பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக நீக்க வேண்டும் எனும் கோரிக்கைகள் தொடர்ச்சியாக வலுப்பெற்று வருகின்றன. இந்நிலையில் முஸ்லிம் தரப்புகளும் இது தொடர்பான அழுத்தங்களை அரசாங்கத்திற்கு வழங்கி வருகின்றன. அண்மையில் இதனை வலியுறுத்தி முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் இணைந்து பயங்கரவாத எதிர்ப்பு சீர்திருத்தங்களுக்கான பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளனர்.
முஸ்லிம் புத்திஜீவிகள், கல்வியாளர்கள் மற்றும் சிவில் சமூகத் தலைவர்கள் அடங்கிய குழு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சுக்கு விரிவான பரிந்துரைகளை கூட்டாக சமர்ப்பித்துள்ளது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்துச் செய்யுமாறும், மனித உரிமைகள், அரசியலமைப்பு பாதுகாப்பு மற்றும் ஜனநாயகப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதேவேளை தேசிய சூறா சபையும் ஜனாதிபதிக்கு இது தொடர்பில் கடிதம் ஒன்றை அண்மையில் அனுப்பியிருந்தது.
தற்போதுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்வதைத் தவிர, புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க ஆளும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எந்தவித மக்கள் ஆணையும் கிடையாது என தேசிய ஷூரா சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் தாம் ஆட்சிக்கு வந்தால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ஒழிப்பதாகவே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவும் அவரது தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் ஆணையளித்தது. அவ்வாறு செய்வதற்கே மக்கள் ஆணையை வழங்கினார்கள். மாறாக, புதிய பயங்கரவாதச் சட்டங்களைக் கொண்டுவர மக்கள் ஆணை வழங்கவில்லை எனவும் ஷூரா சபை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த 25 ஆண்டுகளுக்குள்ளால் ஏற்கனவே பல தடவைகள் புதிய பல்வேறு பாதுகாப்புச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இச்சட்டங்கள் நிர்வாக அதிகாரிகளுக்கும் காவல்துறைக்கும் பரந்த அதிகாரங்களை வழங்கியுள்ளதால் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் உருவாக்குவது தேவையற்றது என்பதனை வலியுறுத்துகிறோம்
இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. தற்போது தீவிரவாதத்திற்கான எந்த ஆபத்தும் இல்லாத. நிலையில் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதானது எமது நாட்டைப் பற்றிய ஒரு எதிர்மறையான அபிப்பிராயத்தை உலகளவில் ஏற்படுத்தும். அதன் விளைவாக சுற்றுலாத் துறை, வெளிநாட்டு முதலீடுகள், மற்றும் பொருளாதார முன்னேற்றங்கள் பாதிப்படையும் என நம்புகிறோம் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உண்மையில் இந்தக் கொடிய சட்டத்தினால் இந்த நாட்டில் வாழும் சகல சமூகத்தினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். 1980 களில் சிங்கள இளைஞர்களுக்கு எதிராகவும் 1990 களிலிருந்து 2009 வரை தமிழ் இளைஞர்களுக்கு எதிராகவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் முஸ்லிம் இளைஞர்களுக்கு எதிராகவும் இந்த சட்டம் தேர்ந்தெடுத்த வகையில் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் இந்த நாட்டின் மிகப் பெரிய வளங்களான ஆயிரக் கணக்கான இளைஞர்களின் வாழ்க்கைகள் சிதைக்கப்பட்டன. இந்த வரலாறு மீண்டும் திருப்பி எழுதப்படுவதற்கு இடமளிக்கக் கூடாது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இந்த சட்டத்தை முற்றாக ஒழிப்பதாகக் கூறியே ஆட்சிக்கு வந்தது. அந்த வகையில் இந்த சட்டத்தை முற்றாக ஒழிக்க வேண்டும். வெளிநாட்டு சக்திகளின் தேவைகளுக்காக புதிய சட்டங்களைக் கொண்டு வருவதை அனுமதிக்க முடியாது. இது தொடர்பில் அரசுக்கு அழுத்தங்களை வழங்கும் விடயத்தில் சகல சமூகத்தினரும் ஒன்றுபட்டுச் செயற்பட வேண்டும். தனித்தனியாக இயங்குவதை விடுத்து சகலரும் ஒன்றுபட்டுக் குரல் கொடுப்பதன் மூலமே நிச்சயமாக அரசாங்கத்திற்கு வலுவான ஒரு செய்தியைச் சொல்லக் கூடியதாக இருக்கும்.- Vidivelli