பிரசித்த அளவுகோல் (Popularity Metrics):
ஒருவர் சமூக வலைத்தளம் அல்லது இணையதளம் ஒன்றில் தன்னுடைய நண்பர்கள், ரசிகர்கள், மற்றும் சமூகம் சார்ந்தவர்கள் மத்தியில் தனக்குள்ள பிரபலத்தை மதிப்பிட்டுச் சொல்வதை இது குறிக்கிறது.
சமூக ஊடகங்களைப் பொறுத்தவரையிலே ஒருவரது பிரபலத்தை மதிப்பிடுவதற்கு பல்வேறு வழிகள் உள்ளன. அவருடைய சமூக வலைத்தளத்தில் அவர் பெற்றிருக்கின்ற நண்பர்களின் எண்ணிக்கை, லைக்குகள், பின்னூட்டல்கள், பகிர்வுகள், புள்ளிகளின் எண்ணிக்கை என்பன அவரது பிரபலத்தின் உச்சத்தை அளவிட்டுக்காட்டும். நாம் பதிவேற்றம் செய்த புகைப்படம், கவிதை, கருத்து, சிறு வீடியோக் காட்சி, தகவல் என்பன மக்களின் அதிக அவதானத்தை ஈர்க்க வேண்டும், அதிகமானவர்கள் அவற்றுக்கு லைக், கமெண்ட், ஷேரிங் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பதிவிட்டவரை தொற்றிக் கொண்டே இருக்கும். அதற்குக் காரணம் தான் சமூக வலைத்தளங்களில் இடுகின்ற ஒவ்வொரு சிறிய பதிவும் அதிகமானவர்களிடம் சென்று தமக்கு பிரபலத்தை தேடித்தர வேண்டும் என்ற அவாவாகும். இதனாலேயே ஒரு சிறிய கவிதையை அல்லது பதிவினை சமூக வலைத்தளத்தில் இட்ட ஒருவர் தனது பதிவுக்கு கிடைக்கும் லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அடிக்கடி எண்ணிப் பார்த்துக் கொண்டிருக்கிறார். தமது பிரபலத்தை ஃபாலோவர்ஸ் (பின்தொடர்பவர்கள்), ஷேர் (பகிர்வுகள்), ஸ்கோர்ஸ் (புள்ளிகள்) என்பனவற்றின் மூலம் அவர் அளவிட்டுக் கொள்கிறார். அதிக பிரபலத்தை தேடிக் கொள்ள வேண்டும் என்ற ஒருவரது ஆர்வத்தின் காரணமாக அவர் அதிக நேரம் வலைத்தளத்தில் செலவிடுகிறார். அதிக உள்ளடக்கங்களை எழுதுகின்றார். அதிக ஊடாட்டத்தில் ஈடுபடுகிறார். ஏனையவர்களின் கருத்துக்களுக்கு பின்னூட்டம் வழங்குகிறார். சமூக ஊடக நிறுவனங்களுக்கு இது மிகவும் தேவைப்பட்டதாகும்.
இனி இப்பிரசித்த அளவுகோல் சிறுவர்களிடையே ஏற்படுத்துகின்ற போட்டித் தன்மை பற்றி சிந்திக்கலாம்.
செயற்பாட்டு செய்திகள் (Activity Messages) :
இது சமூக ஊடகத்தில் நாம் மேற்கொண்ட ஒரு பதிவுக்கு நமது நட்பு வட்டாரத்தில் உள்ளவர்கள் அல்லது நட்பு வட்டாரத்தில் இல்லாதவர்கள் எத்தகைய துலங்கல்களை வழங்கி இருக்கின்றார்கள் என்பதை தேடிப் பார்க்கின்ற ஆர்வத்தை குறிக்கிறது. இதனை குறித்து காட்டும் ஏற்பாடாகவே whatsapp மற்றும் மெசஞ்சர் ஆகிய குறுஞ்செய்தி தளங்களில் ரீட்ஸ் (Reads) – அதாவது ஒரு தகவலை மற்றொருவர் பார்வையிட்டதை குறித்து காட்டும் குறியீடு அமைகின்றது. ஒரு செய்தியை நாம் பதிவேற்றம் செய்து விட்டால் எமது கண் எப்போதும் அந்த செய்தியை மற்றவர் பார்த்துவிட்டாரா என்பதை அடிக்கடி தேடிப் பார்க்கிறது. பார்த்து விட்டால், குறித்த ரீட்ஸ் குறியீடு நீல நிறத்தில் விளங்கும். பார்வையிடாவிட்டால் சற்று மங்கலாக தென்படும். இந்த நிறங்கள் குறித்த சமூக ஊடகத் தளத்தின் ஈர்த்திழுக்கும் வடிவமைப்பை குறித்து காட்டுகிறது.
பரஸ்பரத்தன்மை (Reciprocity) : இது நெருக்கமான ஒருவரின் சமூக ஊடகப் பதிவுக்கு துலங்களை அல்லது பின்னூட்டம் ஒன்றை பெற்றுக் கொடுக்கும் கட்டாய உணர்வினை சுட்டிக்காட்டுகிறது. நண்பர் ஒருவர் ஒரு கவிதையை எழுதி விட்டார். அந்த கவிதை நமது சமூக ஊடக சுவரில் வந்து சேர்ந்திருக்கிறது. இப்பொழுது அதனை நாம் வாசித்து விட்டால் அதனை அவர் கண்டு கொள்வார். அவரது கவிதையை வாசித்து பின்னூட்டல் வழங்காவிட்டால் அவர் குறையாக நினைத்து விடுவார். நட்பு தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுவிடும். ஒரு முகஸ்துதிக்காகவேனும் ஒரு சிறு லைக் ஒன்றைப் போட்டு விட்டு தப்பித்து விடலாம் எனத் தோன்றும். இதனாலேயே, சமூக ஊடகங்களில் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் ஆக்க இலக்கிய உள்ளடக்கங்களை நண்பர்கள் பலர் வாசிக்காமலேயே லைக் செய்து விடுகிறார்கள். அல்லது என்ன ஏதுவென்று வாசித்து விளங்காமலேயே ஆஹா ஓஹோ என்று பாராட்டி விடுகிறார்கள். இந்த பரஸ்பர கடமைப்பாட்டை தகவல் தொழில்நுட்பத்தின் ஈர்த்தெடுக்கின்ற வடிவமைப்பு ஏற்படுத்தியிருக்கிறது.
தொலைநிலை சமூக உறவுகள் (Pera Social Relationship) : இதுவும் சமூக வலைப்பின்னல் தொழில்நுட்பத்தின் ஈர்ப்பு சக்தியை காட்டும் மற்றுமொரு விடயமாகும். எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி, எமது சுய உணர்வுகளுடன், கருத்து, விருப்பு நிலைகளுடன் தொடர்பு பட்ட பிரசித்தி பெற்ற தாக்கக் குழுக்களுடன் அங்கத்துவத்தை பேணிக் கொள்ள எம்மை நாமே ஊக்கப்படுத்துவதை இது குறிக்கிறது. உதாரணமாக பலஸ்தீனத்துக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொள்ளும் சட்டவிரோத இன ஒழிப்பு நடவடிக்கையை எதிர்த்து சமூக ஊடகக் குழுவோ, அழுத்தக் குழுவோ, யூடியூப் அலைவரிசையோ இருந்தால் அதனை லைக் செய்து, அதில் எம்மையும் ஒரு அங்கத்தவராக காட்டிக் கொள்ளாவிட்டால் நண்பர்கள் என்ன நினைப்பார்களோ என்ற நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது.
இதனாலே நமது அரசியல் கருத்துடன் உணர்வுகளுடன் ஒருமித்துப் போகின்ற பிரசித்தி பெற்ற குழுக்களை நாம் லைக் செய்கின்றோம். குழுக்களின் கருத்துக்களுக்கு சிறிதளவிலேனும் பின்னூட்டல் வழங்குகின்றோம். இவ்வாறு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் அல்லது சட்ட ரீதியான கடப்பாடு நமக்கு இல்லை. ஆனால், நாம் அவ்வாறு செய்வதற்கான காரணம் நமது சூழலில் வாழ்கின்ற சக நண்பர்கள் நம்மைப் பற்றி என்ன நினைத்து விடுவார்களோ என்கின்ற அச்ச நிலை. இதே போன்று தான், சிறுவர் உரிமை, காலநிலை மாற்றம், விளையாட்டு, மனித உரிமை, விலங்குகளின் உரிமைகளைப் பேணுதல் என்பன தொடர்பாக வலைத்தளங்களில் உள்ள பல்வேறு குழுக்களில் நாம் அங்கத்துவத்தை பெற்றுக் கொள்கின்றோம். இந்த ஈர்ப்பினை சமூக ஊடகத் தளங்களின் தொழில்நுட்பம் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
கட்டாய செயற்பாடுகள் (Forced Actions) :
சமூக ஊடகத் தளங்கள் எம் மீது கட்டாயத்தை திணிக்கும் சில ஏற்பாடுகளை தன்னகத்தே கொண்டிருப்பதை குறிக்கும். இத்தகைய கட்டாய ஏற்பாடுகள் மூலம் சமூக வலைத்தளங்களில் நாம் பிரவேசித்தாக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்த கட்டாய நிலை பல சந்தர்ப்பங்களில் ஏற்படுகின்றது.
கட்டாய நுழைவு (Forced registration): இது, இணையதளத்தில் சில முக்கியமான விடயங்களை பார்வையிட, வாசிக்க, பதிவேற்றம் செய்ய, தரவிறக்கம் செய்ய, பின்னூட்டல்களை பதிவிட கட்டாயமாக பதிவு செய்ய வேண்டி ஏற்படுவதை குறிக்கிறது. குறித்த தளம் கட்டாயம் உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள்… உங்களுக்கு ஒரு கணக்கு இல்லாவிட்டால் இப்போதே ஒன்றே ஆரம்பித்துக் கொள்ளுங்கள்… – Don’t Have an Account? Sign up! எனும் வாசகத்தை இணையதளத்தில் பல இடங்களில் நீங்கள் சந்தித்திருக்கலாம்.
இவ்வாறு பதிவு செய்வதன் மூலம் எமது தனிப்பட்ட தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. சில சந்தர்ப்பங்களில், குறித்த ஒரு சேவையை பெற்றுக் கொள்வதற்காக உங்களுடைய தொடர்புகளை பெறுவதற்கான அனுமதியை வழங்குங்கள் (Allow access to your contacts) எனக் கேட்கப்பட்ட அனுபவம் நம்மில் பலருக்கு இருக்கும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் அனுமதி வழங்காவிட்டால் குறித்த சேவை மறுக்கப்படும். அனுமதி வழங்கினால், நமது தனிப்பட்ட கணக்குகளில் உள்ள தொடர்புகள் யாவற்றுக்குமான நுழைவு குறித்த இணையதளத்துக்கு கிடைத்து விடுகிறது. இதனை Address book leaching என்பார்கள்.
பலவந்தமாக வெளிப்படுத்தல் (Forced Disclosure) : இது இணையதள பாவனையாளர்களிடம் தமது சுய விபரங்களைத் தருமாறு பலவந்தப்படுத்துவதை குறிக்கிறது. பல சந்தர்ப்பங்களில் இந்த அரிய வாய்ப்பினைத் தவற விட்டு விடாதீர்கள். இது உங்களுக்காகவே உள்ள ஒரு வாய்ப்பு (Don’t miss out on special rewards just for you!) போன்ற வாசகங்களை நாம் கண்டிருக்கலாம்.
கணினி விளையாட்டுக்கு தூண்டுதல் : இது இணையதளங்கள் தமது பயன்பாட்டாளர்களுக்கு கணினி விளையாட்டில் உள்ள சில குறிப்பிட்ட செயற்பாடுகளுக்கு இலவச அனுமதியை வழங்கி அதன் பின்னர் மற்றும் ஒரு கட்டத்திற்கு அவ்விளையாட்டினைக் கொண்டு நகர்த்துவதற்காக கடனட்டையை பயன்படுத்த தூண்டும். இத்தகைய தளங்கள் விளையாட்டில் ஈடுபடுபவர்களை மெய்மறக்கச் செய்து, ஒரு முக்கியமான கட்டத்துக்கு அழைத்துச் சென்று, அவர்களுக்கு ஆர்வமூட்டி, அடுத்த கட்டத்திற்கு நகர விடாமல் வெளியேறவும் விடாமல் கடனட்டையை பயன்படுத்தி ஒரு தொகை பணத்தைச் செலவிட்டு விளையாட்டில் தொடர்ந்தும் ஈடுபடத் தூண்டும். இந்த வளையத்தை சுற்றவிட்டுப் பாருங்கள்; வெற்றி வாகை சூடக் கூடியவர் நீங்களாகவும் இருக்கலாம் என பதிவிடப்பட்டிருக்கும். இதனை நம்பி சிலர் ஏமாந்து போவதுண்டு.
உள் நுழைவு (Logging in) : இது இணையதள பாவனையின் போது பயன்பாட்டாளர்கள் குறித்த சேவையொன்றைப் பெற்றுக் கொள்வதற்காக தம்மிடம் உள்ள ஏதாவது ஒரு கணக்கினை பயன்படுத்த வேண்டி ஏற்படுவதை குறிக்கும். Gmail, அல்லது பேஸ்புக் கணக்குகளை வழங்கி குறித்த சேவையை நாம் பெற்றுக் கொள்ள முடியும். அவ்வாறு வழங்கும் போது எமது ஜிமெயில் மின்னஞ்சலுடன் அல்லது பேஸ்புக் கணக்குடன் தொடர்புபட்ட சகல தனிப்பட்ட தகவல்களையும் குறித்த தளம் பெற்றுக் கொள்கின்றது.
Facebook, Google, Twitter, Tiktok ஆகிய கணக்குகளுக்குள் பிரவேசிக்கும் போது இவ்வாறு இடம் பெறுகிறது. இத்தகைய உத்திகளின் மூலம் எமது தனிப்பட்ட தகவல்களை திரட்டி தொழில்நுட்ப நிறுவனங்கள், பாரிய வர்த்தக நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், பிரச்சார நிறுவனங்கள் என்பனவற்றுக்கு வழங்கி விடுகின்றன. எனவே, அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த சேவையினை எமது தனிப்பட்ட கணக்குகளுக்கான நுழைவை வழங்காமல் பெற்றுக் கொள்ள முடியுமா என்பதை தேடிப் பார்க்க வேண்டியது கட்டாயமாகும்.
சிலவேளை ஒரு பத்திரம் ஒன்றை தரவிறக்கம் செய்வதற்காக எமது தனிப்பட்ட மின்னஞ்சல் கணக்கிலக்கத்தை கேட்கலாம். அவ்வாறு வழங்கி குறித்த பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு பதிலாக கூகுள் தேடுதல் மூலம் வேறு ஒரு இடத்திலிருந்து குறித்த பத்திரத்தை நாம் தரவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
(தொடரும்…)
– Vidivelli