எம்.ஐ.அப்துல் நஸார்
இணையத் தொடர்புகள் இல்லாத காலத்தில் வாழவே கிட்டத்தட்ட அரைவாசிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் விரும்புவதாக பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பொன்றின் மூலம் தெரியவந்துள்ளது. நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று ஓப்லைன் சந்திப்புகளை ஏற்பாடு செய்வதன் மூலம் முதன்முறையாக அத்தகையவர்களுக்கு வாய்ப்பளிக்க முன்வந்துள்ளது.
தி ஓப்லைன் கிளப் (The Offline Club) என்ற இன்ஸ்டாகிராம் கணக்குப் பக்கத்தில் கிட்டத்தட்ட 530,000 பின்தொடர்பவர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலிருந்து சுயநினைவுடன் விடுபட விரும்புபவர்களை தி ஓப்லைன் கிளப் ஊக்குவிக்கின்றது.
‘கையடக்கத் தொலைபேசி திரை நேரத்தை உண்மையான நேரமாக மாற்றுதல்’ என்பது நிகழ்ச்சி முகாமைத்துவ நிறுவனத்தின் நெதர்லாந்தைச் சேர்ந்த மூன்று ஸ்தாபகர்களான இலியா நெப்பல்ஹவுட், ஜோர்டி வான் பென்னெகோம் மற்றும் வலண்டிஜ்ன் க்ளோக் ஆகியோரால் பயன்படுத்தப்படும் மகுட வாசகமாகும்.
‘கடந்த ஒரு வருடமாக, மூவரும் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மடிக்கணினிகள் அனுமதிக்கப்படாத சந்திப்புகளை ஏற்பாடு செய்து வருகின்றனர். ‘உங்கள் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை விட்டுவிட நீங்கள் தயாரா?’ என்று அவர்கள் இன்ஸ்டாகிராமில் வினா எழுப்பியுள்ளனர்.
உண்மையில், குறைந்தபட்சம் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்வுகளுக்காகவாவது, தங்கள் ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை அணைத்துவிட அதிகமான மக்கள் தயாராக இருக்கின்றனர்.
தமது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, மக்கள் வாசிக்கின்றனர், விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர், கலை மற்றும் கைவினைப்பொருட்கள் செய்கிறார்கள் அல்லது சில மணிநேரம் ஓய்வெடுக்கிறார்கள். டிஜிட்டல் டிடாக்ஸ் ரிட்ரீட்ஸ் (Digital Detox Retreats) என்ற பெயரிலமைந்த பயிற்சிப் பட்டறைகளும் பல நாட்களுக்கு இடம்பெறுகின்றன.
‘தொலைபேசிகள் இல்லாத இடங்களும் ஓப்லைன் சமூகங்களும் இருக்கும் ஒரு உலகத்தை நாங்கள் கற்பனை செய்கிறோம்,’ என மூன்று ஸ்தாபகர்களும் தமது வலைத்தளத்தில் எழுதியுள்ளனர்.
கடந்த ஆண்டு நெதர்லாந்தில் உருவான இந்த எண்ணக்கரு உலகம் முழுவதும் பரவி வருகிறது. ஆம்ஸ்டர்டாம் இக் கருத்துப் பரவிய முதன்மை இடங்களில் ஒன்றாகும், பின்னர் லண்டன், பரிஸ், மிலன் மற்றும் கோபன்ஹேகன் எனத் தொடர்கின்றன.
இந்த முடிவுகள் 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நடத்தப்பட்ட அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹாரிஸ் போல்ஸ் (Harris Polls) போன்ற ஏனைய கருத்துக்கணிப்புகளுடன் ஒத்துப்போகின்றன. அந்த கணக்கெடுப்பில், பல இளைஞர்கள் டிக்டொக், இன்ஸ்டாகிராம் அல்லது எக்ஸ் போன்றவை ஒருபோதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கக் கூடாது என்று விரும்பினர்.
ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளின் பயன்பாட்டிற்கு ஊரடங்கு உத்தரவுகள் போல கட்டாய தடை விதிக்கப்படுவது தொடர்பில் பரிசீலிக்கப்படுவதை சூசகமாக பிரித்தானிய தொழில்நுட்ப அமைச்சர் பீட்டர் கைல் தெரிவித்ததாக தி கார்டியன் செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வயதெல்லையை 13 இலிருந்து 15 ஆக உயர்த்த வேண்டுமென நோர்வே விரும்புகிறது.
உலகளாவிய ரீதியில் முன்னோடியாக காணப்படுகின்ற அவுஸ்திரேலியா ஏற்கனவே 2024 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கான வயதெல்லையை 16 ஆக உயர்த்தியுள்ளது. டென்மார்க் போன்ற ஏனைய நாடுகள், பாடசாலை வளாகங்களுக்குள், டெப்லெட்டுகள் மற்றும் ஸ்மார்டகையடக்கத் தொலைபேசிகளை கிட்டத்தட்ட முற்றிலுமாக தடை செய்துள்ளன. 2024 ஆம் ஆண்டில், டென்மார்க் கல்வி அமைச்சர் மத்தியாஸ் டெஸ்பே, நாடு டிஜிட்டல்மயமாக்கலுக்கான தனக்கேயுரிய அணுகுமுறையினைக் கடைபிடிப்பதாகத் தெரிவித்தார்.
அதிகரித்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பயன்பாடு மனச்சோர்வு, பதற்றம், மன அழுத்தம், தூக்கக் கோளாறுகள் மற்றும் அவற்றிற்கு அடிமையாக்கும் நடத்தை போன்ற பல்வேறு மனநலப் பிரச்சினைகளுடன் தொடர்புடையதாகக் காணப்படுகின்றது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில் BMC மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், ஸ்மார்ட்கையடக்கத் தொலைபேசி பயன்பாடு குறைக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குப் பின்னர் மனச்சோர்வு அறிகுறிகள் 27 வீதத்தால் குறைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் இளைஞர்களின் மன ஆரோக்கியம் பாரிய அளவில் மோசமடைந்துள்ளது. டிஜிட்டல் ஊடகங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட கொவிட்-19 தொற்றுநோயால் இந்தப் போக்கு மேலும் அதிகரித்தது என பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு (OECD) தெரிவித்துள்ளது. எனினும் டிஜிட்டல் ஊடகங்களின் பயன்பாடு மற்றும் கொவிட் -19 நோய்த் தொற்று ஆகிய இரண்டு காரணிகளுக்கும் இடையேயான தொடர்பு பற்றிய ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை எனவும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
மறுபுறமாக, நெதர்லாந்து ஓப்லைன் கிளப்பின் ஸ்தாபகர்கள் நடவடிக்கை மேற்கொண்டு தமது சந்திப்புகளை விரிவுபடுத்த விரும்புகின்றனர். பல்வேறு நகரங்களில் ஓப்லைன் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன.
ஏப்ரல் மாத ஆரம்பத்தில், 1,000க்கும் மேற்பட்டோர் தமது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை அணைத்துவிட்டு லண்டனில் புகைப்படத்திற்காக புகைப்படக் கருவியை நோக்கி மகிழ்ச்சியுடன் சிரித்தனர். இது ஒரு புதிய சாதனையாகும், ஓப்லைன் செயற்பாட்டில் செல்வாக்கு செலுத்துபவர்கள், அதனை தமது இன்ஸ்டாகிராமில் பெருமிதத்துடன் அறிவித்தனர்.- Vidivelli