புனித உம்ரா யாத்திரை விவகாரம்: பதிவுசெய்யப்படாத தரகர்களுடனான கொடுக்கல் வாங்கல்களுக்கு ஒருபோதும் பொறுப்பாக முடியாது
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் திட்டவட்டம்
உம்ரா கடமைகளை நிறைவேற்றுவதற்காக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்படாத ஏனைய தரகர்களுடனான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் திணைக்களம் ஒருபோதும் பொறுப்பேற்காது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பதிவு செய்யப்பட்ட முகவர்களுடன் மாத்திரம் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதில் பணிப்பாளர் மற்றும் ஹஜ் உம்ரா குழுவின் தலைவர் ஆகியோர் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
உம்ரா கடமைகளை மேற்கொள்ள உத்தேசித்துள்ளவர்கள் தங்களின் பயணத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக நாடும் முகவர் நிலையங்கள் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்துகொண்ட பின்னரே தங்களது கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவர்கள் தவிர்ந்த ஏனைய தரகர்களுடன் வைத்துக்கொள்ளும் எந்தவிதமான கொடுக்கல் வாங்கல்களுக்கும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை ஹஜ், உம்ரா குழு எந்த பொறுப்பினையும் ஏற்காது. அத்துடன், உம்ரா பயணத்தினை மேற்கொள்ள உத்தேசித்தவர்கள் 0112667909, 0112667901 எனும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு தங்கள் பயணிக்கவுள்ள முகவர் நிலையங்கள் தொடர்பான விளக்கங்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. -Vidivelli