மத்திய கிழக்கு பிராந்தியத்தில் இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது உலக நாடுகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில், அப்பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்ட அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. குறிப்பாக, எஞ்சியிருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக, அணு ஆயுதப் பயன்பாட்டின் ஆபத்து குறித்து உலகளாவிய ரீதியில் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.
இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான அண்மைய மோதல்கள், ஏற்கனவே நிலையற்றிருக்கும் மத்திய கிழக்கில் ஒரு பரந்த போராக வெடிக்குமோ என்ற அச்சத்தை அதிகரித்துள்ளன. இரு தரப்பிலும் நடந்த தாக்குதல்கள், உயிரிழப்புகள் மற்றும் சொத்து சேதங்கள், பதற்றமான சூழலை மேலும் உக்கிரப்படுத்தியுள்ளன. இந்த மோதல் ஒரு பெரும் போராக மாறினால், அதன் விளைவுகள் அப்பிராந்தியத்திற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த உலகளாவிய சமூகத்திற்கும் பேரழிவை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
தற்போது இஸ்ரேலும் ஈரானும் மாத்திரம் மாறி மாறி தாக்குதல்களை நடத்திக் கொண்டுள்ள நிலையில் அமெரிக்காவும் அதில் பங்கேற்குமானால் விளைவுகள் பேரழிவாகவே மாறும். ஈரான் ஒருபோதும் இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் அச்சுறுத்தல்களுக்கு அடிபணியாது என அந்நாட்டின் அதி உச்ச ஆன்மிகத் தலைவர் ஆயதுல்லா சையத் அலி கொமைனி சூளுரைத்துள்ள நிலையில், கொமைனியைக் கொல்வதற்கான திட்டங்களை அமெரிக்காவும் இஸ்ரேலும் ஆராய்ந்துள்ளதாக ஊடகங்கள் கூறுகின்றன. அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அண்மைய அறிக்கைகள் நல்ல சமிக்ஞைகளைத் தருவதாகத் தெரியவில்லை.
எந்தவித காரணங்களுமின்றி, முன்னறிவித்தலுமின்றி தனது தேசத்தின் மீது நடாத்தப்பட்ட தாக்குதலுக்காக பதிலடி கொடுப்பதற்கான முழு உரிமையும் ஈரானுக்கு உள்ளது. அதனை ஈரான் செய்துள்ளது. ஆனால் இதனை மேலும் நீடித்து முழு அளவிலான போராக மாற்றி மத்திய கிழக்கில் பெரும் அமைதியின்மையைத் தோற்றுவிக்க ஆயுத வியாபாரிகள் பெரும் பிரயத்தனத்தை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு எந்த நாடும் துணைபோக முடியாது.
இந்த மோதலில் மிகவும் அச்சுறுத்தும் அம்சம் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் பற்றியதாகும். இஸ்ரேலும், அதன் ஆதரவு நாடுகளும், அத்துடன் ஈரானும் தமக்கு அணுசக்தித் தொழில்நுட்பம் உள்ளதாகக் கூறிவரும் நிலையில், எந்தவொரு கண நேர தவறான முடிவும் மனிதகுலத்திற்கே ஈடுசெய்ய முடியாத சேதத்தை விளைவிக்கும். ஹிரோஷிமா மற்றும் நாகசாகி போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்கப்பட வேண்டும் என்பதே உலக மக்களின் ஒருமித்த குரலாக உள்ளது. அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், மில்லியன் கணக்கான அப்பாவி பொதுமக்கள் உயிரிழப்பதுடன், பலர் வாழ்நாள் முழுவதும் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாவர். கதிர்வீச்சின் தாக்கம் தலைமுறைகளையும் பாதிக்கும்.
எனவே, அனைத்துத் தரப்பினரும் நிதானத்துடனும், பொறுப்புணர்வுடனும் செயல்பட வேண்டும். பரஸ்பர அச்சுறுத்தல்களையும் தாக்குதல்களையும் விடுத்து, பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்பி, இராஜதந்திர ரீதியிலான தீர்வுகளைக் காண முன்வர வேண்டும். ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச அணுசக்தி முகவரகம் போன்ற சர்வதேச அமைப்புகளின் தலையீடு மற்றும் வழிகாட்டுதல் தற்போதை காலகட்டத்தில் மிகவும் அவசியமானதாகும்.
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதும், அணு ஆயுதப் பயன்பாட்டைத் தடுப்பதும் சர்வதேச சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். மனித உயிர்களைக் காப்பதும், எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதும் நமது அனைவரினதும் கடமையாகும். இந்த ஆபத்தான சூழலில், போரைத் தவிர்த்து அமைதி வழியைத் தேர்ந்தெடுப்பதே விவேகமான முடிவாக அமையும். இதனையே இலங்கையும் சம்பந்தப்பட்ட தரப்புகளிடம் வலியுத்த வேண்டும்.- Vidivelli