அச்சுறுத்தலுக்கு ஈரான் ஒருபோதும் அடிபணியாது
அமெரிக்கா தலையிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும் ஈரானின் ஆன்மிகத் தலைவர் கொமைனி எச்சரிக்கை
ஈரானுக்கும் இஸ்ரேலுக்குமிடையிலான போர் ஆறாவது நாளாக நேற்றும் தொடர்ந்த நிலையில், ஈரான் ஒருபோதும் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது என அந்நாட்டின் அதி உச்ச ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா சையத் அலி கொமைனி சூளுரைத்துள்ளார்.
ஈரான் மீது திணிக்கப்படும் போருக்கோ அல்லது திணிக்கப்படும் சமாதானத்துக்கோ ஈரான் ஒருபோதும் அடிபணியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தஸ்னிம் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அவரது தொலைக்காட்சி உரையில், “இந்த தேசம் திணிப்புகளுக்கு முன்னால் யாருக்கும் அடிபணியாது,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னர் வெளியிட்ட கருத்துக்களைச் சுட்டிக்காட்டிய கொமைனி, “அமெரிக்கர்கள் ஒரு விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு அமெரிக்க இராணுவத் தலையீடும் சந்தேகத்திற்கு இடமின்றி ஈடுசெய்ய முடியாத விளைவுகளை ஏற்படுத்தும்,” என்றும் அவர் கடுமையாக எச்சரித்தார்.
“ஈரான், அதன் மக்கள், அதன் நீண்ட வரலாற்றை உண்மையாகப் புரிந்துகொண்ட ஞானமுள்ளவர்கள், இந்த தேசத்திடம் அச்சுறுத்தும் மொழியில் ஒருபோதும் பேச மாட்டார்கள். ஈரான் ஒருபோதும் அடிபணியாது,” என நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலால் தொடங்கப்பட்ட முன்னறிவித்தலின்றிய இந்தப் போர், ஈரானில் பல உயர்மட்ட இராணுவத் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் மற்றும் பொதுமக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு வழிவகுத்தது. கடந்த ஆறு நாட்களாக இஸ்ரேலின் தாக்குதல்கள் இந்த தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இதற்குப் பதிலடியாக ‘உண்மை வாக்குறுதி 3’ எனும் பதில் தாக்குதலை ஈரான் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கியது. இது வரை சுமார் 11 மேற்பட்ட கட்டங்களாக இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம் இஸ்ரேலின் பல மூலோபாய மற்றும் முக்கியமான இராணுவ உளவுத்துறை இலக்குகள் தாக்கப்பட்டன. பொது மக்களின் வாழிடங்களும் பலத்த தாக்குதலுக்கு இலக்காகின. இது இஸ்ரேலுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலியர்கள் நிலத்தடி சுரங்கங்களில் பெரும் அச்சத்துடன் மறைந்து வாழ்ந்து வருவதுடன் நாட்டை விட்டும் வெளியேறி வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று மாலை வரையான மோதல்களில் ஈரானில் 240 பேரும் இஸ்ரேலில் 20 பேரும் உயிரிழந்துள்ளதாக அல் ஜெஸீரா செய்தி வெளியிட்டுள்ளது.