ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பொது நிதியை அரசியல் நோக்கங்களுக்காக தவறாகப் பயன்படுத்திய இரண்டு அரசியல்வாதிகள் இன்று சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளனர்.
முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோர், 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக விளையாட்டு கழகங்களுக்கு விநியோகிப்பதற்காக கரம்போர்டுகள் மற்றும் செக்கர்போர்டுகள் வாங்கியதன் மூலம் அரசுக்கு 53 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, முறையே 20 ஆண்டுகள் மற்றும் 25 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். உண்மையில் இந்த குற்றம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெற்றதாகும். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சட்டநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஆட்சி மாற்றத்தினால் கிடப்பில் போடப்பட்டு தற்போதுதான் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்றில் அரசியல்வாதிகளின் ஊழல்களுக்கு எதிராக வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு மிக முக்கியமானதாகும்.
பொது நிதியை துஷ்பிரயோகம் செய்து அரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதற்கான இந்த கடுமையான தண்டனைகள், அனைத்து அரசியல்வாதிகளுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் ஒரு கடுமையான எச்சரிக்கையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறான ஊழல் பெருச்சாளிகள் தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான எதிர் விளைவுகளை என்றோ ஒரு நாள் எதிர்கொள்ள நேரிடும்; என்ற செய்தியையும் சட்டத்தை மீறுமாறு அவர்களைத் தூண்டிய அரசியல் தலைமைகள் அவர்களைக் காப்பாற்ற முன்வர மாட்டார்கள் என்ற செய்தியையும் இந்த சம்பவம் நன்கு உணர்த்துவதாகவுள்ளது.
நாட்டில் ஊழல் மற்றும் பொது நிதியின் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கான தற்போதைய நிறுவன வழிமுறைகள் போதுமான அளவு வலுவாக இல்லை என்பதே யதார்த்தமாகும். இரு அரசியல்வாதிகளுக்கும் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட இழப்பை விட பல மடங்கு பெரிய இழப்புகளை நாடு பல ஆண்டுகளாக சந்தித்துள்ளது. “நல்லாட்சி” அரசாங்கமும் காலத்திலும் அதன் பின்னர் வந்த பொதுஜன பெரமுன ஆட்சியிலும் நாட்டிற்கு பில்லியன் கணக்கான ரூபாய்களை இழக்கச் செய்த மிகப்பெரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றன.
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கும், குடிமக்களின் செழிப்புக்கும் மிகப்பெரிய தடைக்கல் ஊழல் மோசடியாகும். அரசியல் தலைவர்களும், அரச அதிகாரிகளும் ஊழலில் ஈடுபடும்போது, அது நாட்டின் நம்பிக்கை, பொருளாதாரம் மற்றும் சமூக நலன் என அனைத்தையும் சீர்குலைக்கிறது. அதனால்தான், ஊழலுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிகவும் அவசியம் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஊழல் நம் ஒவ்வொருவரையும் நேரடியாகவும், ஆழமாகவும் பாதிக்கிறது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். நமது பிள்ளைகளுக்கு நல்ல பாடசாலை வசதிகள் இல்லை என்றால் – அதற்குப் பின்னணியில் ஊழல் இருக்கலாம். நமது வீதிகள் பழுதடைந்து சீரமைக்கப்படாமல் இருந்தால் – திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணம் முறைகேடாக செலவழிக்கப்பட்டிருக்கலாம். அரச சேவைகள் நமக்கு சரியான நேரத்தில் அல்லது முழுமையாகக் கிடைக்கவில்லை என்றால் – அதன் பின்னணியிலும் ஊழல் காரணமாக இருக்கலாம்.
ஊழல் செய்பவர்கள் தண்டிக்கப்படும்போது, அது மற்றவர்களுக்கு ஒரு தெளிவான எச்சரிக்கையாக அமைகிறது. இந்த அச்சமே ஊழலைத் தவிர்ப்பதற்கான முதல் படியாகும்.
அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் என்றால், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவது மிக முக்கியம். இவ்வாறான தண்டனைகளை வழங்குவோம் என்ற உறுதி மொழியை வழங்கியே தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தது. குறிப்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை மக்கள் பெருவாரியாக ஆதரித்தமை இதற்காகவேயாகும். இதனை அவரும் அவரது கட்சியினரும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. அதனால்தான் தற்போது இந்த இருவரில் இருந்தும் இதனை ஆரம்பித்திருக்கிறார்கள். அடுத்த வாரமும் முக்கிய முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு எதிரான வழக்கில் தண்டனை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊழலுக்கு எதிரான போரில் அரசாங்கம் தயக்கமின்றி செயல்பட வேண்டும். ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும், எந்தப் பதவி வகித்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இந்த கடமையிலிருந்து அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்கக் கூடாது என்பதை வலியுறுத்த விரும்புகிறோம்.- Vidivelli