கிழக்கு முஸ்லிம் கல்வி பேரவையால் ஏற்பாடு செய்யப்பட்ட மர்ஹும் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு கடந்த 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு, தெமட்டகொடவில் அமைந்துள்ள தாருல் ஈமான் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அறபு மொழி பீட முன்னாள் பீடாதிபதி, பேராசிரியர், மெளலவி எம்.எஸ். எம். ஜலால்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வரவேற்புரையை மட்டக்களப்பு கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் அன்ஸார் மெளலானா நிகழ்த்தினார். மர்ஹூம் கலாநிதி சுக்ரி பற்றிய நினைவுப் பேருரையை புரூனை நாட்டின் தாருஸ்ஸலாம் பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் பி. ஹுஸைன்மியா அவர்களும், கொழும்பு, மிஸ்காத் ஆய்வு நிலையத்தின் பணிப்பாளர் உஸ்தாத் எம். ஏ. எம். மன்ஸுர் அவர்களும் நிகழ்த்தினார்கள்.
இறுதியில் கலாநிதி சுக்ரி பற்றி எழுதப்பட்ட “கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி- இலங்கை முஸ்லிம்களின் புலமைச்சொத்து” என்ற நூலும், “கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரியின் ஆய்வுக் கட்டுரைகள் ‘ என்ற நூலும் சபையினர் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்பட்டன.
இந் நிகழ்வில், தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அறபு மொழி பீட முன்னாள் பீடாதிபதி, பேராசிரியர், மெளலவி. எம்.எஸ்.எம். ஜலால்தீன் அவர்கள் ஆற்றிய தலைமையுரையின் தொகுப்பு வருமாறு.
மர்ஹும் கலாநிதி சுக்ரி அவர்களின் இரு வரலாற்று சாதனைகள்.
வல்ல அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுகின்றான்.
“தான் நாடியவர்களுக்கு அவன் ஞானத்தை கொடுக்கிறான். (இத்தகு) ஞானம் எவர் கொடுக்கப்படுகிறாரோ, அவர் மிகப் பெரும் நன்மைகள் திட்டவட்டமாக கொடுக்கப்பட்டவராவார். எனினும், நல்லறிவுடையோர் தவிர (வேறு எவரும் இது பற்றி சிந்தித்து ) உபதேசம் பெறுவதில்லை. (அல் பகறா- 269).
இறைவன் அறிவு என்ற செல்வத்தை பொதுவாக எல்லா மனிதர்களுக்கும் வழங்கினாலும், ஞானம் என்னும் அவனது அரும் பொக்கிஷத்தை தான் நாடியவர்களுக்கு மட்டுமே வழங்குவதாக குறிப்பிடுவது, அந்த ஞானம் பெற்றவர்கள் இம்மையிலும் மறுமையிலும், குறிப்பாக இறைவனிடத்தில் மிகுந்த கெளரவம், ஈடேற்றம் பெற்றவர்கள் என்பதை சுட்டிக் காட்டவே. இவ்வாறு ஞானம் பெற்றவர்கள் தமது அறிவு, ஞானம் என்பவற்றை இறைவழியில் செலவிட்டு, இறை திருப்திகேற்ப மனித குலத்திற்கும், குறிப்பாக தன் வாழ்நாள் கால தனது சமுதாயத்துக்கும், தேவையுடைய வர்களுக்கும் பயன்படுத்துவார்கள். அவர்கள் ஈடேற்றம் பெற்றவர்கள் என்பதை குறிப்பிடுவதாக அல்குர்ஆன் அறிஞர்கள் கருதுகின்றனர்.
1940ம் ஆண்டு இலங்கையின் தென் மாகாணத்தில் உள்ள மாத்தறையில், ஒரு சராசரி வர்த்தக பின் புலத்தை கொண்ட குடும்பத்தில் பிறந்து, ஒரு கல்விமானாக, ஆலிமாக, கலாநிதியாக, பல்கலைக்கழக விரிவுரையாளராக, பன்னூல் ஆசிரியராக, ஆய்வாளராக, இலங்கையின் அதிஉயர் இஸ்லாமிய கல்வி நிறுவனமான பேருவளை ஜாமியா நளீமிய்யா கலா பீடத்தின் பணிப்பாளராக பல்வேறு பரிமாணங்களில் பரிணமித்து, கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதி தனது நிரந்தர உலகை நோக்கி பயணித்தார்கள் மர்ஹும், கலாநிதி எம். ஏ.எம். சுக்ரி அவர்கள். அவர் மரணித்த நாளின் ஐந்தாவது வருட நினைவு தினம் கடந்த 19 ஆம் திகதியாகும்.
இந்நிகழ்வுக்கு தலைமை தாங்கும் நான், கலாநிதி சுக்ரி அவர்களின் பல்வேறு வரலாற்று சாதனைகளில் என்னை மிகவும் கவர்ந்த இரண்டு சாதனைகளை மட்டும் கூறி விளக்க முயல்கிறேன்.
அச்சாதனைகளில் முதன்மையானது கலாநிதி சுக்ரி அவர்களின் தீர்க்கதரிசன சிந்தனையினால், அவர் பணிப்பாளராக அப்போது கடமையாற்றிய பேருவளை ஜாமியா நளீமிய்யா கல்வி நிறுவனத்தினால் 1986ம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை காலனித்துவ ஆட்சிக்கு முன்னைய காலங்களில் இருந்து தெளிவுற நிறுவும் Muslims of Sri Lanka – Avenues to Antiquity எனும் வரலாற்று நூலாகும்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, இந்நாட்டில் பல ஆயிரம் வருடங்களை கொண்டதாக காணப்பட்ட போதும், ஆங்காங்கு இவ்வரலாறு சிதறிக் கிடந்த போதும், உள்நாட்டு வெளிநாட்டு வரலாற்று ஆய்வாளர்களால் நிச்சயித்து கூறப்பட்ட போதும், மிகவும் நிதர்சனமான வரலாற்று சான்றுகள் பல காணப்பட்ட போதும் 1986ம் ஆண்டில் Muslims of Sri Lanka நூல் வெளிவரும் வரை அவ்வரலாறு இவ்வாறு மிகவும் கச்சிதமாக ஆய்வு செய்யப்பட்டு எழுதப்படவில்லை என்பதே, கலாநிதி சுக்ரியின் இந்நூலாக்கப் பணி வரலாற்று சாதனையாக கருதப்படுவதன் காரணமாகும்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாற்று தேக்கம் பற்றி சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பே, இலங்கையில் பிரசித்தி பெற்ற கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி, திரித்துவ கல்லூரி (Kingwood College, Trinity College) போன்ற பிரபலமான கல்லூரிகளை நிறுவிய இலங்கையரான அறிஞர் லூயிஸ் எட்மண்ட் பிளாஸ் (Louis Edmond Blaze 1861-–1951) என்பவர் அன்றைய காலகட்டத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.
“Why does not a patriotic member of the large community of Moors in Ceylon write an accurate and comprehensive history of his community?.
The works involves a good deal of patient research, keen interest and cool judgement. But the end will repay the labour devoted to it. There need of an authentic history, there is plenty of material available, and the story is of romantic as well as of historical interest.”
“இலங்கையில் வாழும் மிகவும் பரந்த முஸ்லிம் சமூகத்தில் உள்ள தன் இனப்பற்று கொண்ட ஒருவராவது தனது சமூகத்தின் நிதர்சனமான, விசாலமான வரலாற்று ஆய்வை மேற்கொண்டு எழுதாமல் இருக்கின்றனர். இவ்வரலாற்று தேடலும், அதன் எழுத்தால் கமழும் பொறுமையான ஆய்வுத் தேடல், உணர்ச்சி மிகுந்த ஆர்வம், பக்கச்சார்பற்ற முடிவுகளை அடிப்படையாக கொண்டதாகும்.
எனினும் அதன் முடிவு அதற்காக தம்மை அர்ப்பணித்தவர்களுக்கு மிகவும் பெறுமதி வாய்ந்த வெற்றியை தரக் கூடியதாகும். அதற்காக அங்கீகாரம் பெற்ற ஒரு வரலாறு எமக்கு தேவைப்படுகிறது. இவ்வரலாற்று ஆய்வுக்கு தேவையான போதுமான வளங்கள் காணப்படுகிறது.” என்று அப்போது குறிப்பிட்டார்.
மற்றொரு வரலாற்று ஆய்வாளரான பேராசிரியர் டி. பி. எச். அபேசிங்க (T.B.H. Abeysingha) என்பவர் Muslims of Sri Lanka (1986) நூலிலேயே பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
“16, 17ம் நூற்றாண்டுகளில் காணப்பட்ட இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை எழுத முற்படும் எந்த ஆய்வாளரும் இரண்டு சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. முதலாவது சவால், சிங்கள மக்களுக்கு அவர்களுக்கே சொந்தமான வரலாற்று நூல்களான மகாவம்சம், குல வம்சம், ரஜவலிய போன்ற நூல்களும், தமிழ் மக்களுக்கு அவர்களுக்கே சொந்தமான “யாழ்ப்பாண வைபவமாலை” என்ற நூலும் காணப்படும் போது, இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு அவர்களுக்குரிய சொந்தமான, தனித்துவமான நூல்கள் எதுவும் காணப்படாதது முதல் பிரச்சினையாகும். வரலாற்று தகவல்களற்ற சமூகமாக அவர்கள் காணப்படுகின்றார்கள். மற்றொரு முக்கிய பிரச்சினை, மேற்கூறிய கால கட்டத்தைப் பொறுத்தவரையில் அக்கால முஸ்லிம்கள் பற்றிய தகவல்கள் யாவும் முஸ்லிம்களின் பகிரங்க எதிரிகளாக செயல்பட்ட போர்த்துக்கேயரின் வரலாற்று ஆவணங்களில் இருந்தே பெற வேண்டியுள்ளது.
இவ்வாறான பிறமத வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துக்கள், கலாநிதி சுக்ரி அவர்களை சென்றடைந்ததும், அதன் தாக்கம் அவருள் ஏற்பட்டதும் உடனடியாக செயற்பாட்டில் சுக்ரி அவர்கள் இறங்கியதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.
நானறிந்த வகையில் கலாநிதி சுக்ரி அவர்கள் 1980, 1981ம் ஆண்டுகளில் தான் ஜாமியா நளீமிய்யாவுக்கு ஒரு நிரந்தர பணிப்பாளராக கடமையேற்கின்றார். ஏனெனில் களனி பல்கலைக்கழகத்தில் ஒரு மாணவனாக நான் 1977ம் ஆண்டில் காலடி வைத்தபோது, கலாநிதி சுக்ரி அவர்கள் தனது கலாநிதி (PhD) கற்கையை பிரித்தானியாவில் உள்ள எடின்பரோ (University of Edinburgh) பல்கலைக்கழகத்தில் பூரணமாக முடித்து விட்டு, 1976ம் ஆண்டில் தனது விரிவுரையாளர் பதவியை தொடர்வதற்காக இணைந்து இருந்தார்
அவரது மாணவராக 1980 ஆரம்ப கால கட்டம் வரை களனி பல்கலைக்கழகத்திலேயே தொடர்ந்த நான்,1980 இல் எனது பீடத்தின் தமிழ் மொழி பேசும் மாணவர்கள் அனைவரையும், களனி பல்கலைக்கழகத்திலிருந்து பேராதனை பல்கலைக்கழகத்திற்கு கல்வி அமைச்சு மாற்றியது. கலாநிதி சுக்ரி அவர்கள் பேராதனை பல்கலைக்கழகத்தில் கடமையாற்ற விரும்பாமல், பல்கலைக்கழக தொழிலையே கைவிட்டு, ஜாமியா நளீமிய்யாவில் நிரந்தரமாக இணைந்து கொண்டார். அவ்வாறு இணைவதற்கு நளீமிய்யாவின் ஸ்தாபகர் மர்ஹும் நளீம் ஹாஜியார் அவர்களின் பலத்த வேண்டுகோளும், அதை தட்டிக் கழிக்க முடியாத நிலையில் கலாநிதி சுக்ரி அவர்கள் இருந்தமையும் வரலாற்றில் ஆழமாக பதியப்பட்டுள்ளது.
1980ம் ஆண்டுகளில் இணைந்த சுக்ரி அவர்கள் தனது பணிப்பாளர் பதவி காலத்தில் ஆறு வருடங்களுக்குள்ளாகவே Muslims of Sri Lanka நூலை வெளியிடும் அளவுக்கு, அவ்வரலாறு எழுதப்படவேண்டும் என்ற பேரவா உள்ளத்தில் ஆழமாகப் பதிந்து இருந்தது.ஏனெனில் அப்போதைய காலகட்டத்தில் ஜாமியா நளீமிய்யாவில் நானும் (1977 -–1979) தற்காலிக விரிவுரையாளராகக் கடமையாற்றினேன்.
இலங்கை முஸ்லிம்களின் வரலாறு எழுதப்படவேண்டும் என்ற ஒரு பலத்த முனைப்பு, அப்போதைய காலகட்டத்தில் கலாநிதி சுக்ரியைத் தவிர நளீமிய்யாவின் நிர்வாகத்தில் அல்லது கல்விப் பணியில் உள்ள யாரிடமும் ஏற்பட வாய்ப்பில்லை. எனவே, இவ்வாறு எழுதப்படவேண்டும் என்ற உரத்த குரல் கலாநிதி சுக்ரி அவர்களிடம் இருந்துதான் வொளிப்பட்டிருக்க வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதை முடித்து வைக்கும் ஆற்றலும் அவருக்குத்தான் இருந்தது.
வரலாறு எழுதும் பணியில்
கலாநிதி சுக்ரி.
Muslims of Sri Lanka என்ற நூல் சுமார் 490 பக்கங்களில் 19 வரலாற்றுத்துறை அறிஞர்களின் பங்களிப்போடு, அவர்கள் ஒவ்வொருவரது தனிப்பட்ட தலைப்புகளிலான கட்டுரைகள், அதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு வார கால ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டு, கட்டுரைகள் சகலராலும் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, இறுதியில் கலாநிதி சுக்ரி தலைமையிலான வெளியீட்டு குழுவினால் மீளாய்வு (Editing) செய்யப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட ஒரு முழுமை பெற்ற நூலாகும்.
இந்நூலில் ஒவ்வொரு தலைப்பிலும் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பித்துள்ள ஆய்வாளர்கள் பின்வருமாறு.
1. Dr. (Prof.) T.B.H. Abeysingha.
2. Dr. (Prof.) C.R. De Silva.
3. Dr. (Chair) K.M.De Silva.
4. Dr. (Mrs.) Lorna Devaraja
5. Dr. (Prof.)Karl Gooneesrdena
6. Dr. (Prof.) K. Indrapala
7. Dr. (Prof.)Kiribamune
8. Dr. (Prof.)D.A. Kotalawela
9. Dr. (Prof.) Vijaya Samaraweera
10. Dr. S. W. R. De A. Samarasingam
11. Dr. (Prof.) B.A. Husainmiya.
12. Mr. K.D.G. Wimalaratna
13. Dr. A.C.L. Ameer Ali
14. Mr. Dawood Fazal.
15. Mr. H.M.Z. Farooque
16. Dr. Maruf A. Mohammed.
17. Barister-at-law Moosajee
போன்றவர்களாகும்.
இலங்கை பல்கலைக்கழகங்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் அக்காலகட்டத்தில் வரலாற்றுத் துறையில் பேராசிரியர்களாக கடமையாற்றிய இவர்களின் கல்வித் தகைமைகளையும், வரலாற்று துறையில் கொண்ட ஈடுபாட்டையும் நாம் ஆய்வு செய்யும் போது, இலங்கை வாழ் மூவின மக்களைப் பற்றி வரலாறு எழுதுவதற்கு வேறு யாரும் தேவையில்லை.
இவர்களே அதற்குரியவர்கள் என சான்றுபடுத்துமளவுக்கு, வரலாற்றுத் துறை பேராசிரியர்களையும், ஆய்வாளர்களையும் ஒருமுகப்படுத்தி ஆய்வு செய்து, இந்நூலை கோர்வை செய்து வெளியிட்டதன் மூலம் கலாநிதி, “கலாநிதி சுக்ரி அவர்கள் இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றை நூலாக வெளியிடுவதில் பூரண வெற்றி பெற்றுள்ளார்” என்று சொல்லலாம்.
இலங்கை முஸ்லிம்களின் அக்கால கட்ட கல்வித் துறை செயல்பாடுகளை நோக்கும் போது, வேறு யாரும் இவ்வாறான அடைவை பெற்றிருக்க முடியாது. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு, மிகவும் அதிகளவிலான நிதி வசதிகளும், மற்றும் பல்வேறு துறைசார் ஆதரவும் பங்களிப்பும் தேவையாகும்.
கலாநிதி சுக்ரி அவர்களோடு அப்போது ஒன்றித்து செயற்பட்ட மர்ஹும் நளீம் ஹாஜியார் அவர்கள், இவ்வாறான தாராள நிதி வசதி மற்றும் பங்களிப்புகளை அப்போது பூரணமாக வழங்கியமை, வல்ல அல்லாஹ்வின் பேரருள் என்றுதான் சொல்ல வேண்டும்.
எது எப்படியோ, கலாநிதி சுக்ரி அவர்களின் எண்ணக்கரு, நளீம் ஹாஜியார் போன்ற தாராள தன்மையுடையவர்களின் பங்களிப்பினால், இலங்கை முஸ்லிம்களின் வாழ்வில் என்றும் மறக்க முடியாத இந்த அரும் பொக்கிஷம் Muslims of Sri Lanka -Avenues to Antiquity ( இலங்கை முஸ்லிம்கள் – மரபை காணும் வழிகள்) நூல் எமக்கு இன்று கிடைத்துள்ளது என்று நாம் கூறலாம்.
இரண்டாவது வரலாற்று சாதனை
கலாநிதி சுக்ரி அவர்களினால் இலங்கை முஸ்லிம்களின் மறுமலர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்ட மற்றொரு வரலாற்று சாதனைதான், நளீம் ஹாஜியாரின் எண்ணக்கருவில் உருவாகி, கலாநிதி சுக்ரி அவர்களினால் செயல்படுத்தப்பட்ட “இலங்கை முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கம்” ஆகும். கலாநிதி மர்ஹும் சுக்ரி அவர்கள் தனியே நின்று ஓரிரு விடயத்தில் மாத்திரம் கவனம் செலுத்தி தனது பணியை சுருக்கிவிடவில்லை. மாறாக, சமூகப் பணிகளில் பல்வேறு தருணங்களில் தன்னை ஈடுபடுத்தி, அவற்றின் ஊடாக பாரிய அளவில் தனது பங்களிப்பை நல்கியுள்ளார்கள்.
பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் ஏழை முஸ்லிம் மாணவர்களின் பிரச்சினைகள், கல்வியை தொடர்வதில் அவர்கள் எதிர்நோக்கும் இடையூறுகள் என்பன பற்றி 1980ம் ஆண்டளவில் மிகவும் ஆழமாக சிந்தித்தவர் மர்ஹும் நளீம் ஹாஜியார் அவர்களாகும்.
ஒருநாள் இரவு கலாநிதி சுக்ரி அவர்களை தூக்கத்தில் இருக்கும் போது தொலைபேசியில் அழைத்த நளீம் ஹாஜியார் அவர்கள் “இலங்கை முஸ்லிம் சமூகம் கல்வியில் மிகவும் பிற்போக்காக இருப்பது எனக்கு மிகவும் கவலையைத் தருகிறது. பல்கலைக்கழகத்திற்கு செல்லும் முஸ்லிம் மாணவர்கள் கல்வியைத் தொடர வசதியின்றி, அவர்களது கல்வியை இடைநடுவில் நிறுத்தி விடுகிறார்கள். இந்த நிலை தொடர்ந்தால் எங்களது சமூகத்தின் எதிர்காலம் எப்படி அமையக் கூடும் என எனக்கு கவலையாக உள்ளது. இதற்கு ஏதாவது நல்ல ஒரு திட்டத்தை வகுத்து, செயற்படுத்த வேண்டும்’’ என வேண்டிக் கொண்டார்.
உண்மையில் இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை, குறிப்பாக பல்கலைக்கழக பிரவேசமும் அதை தொடர்வதில் உள்ள பிரச்சினைகளும் மிகவும் மோசமான நிலையில் அப்போது இருந்தது. இலங்கையில் இருக்கும் ஏனைய சமூகங்கள் கல்வியில், குறிப்பாக பல்கலைக்கழக பிரவேசத்தில் அதி உயர்ந்த நிலையில் இருந்த அக்கால கட்டத்தில் முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக பிரவேசம் பெரும் வீழ்ச்சியை கண்டிருந்தது என்பதை பின்வரும் தரவுகள் எமக்கு தெளிவுபடுத்துகின்றன.
1942ல் பல்கலைக்கழகத்திற்கு அனுமதிக்கப்பட்ட மொத்தம் 904 மாணவர்களில் 25 மாணவர்களே (2.7%) முஸ்லிம் மாணவர்களாகும். அதேபோல் 1958ல் பல்கலைக்கழக அனுமதி பெற்ற மொத்தம் 2950 மாணவர்களில் 72 மாணவர்களே (2.6%) முஸ்லிம் மாணவர்களாகும். 1965ல் முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக பிரவேசம் 2.0% வீதமாகவே காணப்பட்டது.
இவ்வாறான பல்கலைக்கழக அனுமதி, முஸ்லிம்களின் இன விகிதாசாரத்தைவிட (அப்போது 5.0%) பின்தங்கிய நிலையில் இருந்தமை மட்டுமன்றி, பல்கலைக்கழக அனுமதி பெற்ற ஏழை முஸ்லிம் மாணவர்கள் தமது கல்வியைத் தொடர போதிய நிதி வசதி இல்லாமல், அல்லலுறுவதை கண்டுதான் மர்ஹும் நளீம் ஹாஜியார், சுக்ரி அவர்களிடம் இதற்கு ஒரு வழியை காணுமாறு அன்று வேண்டிக் கொண்டார்கள்.
கலாநிதி சுக்ரி அவர்களும் மர்ஹும் நளீம் ஹாஜியார் இருவரினதும் அரும் முயற்சியால் 1980ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதே “இலங்கை முஸ்லிம் மறுமலர்ச்சி இயக்கமா”கும்.
இவ்வியக்கம் தோன்றி, புலமைப் பரிசில் வழங்குதல், பாட விதானங்களில் உயர் தேர்ச்சி அடையச்செய்தல், செய்தித் தாள் வெளியிடுதல் போன்ற ஏனைய சமூகப் பணிகளில் ஈடுபாடு காட்டியது. அதுமாத்திரமன்றி, இவ்வியக்கத்தின் மூலம் இக்ரஹ் தொழில்நுட்ப கல்லூரி ஒன்றும், முஸ்லிம்களுக்கென தொடங்கி வைக்கப்பட்டது. ஜித்தாவிலுள்ள இக்ரஹ் நலன்புரி நிறுவனத்துக்கும் இலங்கை இக்ரஹ் தொழில்நுட்ப கல்லூரிக்கும் இடையே பாலமாக இருந்து செயல் பட்ட கலாநிதி சுக்ரி அவர்கள், அவரது மரணம் வரையிலும் அதன் பொது நிலையப் பொறுப்பாளராக (Custodian) கடமையாற்றியமை முஸ்லிம் சமூகத்தால் என்றும் மறக்க முடியாத விடயமாகும்.
இதன்படி நோக்கும் போது ” இலங்கை முஸ்லிம்களின் உயர் கல்வி வரலாற்றில் “இலங்கை முஸ்லிம் கல்வி மறுமலர்ச்சி இயக்கம்” தோன்றியதன் பின்னர், குறிப்பாக 1987ஆம் ஆண்டு முஸ்லிம் மாணவர்களின் பல்கலைக்கழக நுழைவு வீதம் 8.75 வீதமாக அதிகரித்தது. இவ்வளர்ச்சி இதுவரை முஸ்லிம்களின் உயர் கல்வியில் ஈட்டப்பட்ட உயர் மட்ட சாதனை எனக் கருதப்படுகிறது.
மர்ஹும், கலாநிதி சுக்ரி அவர்களின் அறிவும், ஆற்றலும், புலமையும், பன்மொழி விருத்தியும், சமூக செயற்பாடுகளும், ஒழுக்க விழுமியங்களும் இலங்கை முஸ்லிம்களின் மத்தியில் அதி உயர்வான அம்சங்களாக, சமூக வெற்றிக்கான வழிகாட்டிகளாக மதிக்கப்பட்டாலும், நான் இங்கு விபரித்த இரண்டு சாதனைகளும், இலங்கை முஸ்லிம்களின் கல்வி, வரலாறு, சமூகப் பாதுகாப்பு என்பவற்றில் அதிக தாக்கம் செலுத்திய சாதனைகளாக வரலாறு பதிவு செய்யும். இன்ஷா அல்லாஹ். வல்ல அல்லாஹ் அன்னாருக்கு மறுமையில் ஜன்னத்துல் பிர்தௌஸ் சுவர்க்கம் கிடைக்க நாமனைவரும் துஆ செய்வோம்.
-Vidivelli