முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் அளிக்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றைய தினம் குற்றப்புலனாய்வுப்பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கினார்.
இம்யுனோகுளோபுளின் மருந்து இறக்குமதி விவகாரம் தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவினால் குற்றப்புலனாய்வுப்பிரிவில் ஏற்கனவே முறைப்பாடொன்று அளிக்கப்பட்டிருந்தது.
குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் அம்முறைப்பாடு தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில், இதுகுறித்து முன்னைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் சிலர் ஏற்கனவே குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தில் வருகைதந்து வாக்குமூலம் வழங்கியிருந்தனர்.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று புதன்கிழமை குற்றப்புலனாய்வுத்திணைக்களத்துக்கு வருகைதந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சுமார் ஒருமணிநேரம் வரை வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார். -Vidivelli