்றுநோய் மருந்தான Rituximab இல் சேலைன் கரைசல் மட்டுமே இருந்ததாகவும், புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கக்கூடிய எந்தவொரு செயலில் உள்ள கூறுகளும் அதில் இல்லை என்றும் அம்பலமானது.
மருந்து விநியோக நிறுவனத்தின் உரிமையாளரான முதல் சந்தேக நபர் சுதத் ஜனக பெர்னாண்டோ, ஆய்வக பகுப்பாய்வின்படி எந்த மருத்துவ மதிப்பும் இல்லாத மருந்துகளை இலங்கையின் மருத்துவமனைகளுக்கு விநியோகித்துள்ளார் என்பதை நீதிமன்ற விசாரணை வெளிப்படுத்தியது.
அத்துடன், புற்றுநோய் மருந்தான Rituximab இல் புற்றுநோய்க்கு சிகிச்சையளிக்கத் தேவையான அத்தியாவசிய புரதக் கூறுகள் இல்லை, மேலும் அது சோடியம் குளோரைட்டு – வெறும் சேலைன் கரைசலைக் கொண்டிருந்தது.
எட்டாவது சந்தேக நபரான முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்தின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் 144.74 மில்லியன் ரூபாவை செலவிட்டு, விஷமான பற்றீரியா கலந்த நீரையும் சாதாரண சேலைனையும் மருந்து என்ற போர்வையில் கொள்முதல் செய்துள்ளது.
சிகிச்சைக்கான மருந்துகளுக்குப் பதிலாக இரசாயன பிறப்புக்கட்டுப்பாட்டுப் பொருட்களுக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு வகைப்படுத்தல் குறியீட்டின் கீழ் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே இது தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் அண்மையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் வாக்குமூலத்தின்படி, அமைச்சரவைப் பத்திரத்திற்கான முழுப் பொறுப்பும் சம்பந்தப்பட்ட அமைச்சரையே சாரும் என்று கூறப்பட்டது.
இதனிடையே, கடந்த வாரம் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஏனைய சந்தேகநபர்கள் தங்களது பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததை தொடர்ந்து, அவர்களை விடுவிப்பதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மருந்து கொள்வனவிலான மோசடி, இலங்கை அரசின் நிர்வாக துறைகளில் ஊழல் எவ்வளவு ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதை தெளிவாகக் காட்டும் கொடூரமான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
உயிர்காக்கும் மருந்துகளைத் தரமின்றி கொள்வனவு செய்து அவை நோயாளிகளுக்கு வழங்கப்பட்டமையானது அதிகார தரப்பின் பொறுப்புகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளையே சுட்டிக்காட்டுகிறது.
இந்த ஊழலைக் கவனத்தில் கொண்டு, பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை அரசியல் ரீதியிலானதென்றாலும் மக்களின் குரலை எடுத்தியம்பியது. அத்தோடு, நீதிக்கான கோரிக்கையையும் முன்வைத்தது. ஆனால், அது தோற்கடிக்கப்பட்டமையானது நாட்டின் வீழ்ச்சியடைந்த அரசியல் போக்கையே காட்டிநின்றது. கடந்த அரசாங்கம் வீழ்த்தப்படுவதற்கு இவ்விவகாரம் முக்கிய காரணம் எனலாம்.
இந்நிலையில் நடைபெறும் நீதிமன்ற விசாரணைகள், பொது நலனுக்காக நீதியை நிலைநாட்டும் வாய்ப்பாக இருக்க வேண்டும். இது தனிப்பட்ட அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் சிக்கிவிடலாகாது. எதிர்காலத்தில் எந்த அரசியல்வாதியும் பொதுப்பணிகளில் பொறுப்பின்றி செயல்பட முடியாது என்ற ஒரு வலிமையான செய்தியை இது சொல்ல வேண்டும்.
நாடே நம்பும் சுகாதாரத் துறையின் நம்பிக்கையை கட்டியெழுப்பும் தருணத்தில், உண்மையான சட்டம், நீதி வெல்ல வேண்டும். இதுவே ஊழலால் நொறுங்கிச் சிதைந்துபோயுள்ள மக்கள் நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கான ஒரே வழியாகும்.-Vidivelli