தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கு முரணாக கால அவகாசம் வழங்கியது ஏன்?
சந்தேகங்கள் எழுவதாகவும் முஜிபுர் ரஹ்மான் தெரிவிப்பு
(எம்.மனோசித்ரா)
கொழும்பு மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்வதற்கான தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடயத்தில் அரசாங்கம் கூறிய எதுவும் செல்லுபடியாகவில்லை. எவ்வாறிருப்பினும் தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பிற்கு முரணாக இரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொழும்பு மாநகரசபை மேயர் மற்றும் பிரதி மேயரை தெரிவு செய்வதற்கான தினம் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்கமைய எதிர்வரும் 16ஆம் திகதி இதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. அரசாங்கம் கூறியது எதுவும் இங்கு செல்லுபடியாகவில்லை. 50 சதவீதம் அல்லது அதற்கும் அதிக வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியாத சபைகளில் வாக்கெடுப்பின் மூலமாகவே பதவிகளுக்கான நியமனங்கள் தெரிவு இடம்பெறும் என்பதையே நாம் ஆரம்பத்திலிருந்து கூறிக் கொண்டிருக்கின்றோம்.
கொழும்பு மாநகர சபையில் ஜனநாயக ரீதியாக ஆட்சியமைப்பதற்கான சகல நடவடிக்கைகளையும் ஐக்கிய மக்கள் சக்தி முன்னெடுத்து வருகிறது. அதற்கமைய எமது வேட்பாளரை மேயராக நியமிக்க முடியும் என்று நம்புகின்றோம். எவ்வாறிருப்பினும் சதித்திட்டங்கள் மூலம் இந்த முயற்சிகளை முறியடிப்பதற்கு அரசாங்கம் முயற்சித்து வருகிறது. ஜனாதிபதி மீண்டும் சில குழுக்களை சந்தித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
எவ்வாறிருப்பினும் இது 16ஆம் திகதி வரை எதற்காக காலம் தாழ்த்தப்பட்டது என்ற சந்தேகம் எழுந்துள்ளது. தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட பின்னர் பெரும்பான்மை அற்ற சபைகளில் ஆட்சியமைப்பதற்கு ஒரு வாரம் மாத்திரமே கால அவகாசம் வழங்கப்பட்டது. அவ்வாறிருக்கையில் எதற்காக 16ஆம் திகதி வரை காலம் நீடிக்கப்பட்டது என்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதற்குள்ளும் அரசியல் தலையீடு காணப்படுகிறதா என்ற கேள்வியும் எழுகிறது.
மேயர் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பிலும், பிரதி மேயர் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பிலும் நியமிக்கப்படுவர். அரசாங்கம் ஏனைய விடயங்களில் செயற்படுவதைப் போன்று முகநூல் ஊடாக இந்த பதவிகளுக்கான நியமனங்களை வழங்க முடியாது. அதேபோன்று ஜனாதிபதி குறிப்பிட்டதைப் போன்று சட்ட விரோதமாக செயற்படவும் முடியாது என்றார்.- Vidivelli