எஸ்.என்.எம்.சுஹைல்
இலங்கையில் அண்மைக்காலமாக பல யூத மதஸ்தானங்கள் இயங்கத் தொடங்கியுள்ள விடயம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. இஸ்ரேலிய சுற்றுலா பயணிகள் இலங்கையில் தங்களுக்கான மத வழிபாட்டு நிலையங்களை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகின்ற நிலையில், அவை சட்ட அனுமதிகளின்றி இயங்குவது தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன. இது குறித்து பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கேள்விகள் வழியாக, அரசின் பதில்கள் மற்றும் நிலைப்பாடுகள், சமூகத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளது.
இலங்கையில் பிரதானமாக நான்கு மதங்கள் பின்பற்றப்படுகின்றன. அதிகமானோர் பௌத்த மதத்தை பின்பற்றுவதுடன் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றுபவர்களும் இருக்கின்றனர். 1978 ஆம் ஆண்டு இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசு அரசியலமைப்பின் கீழ் 14 ஆவது சரத்து மத சுதந்திரத்தை உறுதிப்படுத்துகிறது.
இதன்படி, ஒவ்வொருவரும் தனியாகவோ, அல்லது பிறருடன் சேர்ந்து, பொதுவாகவோ, தனிப்பட்ட முறையிலோ, தமது மதத்தை வழிபட, கடைப்பிடிக்க, கடைப்பிடித்துக் கற்பிக்க, அதன் நெறிகளைப் பின்பற்ற உரிமை பெற்றுள்ளனர். மத நிலையங்கள் அமைப்பதற்கான சட்ட ஏற்பாடுகளும் உருவாக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் புதிய மத ஸ்தானம் ஒன்றை நிறுவுவதற்கான சட்ட மற்றும் நிர்வாக விதிமுறைகள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் எல்லா மதத்திற்கும் பொதுவான விதிமுறைகளும் உள்ளன. குறிப்பாக மதஸ்தானம் அமைக்கும்போது காணி உரிமை மற்றும் அனுமதி பெறுவது அவசியமாகிறது. அத்துடன், கட்டட நிர்மாணத்துக்கான அனுமதியை உள்ளூராட்சி அதிகார சபையிலும் பிரதேச செயலகங்களிலும் பெற வேண்டியுள்ளது. சிலபோது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியும் அவசியமாகிறது.
இதனிடையே, முஸ்லிம் பள்ளிவாசல்கள் 1956 ஆம் ஆண்டு 51 ஆம் இலக்க வக்பு சட்டத்தின் கீழ் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டியுள்ளது.
இந்துக் கோயில்கள் பெரும்பாலும் தனிப்பட்ட நபர், குடும்ப அல்லது சங்கங்கள் வழியாக நிர்வாகம் செய்யப்படுகின்றன. எனினும், இந்து கோயில்கள் இந்து சமய, கலாசார திணைக்களத்தில் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியமும் உள்ளது.
கிறிஸ்தவ தேவாலயங்கள் பெரும்பாலும் பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் ஊடாக செயல்படுகின்றன. வெளிநாட்டு உதவிகள் பெற்றுக்கொள்ளும் தேவாலயங்களுக்கு மத விவகார அமைச்சு மற்றும் வெளிவிவகார அமைச்சின் அனுமதியும் தேவைப்படுகிறது. இவற்றின் பதிவுகள் கிறிஸ்தவ மத விவகார திணைக்களத்தில் பதிவு செய்யப்படுகின்றன.
புதிதாக பௌத்த விகாரைகளை நிறுவும் போது 1931 ஆம் ஆண்டு 19 இலக்க சட்டத்திற்கு அமைய புத்தசாசன அமைச்சின் கீழ் பதிவு செய்வது அவசியமாகிறது.
இலங்கையில் புதிய மதஸ்தலங்களை நிறுவுவதற்கு சட்ட அனுமதி மற்றும் நிர்வாக ஒழுங்குகள் அனைத்தும் அவசியமாகும். இது நாட்டின் பன்மத, பல்பண்பாட்டு அமைப்பை பாதுகாக்கும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்மைக்காலமாக நாட்டில் புதிய சவால் ஒன்று உருவெடுத்துள்ளது. குறிப்பாக யூத மத வழிபாட்டுத்தலங்கள் நாட்டில் பல இடங்களில் நிறுவப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இலங்கையில் யூத மதத்தை பின்பற்றுபவர்கள் இல்லாத நிலையில் சுற்றுலாப் பயணிகளாக வரும் இஸ்ரேலியர்கள் அல்லது யூதர்களுக்காக ஆங்காங்கே இவ்வாறு மத நிறுவனங்கள் அமைக்கப்பட்டு வருவதாக தெரியவருகிறது.
இந்த விடயம் தொடர்பில் கடந்த வாரம் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புத்த சாசன, மத விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இதன்மூலம், யூத மத நிலையங்கள் இலங்கையில் நிறுவப்பட்டுள்ளமை உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. அத்துடன் பல்வேறு விடயங்களும் இந்த கேள்வி நேரத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அவற்றை நாம் விரிவாக பார்ப்போம்,
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புத்தசாசன அமைச்சர் ஹினிதும சுனில் செனவியிடம் கேட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர் அளித்த பதில்களும் வருமாறு,
முஜிபுர் ரஹ்மான்: இஸ்ரேல் இனத்தவர்களின் சமய மற்றும் கலாசார நிலையங்கள் இலங்கையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளனவா?
அமைச்சர் : ஆம்
முஜிபுர் ரஹ்மான்: அவை ஸ்தாபிக்கப்பட்டுள்ள பிரதேசங்கள் யாவை?
அமைச்சர் : நான்கு இடங்களில் இவ்வாறான சமய மற்றும் கலாசார நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளன.
01 பொத்துவில் பிரதேசத்தில்
02 வெலிகம பிரதேசத்தில்
03 திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில்
04 எல்ல பிரதேசத்தில்
முஜிபுர் ரஹ்மான்: அவற்றுக்கு சட்டரீதியாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதை சபைக்கு அறிவிப்பீராக?
அமைச்சர் : இந்த நான்கு ஸ்தானங்களில் இரண்டுக்கு சட்ட ரீதியாக அனுமதியளிக்கப்பட்டுள்ளன. மற்றை இரண்டும் பதிவு செய்யப்படவில்லை. பொத்துவில் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையம் பதிவு செய்யப்படவில்லை. அதே போன்று திம்பிரிகஸ்யாய பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய நிலையமும் பதிவு செய்யப்படவில்லை. வெலிகம மற்றும் எல்ல பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முஜிபுர் ரஹ்மான்: சட்டரீதியாக அனுமதி பெறப்படாமை ஏன்?
அமைச்சர் : பொத்துவில் பிரதேசத்தில் பதிவு செய்யப்படாமைக்கான காரணம் தெரியாது. கிராம உத்தியோகத்தர் இது தொடர்பான மேற்பார்வைக்காக அவ்விடத்திற்கு சென்றபோது, அந்த இடத்தில் யாரும் இருக்கவில்லை. இந்நிலையில், கிராம சேவகர் அங்குள்ள பொது மக்களிடம் விபரத்தை கேட்டறிந்துகொண்டார். இதன்போது, இந்த இடம் தனியாருக்கு சொந்தமான காணி எனவும் அதனால் இது பதிவு செய்யப்படவில்லை எனவும் பொதுமக்கள் கூறியுள்ளனர்.
சுற்றுலாவுக்காக வருகின்ற இஸ்ரேல் இனத்தவர்கள் இங்கு மத வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர். தற்போது அவர்கள் நாட்டில் இருந்து வெளியேறிச் சென்றுள்ளனர். எனவே, அங்கு மத வழிபாடுகள் இடம்பெறுவதில்லை.
திம்பிரிகஸ்யாய பிரதேசத்திலுள்ள நிலையமும் மத நிலையமாக பதிவு செய்யப்பட்டமைக்கான அறிக்கைகள் ஏதும் இல்லை. அங்கு நான்கு பேர் தங்கியிருப்பதாகவும் மதவழிபாடுகளுக்கு வேறு ஆட்களும் அங்கு வந்து செல்வதாகவும் அறியக் கிடைக்கிறது.
பதிவு செய்யப்பட்டிருக்கும் இரண்டு இஸ்ரேல் மத நிலையங்களும் (வெலிகம, எல்ல) கம்பனிகளை பதிவு செய்யும் அலுவலகத்திலேயே பதிவு செய்யப்பட்டுள்ளன. 2022 ஏப்ரல், 21 ஆம் திகதி இந்த பதிவு நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இதுவே எனது பதில்களாகும்.
இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் புத்தசாசன அமைச்சரிடம் மேலதிக கேள்விகளையும் கேட்டிருந்தார். அதற்கு புத்தசாசன அமைச்சர் வழங்கிய பதில்களை இனி பார்ப்போம்.
முஜிபுர் ரஹ்மான்: இப்போதைக்கு நான்கு மதஸ்தானங்கள் இருக்கின்றன, அவற்றில் இரண்டு பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதாக அமைச்சரே நீங்கள் குறிப்பிட்டிருந்தீர்கள்.
அதேபோன்று கொழும்பில் மேலும் இரண்டு இடங்களில் இதுபோன்ற நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. கொழும்பு 7 இல் சினமன் ரெட் ஹோட்டலுக்கு அருகாமையிலும், தெஹிவளை அல்விஸ் பிரதேசத்திலும் இஸ்ரேல் மத நிலையங்கள் அமைக்கப்படுகின்றன.
இது தொடர்பாக நான் கடந்த டிசம்பர் மாதம் பிரதமரிடம் வினவியிருந்தேன். இதன்போது, இவை சட்ட ரீதியற்ற முறையில் அமைக்கப்படுபவை என்பதையும், பதிவு செய்யப்படவில்லை என்பதையும் பிரதமர் ஏற்றுக்கொண்டிருந்தார். அந்த இரண்டு கட்டடங்களும் பொலிஸ் மற்றும் அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. இவை சட்ட ரீதியற்ற முறையில் அமைக்கப்படுவதாக பிரதமர் அறிந்துகொண்டுள்ளார். டிசம்பரிலிருந்து தற்போது 7 மாதங்கள் கடந்துள்ளன. சட்ட ரீதியற்ற முறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இந்த மத நிலையங்கள் பற்றி உங்களுடைய நிலைப்பாட்டை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.
அமைச்சர் : இது தொடர்பாக நான் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் விபரங்களை கேட்டறிந்தேன். அதிரடிப்படையின் பாதுகாப்பை நீக்கிக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார். இது தொடர்பான மேலதிகமாக தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அவருடன் கலந்துரையாடலாம்.
இஸ்ரேல் மத நிலையங்களை பதிவு செய்வது சிக்கலுக்குரிய விடயமாகும். ஏனெனில், பிரதான நான்கு மத ஸ்தலங்களை பதிவு செய்வதற்கு அவற்றுக்கான திணைக்களங்கள் இருக்கின்றன. அதற்கான சட்ட ஏற்பாடுகளும் நடைமுறையில் உள்ளன. ஆனால், கம்பனி சட்டத்தின் கீழ் இவ்வாறு பதிவு செய்யப்படுவது சாதாரணமான சிற்றுண்டிச்சாலைகள், வியாபார நிலையங்கள் என்பனவாகும். அந்த முறையிலேயே இஸ்ரேல் மத நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் அங்கு இதைவிட வேறு நடவடிக்கைகள் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது. இது தொடர்பான தகவல்களை சேகரிப்பது மிகவும் கடினமானதாகும். எமது அமைச்சிற்கு கீழ் இருக்கும் நான்கு மதங்களுங்களுக்கான திணைக்களங்களுக்கு உட்பட்டதாக இது இல்லை. எனவே, பிரதேச செயலகங்கள் உள்ளிட்ட வேறு இடங்களிலேயே இவை அமையப்பெற்றுள்ளன. இதுகுறித்த தகவல்கள் கிடைக்கும்போதுதான் பதிவுகள் இருக்கிறதா இல்லையா என்று எம்மால் தேடிப்பார்க்க முடியுமானதாக உள்ளது.
நீங்கள் கேட்கும் விடயங்கள் சரியானவை, அவை தொடர்பில் நாம் ஆராய்ந்து வருகின்றோம். திணைக்கள பிரதானிகளுடனும் இது தொடர்பில் கலந்துரையாடியுள்ளோம். கிடைக்கும் தகவல்களின் அடிப்படையிலேயே நாம் தேடிச் செல்கின்றோம்.
முஜிபுர் ரஹ்மான்: கொழும்பு 7 இல் அமைக்கப்பட்டுவரும் இஸ்ரேல் மத நிலையத்திற்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பு நீக்கப்பட்டாலும் தொடர்ந்தும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. நீங்களும் அங்கு சென்று இதனை பார்க்க முடியும்.
எமது நாட்டில் யூதர்கள் இல்லை. அப்படியிருக்கும்போது யூதர்களுக்கான மத ஸ்தலம் எதற்கு என்ற கேள்வி எழுகிறது. இஸ்ரேல் என்பது குழப்பகரமான நாடாகும். மொசாட் என்பது எமது நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்த காலத்தின்போது விடுதலை புலிகளுக்கு யுத்த பயிற்சி வழங்கியது. இன்று எமது நாட்டுக்குள்ளும் இஸ்ரேல் மத ஸ்தானங்கள் அமைப்பதன் ஊடாக மறைமுகமாக உள்நுழைகின்றனர் என்பதே எனது நிலைப்பாடாகும். அவ்வாறு இருக்கும்போது ஏன் நீங்கள் இஸ்ரேல் தொடர்பில் மென்மையாக நடந்துகொள்கின்றீர்கள்?
அவர்கள் நாட்டுக்குள் முரண்பாடுகளை தோற்றுவிக்கக்கூடியவர்கள் என்பதை அறிந்துள்ளீர்கள். காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் பாரிய இன அழிப்பு குறித்து அறிந்திருந்தும், அநாவசியமாக அமைக்கப்படும் இந்த மத நிலையங்களுக்கு இடமளிப்து ஏன்?
இந்த கட்டடங்கள் சட்டவிரோதமானது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளநிலையில் பொலிஸ் பாதுகாப்பு வழங்குவதானது அவற்றுக்கு சட்ட அங்கீகாரத்தை வழங்குவதாக அமைகிறது. இது இரட்டை நிலைத்தன்மையை வெளிப்படுத்துகிறது. அப்படி அமைய முடியாது.
சட்டவிரோதமான கட்டடங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு இந்த அரசாங்கத்திற்கு இன்னும் எவ்வளவு காலம் தேவைப்படும் என்பதை அமைச்சரிடம் கேட்கிறேன்.
அமைச்சர் : யூதர்களாக இருக்கலாம், வேறு நம்பிக்கையுடையவர்களாக இருக்கலாம். அவர்களின் மத ஸ்தானங்களை பதிவு செய்வதற்கான முறைமை நாட்டில் இல்லை. யூத இனத்தவர்கள் மத வழிபாட்டுக்குத்தான் வருகிறார்கள் என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் இல்லை. சுற்றுலா விசாவில் சுற்றுலா பயணிகளாகவே அவர்கள் இங்கு வருகின்றனர். எனவே, அவர்கள் தொடர்பில் அரசாங்கம் என்ற அடிப்படையில் எமக்கு பொறுப்பு இருக்கிறது. எல்ல பிரதேச சபையினால் வழங்கிய அறிக்கையின்படி சுற்றுலா பயணிகளாக வருகின்ற யூத இனத்தவர்களுக்கான உணவு கலாசார முறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டிய நிலை இருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்காக தான் இவ்வாறான மத ஸ்தானங்கள் அமைக்கப்பட்டுள்ளன. என்றாலும் இதிலுள்ள சிக்கல்களை நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
பௌத்தம், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத ஸ்தானங்களை இலங்கையில் நிறுவுவதற்கான சட்ட ஏற்பாடுகள் இலங்கையில் இருக்கின்றது. ஆனால், யூத மத ஸ்தானங்களை அமைப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இந்நாட்டில் இல்லை. இந்நிலையில் பொத்துவில், வெலிகம, திம்பிரிகஸ்யாய மற்றும் எல்ல போன்ற பகுதிகளில் யூத மத ஸ்தானங்கள் நிறுவப்பட்டுள்ளன. வெலிகம மற்றும் எல்ல பகுதியில் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்டு மத வழிபாடுகள் நடைபெறுகின்றன. மேலும், பொத்துவில் மற்றும் திம்பிரிகஸ்யாய பகுதிகளில் எவ்வித சட்ட அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள யூத மத ஸ்தானங்கள் குறித்து எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதுள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டிற்கு பிறகு இலங்கையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்கள் பதிவுகள் மற்றும் மத வழிபாட்டுத்தளங்கள் அமைக்கும் விடயங்களில் மஹிந்த அரசாங்கம் கடினமான போக்கை கடைபிடித்து வந்தது. நல்லாட்சி அரசாங்க காலத்தில் முஸ்லிம் சமய விவகார அமைச்சராக பதவி வகித்த எம்.எச்.ஏ. ஹலீம் பள்ளிவாசல் பதிவு நடவடிக்கைகளில் பின்பற்றப்பட்டு வந்த இறுக்கமான ஏற்பாடுகளை தளர்த்தியிருந்தார்.
குறிப்பாக புதிதாக பள்ளிவாசல்களை நிறுவும்போது அல்லது பதியும்போது அருகிலுள்ள பௌத்த விகாரையொன்றின் கடிதம் கோரப்பட்டது. இதனை ஹலீம் நீக்கியிருந்தார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து அதிகாரத்துக்கு வந்த கோட்டாபய அரசாங்கம் மீண்டும் பள்ளிவாசல் பதிவு விடயத்தில் இறுக்கமான நிலையை பின்பற்றியது. இவ்வாறு, நாட்டில் பிரதான மதங்களில் ஒன்றான இஸ்லாமிய மத ஸ்தானங்கள் அமைக்கப்படும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் மிகவும் பாரபட்சமாக நடந்திருக்கிறது.
மஹிந்த அரசாங்கம் பள்ளிவாசல்கள் பதிவு விடயத்தில் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாக கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளன முன்னாள் தலைவர் அஸ்லம் ஒத்மான் குறிப்பிட்டார்.
‘மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் பள்ளிவாசல்கள் பதிவுகள் நிறுத்தப்பட்டன. அத்தோடு, பள்ளிவாசல்கள் பதிவுகள் விடயத்தில் பல்வேறு அநாவசியமான நிபந்தனைகள் திணிக்கப்பட்டு நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. ஈஸ்டர் தின தாக்குதலுக்கு பிறகு பள்ளிவாசல் பதிவுகள் அல்லது புதிய பள்ளிவாசல்களை நிறுவுவது குறித்து பேசவே முடியாத நிலை ஏற்பட்டது. எனினும், அரகல போராட்டத்திற்கு பின்னர் கடந்த மூன்று வருடங்களுக்குள் இந்த நிலைமை மாற்றமடைந்தது’ என கூறினார் அஸ்லம் ஒத்மான்.
அத்துடன், ‘இன்று எந்த தடங்கலுமின்றி இஸ்ரேலிய மத ஸ்தானங்களை நிறுவுவதற்கு ஆட்சியாளர்கள் இடமளிக்கின்றனர். சட்டவிரோதமாக நிறுவப்படும் யூத மதஸ்தானங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படுகின்றமையானது அவர்களின் இந்த அத்துமீறிய செயற்பாடுகளை சட்டரீதியானதாக மாற்றுவதாகவே அமைகிறது்’ என்று அஸ்லம் ஒத்மான் குறிப்பிட்டார்.
அத்தோடு, கிறிஸ்தவ தேவாலயங்கள் விடயத்திலும் கடந்த சில தசாப்தங்களாக நாட்டிற்குள் பல நெருக்குவாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் யூத மத ஸ்தானங்கள் அமைக்கப்படுவதானது அமெரிக்க அரசியல் பின்னணி கொண்டவை என கிறிஸ்தவ ஒத்துழைப்புக்கான இயக்கத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சக்திவேல் கூறுகின்றார்.
‘பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொள்ளும் அட்டூழியங்களுக்கு கண்டனம் தெரிவிக்க முடியாத இந்த அநுர அரசாங்கம் யூத மத ஆலயங்கள் அமைப்பதற்கு இடமளிக்கிறது. அமெரிக்காவுக்கு அடிபணிந்தே இஸ்ரேல் சார்பு நிலையை இந்த அரசாங்கம் எடுத்து வருகிறது. இந்த நாட்டில் சமயங்களுக்கிடையே மேலும் குழப்பங்களை ஏற்படுத்த இஸ்ரேல் எத்தனிக்கிறது. அதற்கு சாதகமான சூழலை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுக்கிறது. இலங்கையிலுள்ள முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் அச்சமூட்டுவதற்காகவும் இஸ்ரேலியர்களின் அதிகாரத்தை இலங்கையில் நிலைநிறுத்துவதற்காகவுமே இங்கு கிறிஸ்தவ ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. இதனை எதிர்க்க முடியாத நிலைமையொன்று ஏற்பட்டிருக்கின்றமை வேதனையளிக்கிறது’ என்று அருட்தந்தை சக்திவேல் குறிப்பிட்டார்.
இது இவ்வாறிருக்கையில், அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் ஸ்தாபகர் தின நிகழ்வு அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய இராஜதந்திரியும் ஜெனீவாவுக்கான இலங்கையின் முன்னாள் வதிவிடப் பிரதிநிதியுமான கலாநிதி தயான் ஜயதிலக பேசுகையில், ‘யூதர்களே இல்லாத இலங்கையில் ‘சபாத் இல்லம்’ என்று அழைக்கப்படும் அவர்களது வணக்கவழிபாட்டு மற்றும் பிரசார நிலையங்கள் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றன. அவற்றுக்கு இலங்கையின் அரச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இந்த அரசாங்கம் என்ன செய்யப் போகிறது?’ என கேள்வி எழுப்பியிருந்தார்.
இலங்கை பன்மைத்துவ சமூக கட்டமைப்பை கொண்ட நாடாகும். எனினும், எந்தவொரு மத ஸ்தலத்தையும் நிறுவும் முன் அது அங்கீகாரம் பெற வேண்டும் என்றும், பதிவு செய்யப்பட வேண்டுமென்று இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் யூத மதஸ்தானங்கள் அமைப்பதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லா நிலைமை பல்வேறு கேள்விகளை ஏற்படுத்துகிறது. நாட்டில் எந்தவொரு விடயம் முன்னெடுக்கப்படும்போதும் சட்டத்துக்கு உட்பட்டு செயற்படவேண்டியது அவசியமானதாகும். எனினும், யூத மத ஸ்தானங்கள் விடயத்தில் இந்தளவு பராமுகமாக செயற்படுவதானது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. எனவே, இந்த விடயத்தை அரசாங்கம் கருத்திற்கொண்டு அடுத்த நகர்வுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமானதொன்றாகும்.
யூத மதஸ்தானங்களைப் பதிவு செய்வதற்கான சரியான சட்ட நடைமுறைகள் இல்லாத நிலையில், அவை சட்ட விரோதமாக இயங்குகின்றனவோ அல்லது சுற்றுலா பயணிகளின் வசதிகளாக மட்டுமே நிறுவப்பட்டுள்ளனவா என்பது ஒரு குழப்பநிலையை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை, கடந்த காலங்களில் பிற மதஸ்தானங்களுக்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்ட நிலையில், யூத மதஸ்தானங்களுக்கு வழங்கப்படும் அரசாங்கத்தின் சாதகமான நிலைப்பாடு நாட்டு சட்டத்திற்கு சவால் விடுக்கும் வகையில் உள்ளது. இது தொடர்பான தெளிவான சட்டரீதியான முன்மொழிவுகளும், சமநிலையுடைய நடைமுறைகளும் இன்றைக்கு அவசியமாகின்றன.
-Vidivelli