அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீல் (நளீமி)
அரபா நாளில் நோன்பிருப்பது சுன்னத்தா இல்லையா என்ற ஒரு கருத்து வேறுபாடு உண்டு. இதனை யாரும் மறுப்பதற்கு இல்லை. ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைப் பொறுத்தவரையில் அந்த நாளில் நோன்பு நோற்பது தான் சிறந்தது என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடிகிறது.
ஆனால்,நோன்பு நோற்கத் தேவையில்லை என்று யாரும் கூறினால் அவர்களை யாரும் குறை கூற முடியாது. ஏனென்றால் இது இமாம்களுக்கு மத்தியில் இரு கருத்துக்களுக்கு இடம்பாடான விடயமாகும்.
அடுத்ததாக, அரபா தினம் எது என்பதைப் பொறுத்த வரையிலும் சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
மக்கா சென்றுள்ள ஹஜ்ஜாஜிகளுக்கான ஒன்பதாவது நாளான அவர்களது அரபா நாளைத் தான் உலகின் எல்லாப் பகுதிகளிலும் இருக்கும் முஸ்லிம்கள் தமக்கான அரபா நாளாக கணிக்க வேண்டும்; அந்த நாளில் தான் அவர்கள் அரபா நோன்பை நோற்க வேண்டும் என்ற ஒரு கருத்து உள்ளது.
சவூதி அரேபியாவில் இயங்கும் அறிவுபூர்வமான ஆய்வுகளுக்கும் ஃபத்வாவுக்குமான நிரந்தரமான குழு, பத்வாவுக்கான எகிப்தின் நிலையம் போன்ற நிறுவனங்களும், பிரபல அறிஞர்களான ஷெய்க் அப்துல் அஸீஸ் பின் பாஸ், ஷெய்க் ஹுசாம் அஃபானா, ஷெய்க் சுலைமான் பின் மாஜித் உள்ளிட்ட இன்னும் பலரும் இக்கருத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு மாற்றமான கருத்துக் கொண்டிருப்பவர்களும் சட்ட அறிஞர்களுக்கு மத்தியில் இருக்கின்றனர். அதாவது உலகின் வெவ்வேறு பகுதிகளில் வித்தியாசமான நாட்களில் துல்ஹிஜ்ஜா மாதத்திற்கான பிறை தென்பட்டிருக்கலாம். எனவே ஒவ்வொரு நாட்டிலும் இருப்போர் தமது பிரதேசத்தின் படியான ஒன்பதாவது நாளையே அரபா தினமாக கருத வேண்டும் என்றும் அந்த நாளில் தான் அவர்கள் நோன்பு வைக்க வேண்டும் என்றும் அந்த சட்ட அறிஞர்கள் கூறுகின்றனர்.
ஐரோப்பிய ஃபத்வா பேரவையும், ஃபத்வா மையமும் போன்ற நிறுவனங்களும் முஹம்மது பின் சாலிஹ் அல்உதைமீன், ஷெய்க் அப்துல்லாஹ் பின் ஜப்ரின், கலாநிதி ஹானி பின் அப்துல்லாஹ் அல் ஜுபைர், பேராசிரியர் அஹ்மத் அல்ஹஜ்ஜி அல்குர்தி மற்றும் பேராசிரியர் டாக்டர் காலித் அல் முஷைகீஹ் போன்ற இன்னும் பல அறிஞர்களும் இந்தக் கருத்தை கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமிய சட்ட மரபில் இதில் மாத்திரமன்றி இன்னும் பல விடயங்களில் இவ்வாறான கருத்து வித்தியாசங்கள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அல்லாஹ்வும் ரசூலும் இவற்றில் திட்டவட்டமான முடிவுகளை தராத வரைக்கும் நாம் திட்டவட்டமாக எதனையும் கூறுவதை முற்றும் முழுதாக தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
கருத்து முரண்பாடுகள் இருப்பது இஸ்லாமிய சட்ட மரபின் செழுமையையும் விரிந்த தன்மையையும் காட்டுமே தவிர அது முஸ்லிம் சமூகத்தின் முரண்பாட்டுக்கான வழிகளாக இருக்கக் கூடாது.
“ஓர் ஆட்சியாளர் ஆட்சி செய்யும் போது அவர் ஒரு விடயத்தில் இஜ்திஹாத் செய்து சரியான முடிவைப் பெற்றால் அவருக்கு இரண்டு கூலிகள் கிடைக்கும். அவர் ஆட்சி செய்யும் போது இஹ்திஹாத் செய்து பின்பு பிழை செய்தால் அவருக்கு ஒரு கூலி கிடைக்கும்” (புஹாரீ-7352) என்பது ஹதீஸாகும்.
இஜ்திஹாத் என்றால் ஒரு குறிப்பிட்ட விடயம் தொடர்பாக சேகரிக்க வேண்டிய சகல அறிவுகளையும் தேடிப் பெற்றுக் கொள்ளும் ஒருவர் தனது உச்சகட்ட ஆராய்ச்சித் திறனை பிரயோகித்து பெறுகின்ற முடிவாகும். அவரது உச்சகட்ட முயற்சிக்கு இந்த கூலி கிடைக்கிறது.
எனவே ஒரு விவகாரத்தில் பல அபிப்பிராயங்கள் நிலவும் பொழுது அவற்றில் இஜ்திஹாத் மூலம் பெற்ற ஏதாவது ஒரு கருத்தை ஒருவர் பின்பற்றுகின்ற பொழுது அதற்காக அவருக்கு நன்மை வழங்கப்படும்.மாறாக அவர் பிழை செய்ததாகக் கூற முடியாது என்ற இந்த இஸ்லாத்தின் நிலைப்பாடு அற்புதமான ஒன்றாகும். சிந்தனை சுதந்திரத்திற்கு இஸ்லாம் வழங்கிய உயர்ந்த கட்ட கண்ணியமுமாகும்.
உண்மையில் வித்தியாசமான கருத்துக்கள் அல்லாஹ்வின் அருள்கள் தான். இஸ்லாத்தின் இலகு தன்மைக்கும் விட்டுக் கொடுக்கும் இயல்புக்குமான ஆதாரங்களாக அவை காணப்படுகின்றன.
ஆனால் கருத்து முரண்பாடுகளை வைத்து சமூகம் பிளவுபடுவதை அனுமதிக்க முடியாது. ஒரு விவகாரத்தில் நிலவும் இரண்டு கருத்தில் ஏதாவது ஒரு கருத்தை ஏற்று செயல்படுவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. இதில் எவரும் பிடிவாதமாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அனைவருக்கும் அல்லாஹ் கூலி கொடுக்க போதுமானவன்.
நாம் அதிக நேரம் விவாதிக்க வேண்டிய, அதிகம் கரிசனை காட்ட வேண்டிய, முன்னுரிமை வழங்க வேண்டிய பல விடயங்கள் சமூகத்தில் இருக்கின்றன. எனவே இதுபோன்ற விடயங்களுக்காக எமது கால நேரத்தையும் வளங்களையும் செலவழிப்பது முறையல்ல.
இலங்கையை பொறுத்தவரையில் வியாழக்கிழமை அரபா நோன்பு பிடிப்பவர்கள் பிடிக்கட்டும். வெள்ளிக்கிழமை பிடிக்க விரும்புபவர்கள் பிடிக்கட்டும். யாரும் எவரையும் குறை சொல்ல வேண்டிய தேவையில்லை.
அல்லாஹ்வே எல்லாவற்றையும் அறிந்தவன். அல்லாஹ்வே எல்லோருக்கும் கூலி கொடுக்கப் போதுமானவன்.
யா அல்லாஹ் இம்முறை அரபா நோன்பை நோற்று அதன் மூலம் கிடைக்கின்ற முழுமையான பலன்களை எமக்கு நசீபாக்குவாயாக!
பலஸ்தீன பூமியிலே அல்லல்படும் எமது உறவுகளுடைய கஷ்டங்கள், துன்பங்கள் அனைத்தையும் நீக்கி அவர்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை கொடுப்பாயாக!- Vidivelli