ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யும் நோக்கம் தற்போது கிடையாது
கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய
(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)
ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்யும் நோக்கம் தற்போது கிடையாது. இருப்பினும் இந்த பரீட்சையால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைப்பதற்கான மாற்றுத்திட்டங்கள் 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அமுல்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சரும், பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
கல்வி மறுசீரமைப்புக்கான நடவடிக்கைகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வதற்கான தீர்மானம் தற்போதைய சூழ்நிலையில் எடுக்கப்படவில்லை. ஏனெனில் முழுமையான கல்வி மறுசீரமைப்புக்கும் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையினால் மாணவர்களுக்கு ஏற்படும் அழுத்தங்களை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளன. அந்த கொள்கைத் திட்டங்கள் 2028 மற்றும் 2029 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்படும்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவை விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு நீதிமன்றத்துக்கு நகர்த்தல் பத்திரம் ஒன்றை தாக்கல் செய்வதற்கு அமைச்சரவையில் கொள்கை ரீதியில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைக்கும் வரையில் அரச நிர்வாக கட்டமைப்பின் ஊடாக எவ்வித தீர்மானங்களையும் எடுக்க முடியாது.
ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக தரமுயர்த்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாங்களும் உள்ளோம். ஆசிரியர்களும் பட்டம் பெற வேண்டும். தேவையான பௌதீக மற்றும் மானிட வளங்களை வழங்காமல் பெயரளவில் மாத்திரம் தரமுயர்த்த முடியாது.
ஆகவே எதிர்வரும் காலப்பகுதிகளில் கட்டம் கட்டமாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.- Vidivelli