மதீனாவிலிருந்து றிப்தி அலி
பாரிய பிரச்சினைகள் எதுவுமின்றி இந்த வருடத்திற்கான (2025) ஹஜ் கடமைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. ஐந்து நாட்களைக் கொண்ட இஸ்லாத்தின் ஐந்தாவதும் இறுதியுமான ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக 1,673,230 யாத்திரிகர்கள் அரபா, முஸ்தலிபா மினா மற்றும் மக்கா ஆகிய நகரங்களில் ஒன்றுகூடினர்.
கடந்த 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரை இடம்பெற்ற இந்த ஹஜ் கடமைகளில் 1,506,576 வெளிநாட்டு ஹாஜிகளும் 166,654 உள்நாட்டு ஹாஜிகளும் பங்கேற்றிருந்தனர். இதில் 877,841 ஆண் ஹாஜிகளும் 795,389 பெண் ஹாஜிகளும் உள்ளடங்குகின்றனர்.
சுமார் 170க்கு மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த ஹாஜிகளில் 66,465 பேர் தரை வழியாகவும் 5,094 பேர் துறைமுகம் வழியாகவும் 1,435,017 பேர் விமான நிலையங்கள் ஊடாகவும் புனித மக்கா நகரை வந்தடைந்தனர்.
ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் டொகோலோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த மூன்று பெண்மணிகள், இந்த வருட ஹஜ்ஜின் போது குழந்தைகளை பிரசவித்துள்ளனர். இதில் டொகோலோ பெண்மனி அரபா தினத்தன்று குழந்தையொன்றினை பிரசவித்தமை குறிப்பிடத்தக்கது.
ஹாஜிகளுக்காக 94,000க்கு அதிகமான பணியாளர்கள் இந்த வருடம் பணியாற்றியுள்ளனர். அதேவேளை, 200,000க்கு மேற்பட்ட மருத்துவ சேவைகள் ஹாஜிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த வருட ஹஜ்ஜில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சேவைகள் தொடர்பான எந்தவொரு பாரிய அசம்பாவிதங்களும் இடம்பெறவில்லை என சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த வருடத்தினை விட சுமார் 150,000க்கு அதிக எண்ணிக்கையான ஹாஜிகள் கடந்த வருட ஹஜ்ஜில் பங்கேற்றிருந்தனர். இவர்களில் 1,301 ஹாஜிகள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் 83 சதவீதமானவர்கள் சட்டவிரோதமாக ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்தவர்கள் என்ற விடயம் பின்னர் தெரியவந்தது.
நேரடி சூரிய வெளிச்சத்தின் கீழ் நீண்ட தூரம் நடந்தமை மற்றும் தங்குவதற்கு பொருத்தமான இடம் கிடைக்காமை போன்ற காரணங்களினாலேயே இந்த உயிரிழப்புக்கள் ஏற்பட்ட விடயம் பின்னர் கண்டறியப்பட்டது.
இது போன்ற எண்ணிக்கையான உயிரிழப்புக்கள் இந்த வருட ஹஜ்ஜில் இடம்பெறக் கூடாது என்ற அடிப்படையில் சவூதி அரேபியா அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
சவூதி அரேபியாவின் பிரதமரும் முடிக்குரிய இளவரசருமான முஹம்மத் பின் சல்மானின் நேரடி ஆலோசனையின் பிரகாரம் இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதற்காக ஹஜ்ஜுடன் தொடர்புடைய அனைத்து விடயங்களும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சவூதி விஷன் 2030 என்ற செயற்திட்டத்தின் ஊடாக இந்த டிஜிட்டல் மயமாக்கம் இடம்பெற்றது. இதன் பிரகாரம், நுஸுக் எனும் அடையாள அட்டை ஹாஜிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஹஜ் விசாவிற்காக சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் இந்த அடையாள அட்டையில் உள்ளடக்கப்பட்டிருந்தது.
இந்த அடையாள அட்டையின்றி ஹஜ் கடமையினை நிறைவேற்ற எவரும் மக்காவினுள் நுழைய முடியாது என்ற கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவினையும் மீறி 197 பேரை அழைத்து வந்த குற்றச்சாட்டில் 49 பேர் கைது செய்யப்பட்டதாக ஹஜ் பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.
இவர்களுக்கு ஒரு இலட்சம் சவூதி ரியால் தண்டம் உள்ளிட்ட பல தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தினை விட அதிக வெப்ப நிலை இந்த வருட ஹஜ்ஜின் போது காணப்பட்ட போதிலும், அதிக எண்ணிக்கையிலான மரணங்கள் நிகழவில்லை.
இதற்கு பிரதான காரணம் சவூதி அரேபியாவினால் விதிக்கப்பட்ட கடுமையா கட்டுப்பாடுகளும் தொடர்ச்சியாக ஹாஜிகளுக்கு வழங்கப்பட்டு வந்த விழிப்புணர்வுகளுமாகும்.
இதேவேளை இரு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரும் சவூதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் ஆல் சவூதின் விருந்தாளிகளாக காஸா பகுதியில் உயிர்களை தியாகம் செய்த, காயமுற்றவர்களின் உறவினர்கள் 1,000 பேர் ஹஜ் யாத்திரையில் பங்கேற்றிருந்தனர்.
அதேவேளை, காஸாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினால் ஏற்படுகின்ற பேரழிவுகளை முடிக்கு கொண்டுவர சர்வதேசத்தின் பங்களிப்பினை சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் வலியுறுத்தினார்.
அத்துடன் அப்பாவிகளை பொதுமக்களை பாதுகாத்து சர்வதேச சட்டபூர்வ தீர்மானங்களின் பிரகாரம் பலஸ்தீனத்தில் அமைதியை அனுபவிக்கக்கூடிய புதிய யுகத்தினை நோக்கிச் செயல்பட அவர் அழைப்பு விடுத்தார்.
ஹஜ்ஜில் பங்கேற்க வந்த உலக நாட்டுத் தலைவர்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்காக வருடாந்தம் வழங்கப்படுகின்ற வரவேற்பு நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இலங்கை ஹஜ் குழு
இந்த வருடம் இலங்கை ஹஜ் குழுவும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயற்பட்டதன் மூலம் யாத்திரிகர்களின் திருப்தியைப் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது.
கொவிட் -–19 தொற்றுக்கு பிறகு கடந்த இரண்டு வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட ஹஜ்ஜின் போது இலங்கை ஹாஜிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இது போன்ற அசௌகரியங்கள் இந்த வருட ஹஜ்ஜில் இடம்பெறக்கூடாது என்ற விடயத்தில் இலங்கை அரச ஹஜ் குழு கடுமையாக செயற்பட்டது.
இதற்காக வேண்டி ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகத்துடன் இணைந்து இலங்கை அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன பல நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தன.
குறிப்பாக அனைத்து ஹாஜிகளும் ஒரே தரத்தில் அமைந்த கூடாரத்தில் அரபா மற்றும் மினாவில் தங்க வைக்கப்பட்டனர். மேலும் 49 ஹாஜிகளுக்கு ஒரு பஸ் என்ற அடிப்படையில் பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த விடயங்களில் இலங்கை அரச ஹஜ் குழு வெற்றி கண்ட போதிலும், மினா கூடாரத்தில் இலங்கை ஹாஜிகள் சில நெருக்கடிகளை எதிர்நோக்கியதை எம்மால் நேரடியாக அவதானிக்க முடிந்தது.
இதனை இலங்கை அரச ஹஜ் குழு மற்றும் ஹஜ் முகவர் நிறுவனங்களின் சங்கம் ஆகியன பகிரங்கமாக ஏற்றுக்கொண்டுள்ளன.
மினா மற்றும் அரபா ஆகிய இடங்களில் இலங்கை ஹாஜிகள் தங்கிய கூடாரங்களில் இலங்கை ஹஜ் குழுவினர் பல தடவைகளில் மேற்கொண்ட திடீர் விஜயங்களின் போதே இந்த குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த தவறுகள் அடுத்த முறை இடம்பெறாத வண்ணம் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற பகிரங்க உறுதிமொழிகள் மினாவில் வைத்து இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலாரினாலும் ஹஜ் முகவர்கள் சங்கத்தின் தலைவர் கரீம் ஹாஜியினாலும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டன.
இதேவேளை, இந்த வருடம் ஹாஜிகளுக்கே நாம் முன்னுரிமை வழங்கினோம். ஹாஜிகள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் தொடர்பில் விரிவான கலந்துரையாடலொன்றை முன்னெடுக்கவுள்ளோம். இந்த விடயங்கள் தொடர்பில் தீர்வுகளை பெறுவதற்காக உரிய தரப்பினருடன் பேச்சுக்களை நடத்தவுள்ளோம் என இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் ரியாஸ் மிஹுலார் எம்மிடம் தெரிவித்தார்.
பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே அனைத்து ஹாஜிகளையும் ஒரே தரத்திலமைந்த கூடாரத்தில் அமர்த்தினோம். இதனை இப்போது அனைவரும் பாராட்டுகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கை ஹஜ் குழுவின் தலைவர் கூறியது போன்று உரிய தரப்பினருடன் பேச்சு நடத்துவதன் ஊடாக அடுத்த வருடம் இலங்கை ஹாஜிகளுக்கு சிறந்த சேவைகளை வழங்க வேண்டியது அவசியமாகும்.
அதனை இப்போதிருந்தே ஆரம்பிக்க வேண்டியது இலங்கை ஹஜ் குழுவின் பணியாகும். ஏனெனில் அடுத்த வருடத்திற்கான ஹஜ் கடமை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் இப்போதே சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா விவகார அமைச்சு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயத்தில் இலங்கை ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலர் அலுவலகம் ஆகியன இணைந்து இப்போதிருந்தே நடவடிக்கைகளை முன்னெடுத்தால் இலங்கை ஹாஜிகளுக்கு அடுத்த வருட ஹஜ்ஜில் வினைத்திறனான பல சேவைகளை வழங்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அதேபோன்று மினா கூடாரத்தில் வைத்து ஊடகங்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை அமுல்படுத்த ஹஜ் குழு நடவடிக்கை எடுக்க வேண்டியது கட்டாயமாகும். இது தொடர்பில் ஊடகங்கள் தொடர்ச்சியாக அவதானம் செலுத்தும் என்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.- Vidivelli