அரபாவிலிருந்து
றிப்தி அலி
“லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்
லப்பைக் லா ஷரீக்க லக்க லப்பைக்
இன்னல் ஹம்த வந்நிஃமத்த லக்க வல் முல்க் லா ஷரீக லக்”
இந்த அழகிய தல்பியாவுடன் இஸ்லாத்தின் ஐந்தாவதும் இறுதியுமான ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக உலகளாவிய முஸ்லிம்கள் இன்று (05) வியாழக்கிழமை அரபா மைதானத்தில் ஒன்று கூடுகின்றனர்.
இஸ்லாமிய நாட்காட்டியில் மிகச் சிறந்த நாட்களில் ஒன்றாக துல்ஹஜ் மாதத்தின் 9ஆவது நாள் காணப்படுகின்றது. இதனை அரபா தினம் என்று அழைப்பர்.
இத்தினத்தில் அரபா மைதானத்தில் தரித்தல் என்பது ஹஜ் கடமைகளில் பிரதானமான ஒன்றாகும். ஹஜ்ஜுக்காக வந்த சமயத்தில் நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையினால் குறித்த தினத்தில் இந்த மைதானத்தில் தரிக்க முடியாத ஹாஜிகளை விசேட உலங்கு வானூர்தியில் சவூதி அரசாங்கம் அழைத்து வருவதும் வழமையாகும்.
அரபா பேருரை
இத்தினத்தில் அரபா மைதானத்திலுள்ள நமீரா பள்ளிவாசலில் இடம்பெறவுள்ள இந்த வருட அரபா பேருரையினை அஷ்ஷெய்க் கலாநிதி சாலிஹ் பின் ஹுமைதி நிகழ்த்தவுள்ளார்.
புனித ஹரம் ஷரீபிலுள்ள ஒன்பது பேஷ் இமாம்களில் ஒருவரான இவர், 2002ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையான காலப் பகுதியில் சவூதி அரேபியாவின் மஜ்லிஸில் ஷூராவின் சபாநாயகராகவும் பணியாற்றியுள்ளார்.
அரபு மொழியில் இடம்பெறும் இந்த உரை ஆங்கிலம், உருது, பிரெஞ்சு, ஹிந்தி, தமிழ், பேர்சியன் என சுமார் 30க்கு மேற்பட்ட மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்படவுள்ளமை குறிப்பி டத்தக்கது.
15 இலட்சம் பேர் பங்கேற்பு
இந்த வருடம் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக சுமார் 15 இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்கள் சவூதி அரேபியாவிற்கு வந்திறங்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் இன்று மாலை வரை அரபா மைதானத்தில் தரிக்கவுள்ளனர்.
அரபா மைதானப் பிரதேசத்தில் தற்போது அதிக வெப்ப நிலை நிலவுகின்ற காரணத்தினால் அரபா தினத்தன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 4 மணி வரையான காலப் பகுதியில் ஹாஜிகள் அனைவரும் கூடாரங்களுக்குள்ளேயே இருக்குமாறு சவூதி அரேபிய அரசாங்கத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலை
அதேவேளை, உயர் வெப்ப நிலை காரணமாக நோய்களுக்குள்ளாகின்ற ஹாஜிகளுக்கு உதவுவதற்காக 40 அரச நிறுவனங்களைச் சேர்ந்த 250,000 பேர் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, நாளை (06) வெள்ளிக்கிழமை அதிகாலை சுபஹ் தொழுகை முதல் ஞாயிற்றுக்கிழமை (08) நண்பகல் லுஹர் தொழுகை வரை இந்த பல இலட்சக்கனக்கான ஹாஜிகள் மினாவில் தங்கியிருந்து மூன்று ஜமராத்களுக்கு தலா 49 கற்களை எறியவுள்ளனர்.
இந்த மூன்று நாட்களும் மினாவில் தற்காலிகமாக அமைக்கப்படுகின்ற கூடாரங்களிலேயே அனைத்து ஹாஜிகளும் தங்குவது வழமையாகும். இதனால், உலகளாவிய ரீதியில் மிகப் பெரிய கூடார நகரம்- மினா என்று அழைக்கப்படுகிறது.
இங்கு சவூதி அரேபியாவின் பல நிறுவனங்களினால் அதி சொகுசு கூடாரங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இலங்கை யாத்திரிகர்களுக்கு திருப்திகரமான வசதிகள்
கடந்த காலங்களில் இலங்கை ஹாஜிகள் மினா கூடாரங்களில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தனர். இதனை தவிர்க்கும் நோக்கில் சவூதி அரேபியாவின் றியாதிலுள்ள இலங்கை தூதுவராலயம், ஜித்தாவிலுள்ள கொன்சியூலர் ஜெனரல் அலுவலகம், அரச ஹஜ் குழு மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியன இணைந்து பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளன.
இவர்களுக்கு தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் மக்காவிலுள்ள இலங்கையினை பிறப்பிடமாகக் கொண்ட சவூதிப் பிரஜையான அஷ்ஷெய்க் சாதீக் ஹாஜியார் வழங்கி வருகின்றார்.
இந்த வருடம் இலங்கையிலிருந்து வந்துள்ள 3,534 ஹாஜிகளும் B தர கூடாரங்களிலேயே அரபாவிலும் மினாவில் தங்கவைக்கப்படுகின்றனர். இலங்கை ஹஜ் வரலாற்றில் முதற் தடவையாக அனைத்து ஹாஜிகளுக்கும் ஒரே தர கூடாரத்தில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.
அத்துடன் ‘அல் பைத்’ எனும் சவூதியின் தனியார் நிறுவனத்தினாலேயே இலங்கையைச் சேர்ந்த அனைத்து ஹாஜிகளுக்குமான ஹஜ் சேவைகள் வழங்கப்படுகின்றது. கடந்த காலங்களில் இலங்கை ஹாஜிகளுக்கு பல்வேறு நிறுவனங்களினால் பல்வேறு தரத்திலான சேவைகள் வழங்கப்பட்டமையினால் அசௌகரியங்களை எதிர்நோக்கியமை சுட்டிக்காட்டத்தக்கது. இவற்றினை தவிர்க்கும் முகமாகவே அனைத்து இலங்கை ஹாஜிகளுக்கும் ஒரே தரத்திலான சேவை அரபா மற்றும் மினா ஆகிய இடங்களில் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ஹஜ் தூதுக் குழு விஜயம்
மினா மற்றும் அரபா ஆகிய இடங்களில் இலங்கை ஹாஜிகளுக்காக தயார்படுத்தப்படுத்தப்பட்டிருந்த கூடாரங்களை இலங்கை ஹஜ் தூதுக் குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டனர்.
இந்த மினா கூடாரத்திற்குள் கடந்த 03ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு இலங்கை ஹாஜிகள் அனைவரும் அழைத்துச் செல்லப்பட்டனர். இக்கூடாரங்கள் மிகவும் சிறப்பாக அமையப் பெற்றுள்ளதாக ஹஜ் முகவர் நிறுவன உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் இலங்கை ஹாஜிகளுக்கான இறுதிக் கட்ட ஏற்பாடுகள் தொடர்பில் இலங்கை ஹஜ் தூதுக் குழுவின் பிரதிநிதிகளுக்கும் ஹஜ் முகவர் நிறுவன பிரதிநிதிகளும் இடையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டுள்ளன.
சம்மாந்துறை யாத்திரிகர் மரணம்
இதேவேளை, ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக சம்மாந்துறையிலிருந்து சென்ற 65 வயதான ஆதம்பாவா அச்சிமுஹம்மத் கடந்த 2ஆம் திகதி திங்கட்கிழமை மதீனாவில் காலாமானர்.
சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகத்தில் சமாதான கல்வி உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வுபெற்ற இவர், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளருமாவார்.
ஆறு பிள்ளைகளின் தந்தையான இவர், தனது மனைவியுடன் ஹஜ் கடமைக்காக சென்ற சமயத்திலேயே காலமானார். இவருடைய ஜனாஸா மதீனாவிலுள்ள ஜன்னதுல் பக்கியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த வருடம் புனித ஹஜ் கடமையினை நிறைவேற்ற வருகின்ற ஹாஜிகளின் நலன்கருதி பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை சவூதி அரேபிய அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.
குறிப்பாக ஹஜ் விசா இன்றி எவரும் மக்கா, அரபா, முஸ்தலிபா மற்றும் மினாவிற்குள் நுழைய முடியாது என்ற கண்டிப்பான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மேற்கொள்ளப்படுகின்ற திடீர் சோதனையின் போது சவூதி அரசாங்கத்தினால் ஹாஜிகளுக்காக வழங்கப்பட்ட ‘நுஸுக்’ எனும் அடையாள அட்டை பரிசோதிக்கப்படுகின்றது.
ஹஜ் விசாவிற்காக சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டு நுஸுக் அடையாள அட்டையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த அடையாள அட்டையில்லாதவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராகவும், அவர்களை அழைத்து வந்தவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சவூதி அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதற்கு மேலதிகமாக ஹாஜிகளின் நலன்புரி விடயத்தில் சவூதி அரசாங்கமும் அந்நாட்டு மக்களும் அதிக அக்கறை செலுத்தி வருகின்றனர். ஹாஜிகளுக்குத் தேவையான பல வசதிகள் இலவசமாக வழங்கப்பட்டு வருவதை நேரடியாக அவதானிக்க முடிந்தது.
மன்னரின் விருந்தினர்கள்
இதேவேளை, புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக சுமார் 2,443 பேர், இரண்டு புனித ஸ்தலங்களின் பாதுகாவலரும் சவூதி அரேபிய மன்னருமான சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சவூதின் விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆயிரம் பேர் பலஸ்தீனத்தைச் சேர்ந்தவர்களாவார். ஏனையோர் 100 நாடுகளிலிருந்து அழைக்கப்பட்டுள்ளனர். இதில் மாற்றுத் திறனாளிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
மன்னரின் விருந்தினராக ஹஜ் கடமையை நிறைவேற்ற 20 இலங்கையர்களுக்கு இந்த வருடம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியின் சிபாரிசுக்கமையவே இவர்களுக்கான இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
பலஸ்தீனர்களுக்கும் வாய்ப்பு
அதேவேளை, பலஸ்தீன தியாகிகளுக்காக அவர்களது குடும்பத்தினர்கள் மன்னரின் விருந்தினர் திட்டத்தின் கீழ் இந்த வருடம் ஹஜ் கடமையினை நிறைவேற்றுகின்றனர்.
சவூதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசரும் பிரதமருமான முஹம்மத் பின் சல்மானின் வழிகாட்டலில் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சர் அஷ்ஷெய்க் கலாநிதி அப்துல் லதீப் பின் அப்துல் அஸீஸ் அல் ஆல்ஷெய்கின் தலைமையில் சவூதி அரேபியாவின் இஸ்லாமிய விவகார, தஃவா மற்றும் வழிகாட்டல் அமைச்சினால் மன்னரின் ஹஜ் விருந்தாளிகள் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
மன்னரின் விருந்தாளிகள் ஹஜ் மற்றும் உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்கு மேலதிகமாக மக்கா நகரிலுள்ள பல வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
கஃபாவினை பேர்த்தியுள்ள கறுப்பு நிற கிஸ்வா துணி தயாரிக்கும் இடம் மற்றும் ஹிரா குகைக்கு அருகிலுள்ள வஹி கண்காட்சியகம் ஆகியன முக்கிய இடங்களாகும். இது போன்று மதீனாவிலும் வரலாற்று சிறப்பு மிக்க பல இடங்களுக்கும் மன்னரின் விருத்தினர்கள் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
மன்னரின் ஹஜ் விருந்தினர் நிகழ்ச்சித் திட்டத்தினைப் போன்று உம்ரா நிகழ்ச்சித் திட்டமும் கடந்த 2024ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் வருடாந்தம் 1,000 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படுகின்றது.
ஹஜ் ஆய்வரங்கு
ஹஜ் கடமைக்கு சமாந்தராக 49ஆவது ஹஜ் ஆய்வரங்கும் சவூதி அரேபிய அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சர் கலாநிதி தௌபீக் அல் ராபியாவின் சிறப்புரையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆய்வரங்கில் பல நாட்டு இளவரசர்கள், அமைச்சர்கள், கல்வியியலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதன்போது ஹஜ் தொடர்பான பல்வேறு தலைப்புக்களில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த வருட ஹஜ் கடமையினை வெற்றிகரமாக நிறைவுசெய்ய சவூதி அரேபிய அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.
இதற்கு தேவையான ஒத்துழைப்புக்களை அனைத்து ஹாஜிகளும் வழங்குவதுடன் இதற்காக பிரார்த்திக்க வேண்டியது அனைவரதும் கடமையாகும்.- Vidivelli