2. தடைகள் (Obstruction) :
இது பற்றி முன்னரும் குறிப்பிட்டோம். குறிப்பிட்ட இணையதளம் அல்லது சமூக ஊடக தளம் எமக்கான நுழைவினை இலகுவாக வழங்கி ஒரு கட்டத்தில் இலகுவாக வெளியேற முடியாதபடி செய்து விடுவதை குறிக்கும். இவ்வாறான அனுபவங்களை நம்மில் பலரும் சந்தித்திருக்க முடியும். சேவையொன்றை பெற்றுக் கொள்வதற்காக குறிப்பிட்ட இணையதளத்தில் பிரவேசிக்கின்ற பொழுது எமக்கான நுழைவு மிக இலகுவாக கிடைக்கும்.
ஆனால், அந்த சேவையை பெற்றுக் கொண்டிருக்கும் போது அல்லது சேவை நிறைவு பெறுகின்ற போது, அந்த தளத்திலிருந்து எமக்கு வெளியே செல்வது சிரமமாக இருக்கும். இவ்வாறு சிரமப்பட்ட நிலையில் குறித்த தளத்தில் நாம் தரித்து நிற்கையில் அத்தளங்கள் வர்த்தக விளம்பரங்களை எமது பார்வைக்கு கொண்டு வருகின்றன. ஏதோ ஒரு நிறுவனத்தின் புதிய சேவை ஒன்றை அறிமுகப்படுத்தி வைக்கின்றன. மிக நீண்ட நாட்களாக நாம் தேடிக் கொண்டிருந்த ஒரு புத்தகத்தை, திரைப்படத்தை, ஒரு தகவலை நம் முன்னே கொண்டு வருகின்றது.
சேமித்து வைக்க முடியாத நிலை: இது இணையதளங்கள் தனது சேவைகளை வழங்கி, பயன்பாட்டாளரின் நேரத்தை பெரிய அளவில் பெற்றுக் கொண்ட பின்னர், குறித்த நபர் பயன்படுத்த முற்படுகின்ற உள்ளடக்கத்தை இணையதளத்திலோ அல்லது அவருடைய பிரத்தியேக கணினியிலோ சேமித்து வைக்க முடியாத நிலை உருவாக்கி விடுவதை குறிக்கின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இணையதளத்தை பயன்படுத்திக் கொண்டிருப்பவர் அதிக நேரத்தை செலவிட வேண்டி ஏற்படுகிறது. குறித்த பத்திரத்தை தனக்கு தேவையான இடத்தில் சேமித்து வைத்துக் கொள்வதற்காக இணையதளத்தில் உள்ள பல்வேறு அம்சங்களை தட்டிப் பார்க்க நேரிடுகின்றது. ஏதாவது ஒரு முறையை தேடுகின்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குறித்த இணையதளமானது ஒன்றில் கட்டணம் செலுத்த கோரும், அல்லது விளம்பரங்களை கண்ணெதிரே கொண்டுவரும்.
முன்னேற்றத்தின் வேகத்தை குறைத்தல் (Slow Progress) : இது இணையதளத்தை பயன்படுத்துகின்றவர்கள் குறிப்பிட்ட ஒரு தகவலை பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்ற போது சிறிது சிறிதான தடைகளை ஏற்படுத்துவதை குறிக்கும். குறிப்பிட்ட இணையத் தளம் சிறு தடைகளை ஏற்படுத்தும் போது அதனை பயன்படுத்துகின்றவர் ஏதோ ஒரு வகையில் அவற்றை எதிர்கொண்டு வெற்றிகரமாக முன்னோக்கிச் சென்று தனது தேவையை முழுமையாக நிறைவேற்ற முயற்சிப்பார். இந்த பயணத்தில் தொடர்ந்தும் தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். குறித்த சேவை நிறைவடைவதற்கு சற்று நேரம் இருக்கின்ற போது இணையதளத்தில் முன்வைக்கப்படுகின்ற தடைகள் சற்று கடினமாகும். இச்செயல்பாடு காலதாமதத்தை ஏற்படுத்தும். இத்தகைய ஏற்பாடுகள் வேண்டுமென்றே இணையதளத்தை பயன்படுத்துபவரின் நேரத்தை பறித்தெடுப்பதற்காக மாத்திரமன்றி குறிப்பிட்ட சேவையை காட்டி காட்டி அவரது கவனத்தை திசை திருப்பவும் உருவாக்கப்படுகிறது.
நிலையாக நீக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல் : இது இணையதளத்தை அல்லது சமூக ஊடகத்தை பயன்படுத்துகின்றவர்கள் தமது கணக்கினை நிலையாக நீக்கிக் கொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்காமல் குறித்த பயன்பாட்டாளரை தாமதிக்க வைத்துக் கொள்வதை குறிக்கும். இந்த செயற்பாட்டின் போது குறிப்பிட்ட நபர் தனது கணக்கினை நிலையாக நீக்கிக் கொள்ள வேண்டுமானால் மேலதிகமான தகவல்களை வழங்க வேண்டி ஏற்படும். Facebook போன்ற தளங்களில் இத்தகைய தன்மையை காணலாம். இவை யாவும் பயன்பாட்டாளர்களின் தகவல்களை நிர்ப்பந்தத்தின் பேரில் பெற்றுக் கொள்வதற்கான சில ஏற்பாடுகளாகும்.
3. தடையின்மை (Seamlessness) : இது இணையதளங்களும் சமூக ஊடக தளங்களும் சில சேவைகளை பெற்றுக் கொள்வதை மிகவும் இலகுவாக ஆக்கியுள்ளதைக் குறிக்கின்றது. உதாரணமாக, சமகாலத்தில் பல்வேறு தளங்களில் ஒரே தகவலை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. உதாரணத்திற்கு பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படுகின்ற ஒரு விடயம் ஏககாலத்தில் தன்னுடைய Twitter கணக்கிலும் வெளி வர முடியும். இன்ஸ்டாகிராமில் பதிவிடுகின்ற ஒரு விடயத்தை ஏக காலத்தில் இணையதளத்திலும் வெளியிடலாம். இது சமூக ஊடகங்களில் தனது கருத்துக்களை மிக வேகமாக பரப்ப வேண்டும் என்ற ஆர்வமுடையவர்களுக்கு மிகுந்த சௌகரியத்தை ஏற்படுத்தி விடுகிறது. சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்டுள்ள சில வீடியோக்கள் மற்றும் உள்ளடக்கங்கள் அத்தளங்களை பயன்படுத்துபவர்களின் எந்தவிதமான முயற்சிகளும் இல்லாமல் தானாக இயங்குவது (Autoplay) மற்றுமொரு ஈர்த்திழுக்கும் உத்தியாகும். உதாரணமாக, டிக் டாக் கணக்குகளை பயன்படுத்துகின்றவர்கள் வீடியோக்களை ஸ்க்ரோல் செய்கின்றபோது வீடியோக்கள் எந்த தங்கு தடையும் இன்றி தாமாகவே இயங்க ஆரம்பிக்கின்றன. மேலிருந்து கீழ்நோக்கியோ அல்லது கீழிருந்து மேல் நோக்கியோ வேகமாக நகர்கின்றன. Facebook ரீலும் இத்தகைய தன்மையை கொண்டது. இவை யாவும் சிறுவர்களை மிகவும் கவரக்கூடிய வகையில் உள்ளன. சிறுவர்கள் சமூக ஊடக கணக்கிலிருந்து விடுபடாமல் அதிக நேரம் செலவிடுவதை இத்தகைய உத்திகளே தூண்டுகின்றன. எனவே, பெற்றோர், பாடசாலை நிர்வாகிகள், குழந்தை பராமரிப்பாளர்கள், குழந்தைகள் மீது பழி சுமத்தும் போது குழந்தைகளை உளவியல் ரீதியாக பாதிக்கின்ற தொழில்நுட்பத்தின் உருவாக்கம் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லையற்ற நிலையில் ஓடவிடுதல் (Infinite Scroll) : இது இணையதளங்களின் அல்லது சமூக ஊடக தளங்களின் உள்ளடக்கங்கள் எந்தவிதமான முடிவுப் புள்ளியும் இல்லாமல் தானாகவே இயங்கிக் கொண்டிருப்பதை குறிக்கும். குறித்த தளத்தினை பயன்படுத்திக் கொண்டிருப்பவர் சுய சிந்தனையுடன் குறிப்பிட்ட உள்ளடக்கத்தை நிறுத்தினாலே தவிர அது தானாக ஓடிக்கொண்டே இருக்கும். இத்தகைய நிலையை சமூக ஊடக தகவல் ஓடங்களில் காணலாம் (feeds). எமது நுகர்வு வரலாற்றுக்கு ஏற்ப குறிப்பிட்ட ஓடங்களில் வெளிவருகின்ற தகவல்கள் ஓய்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருப்பதன் மூலம் எமது அவதானத்தை பெற்றுக் கொள்கின்றன. இது சிறுவர்களை அதிகம் ஈர்த்துக்கின்றது.
பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட சேவையொன்றினை பெற்றுக் கொள்வதற்காக கட்டணம் செலுத்தக் கோரும் பொத்தான்கள் மறைவில் வைக்கப்பட்டிருக்கும். சேவையின் ஒரு பகுதியை பெற்றுக் கொண்ட பின்னர் மறைவில் இருக்கின்ற பொத்தான் வெளிப்பட்டு, தங்கு தடை இல்லாமல் மிக இலகுவாக கட்டணத்தை செலுத்துவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டும். இது வர்த்தக ரீதியாக பணம் சம்பாதிப்பதற்கான ஒரு உத்தியாகும்.
இணையதளங்களும் சமூக ஊடக தளங்களும் இவ்வாறான தந்திரோபாயமிக்க சூழலை வழங்கும் போது சிறுவர்கள் வயது முதிர்ந்தவர்களிடம் காணப்படுகிற முதிர்ச்சியுடன் செயற்பட முடிவதில்லை. சிறுவர்களின் நலிவுற்ற தன்மையை தொழில்நுட்ப நிறுவனங்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்தி விடுகின்றன. எந்த ஒரு சிக்கலான பிரச்சினைக்கும் இலகுவாக தீர்வு காணவே சிறுவர்கள் விரும்புகின்றார்கள். எனவே, அதிகநேரம் செலவிட்டு சிரமப்படுவதை விட ஏதோ ஒரு வகையில் தந்தையின் அல்லது தாயின் அல்லது குடும்ப உறுப்பினர்களின் கடனட்டையை பயன்படுத்தி சிறு தொகை பணத்தையாவது செலுத்தி, சேவையினை பெற்றுக் கொள்வதை சிறுவர்கள் விரும்புகிறார்கள்.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி எந்த சந்தர்ப்பத்தில் ஒரு பொருளை கொள்வனவு செய்யக்கூடும் அல்லது கொள்வனவு செய்வதற்கான தீர்மானத்தை எடுக்கக் கூடும் என்பதை சமூக வலைத்தளங்கள் மிகத் துல்லியமாக அறிந்து வைத்துள்ளன. எனவேதான், தீர்மானம் மிக்க சந்தர்ப்பங்களில் வர்த்தக சேவைகளை எம் கண்முன்னே அவை கொண்டு வருகின்றன. சமூக ஊடகங்களிலும் ஏனைய இணையதளங்களிலும் காணப்படுகின்ற Accept, like, agree, share, post, read போன்ற தூண்டுதல் பொத்தான்கள் பார்வைக்கு சிறியதாக இருந்தாலும் அவற்றின் செயற்பாடுகள் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அறிவித்தல்கள் (Notifications)
இலத்திரனியல் கருவிகளிலும் சமூக ஊடக கணக்குகளிலும் அறிவித்தல்கள் (notifications) எமக்கு வருவதுண்டு. முக்கியமான தகவல்கள், சேவைகள் எம்மை வந்து சேர வேண்டிய உரிய சந்தர்ப்பத்தில் அத்தகைய அறிவித்தல்கள் தோன்றி மறையும். சமூக ஊடகங்கள் எதிர்பாராத நேரங்களில் தோன்றி எமது கவனத்தை திசை திருப்பாதிருக்க இவற்றை நிறுத்தி வைத்துக் கொள்ள முடியும். ஆனால் அது முழுமையான தீர்வு கிடையாது.
ஏனென்றால், அறிவித்தல் பொத்தான்களை தடுத்து வைத்திருக்கின்ற பொழுது கட்டாயமாக எம்மை வந்து சேர வேண்டிய முக்கியமான தகவல்களும் மறைக்கப்பட்டு விடுகின்றன. இவ்வாறான சந்தர்ப்பங்களில் அவரவர் தத்தமது இணைய நுகர்வு நடத்தைக்கு ஏற்ப அறிவித்தல் பொத்தான்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
(தொடரும்…)
-Vidivelli