(எம்.ஐ.அப்துல் நஸார்)
சவூதி அதிகாரிகள் பாதுகாப்பான மற்றும் ஒழுங்கமைப்புடனான ஹஜ் கடமையை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், சுமார் 2 மில்லிய மக்கள் கடுமையான பாலைவன வெப்பத்தைத் தாங்கிக்கொண்டு புனித மக்காவில் ஒன்றுகூடியுள்ளனர்.
இந்த வாரம் வெப்பநிலை 40 பாகை செல்சியஸ் (104 பாகை பரனைட்) ஐத் தாண்டி உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த வருடம் ஏற்பட்ட துரதிஷ்டவசமான சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்காக, (1,300 க்கும் மேற்பட்டோர் வெப்பம் காரணமாக இறந்தனர், இவர்களுள் பெரும்பாலானவர்கள் முறையாகப் பதிவு செய்யாது ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்காக மக்காவினுள் நுழைந்தவர்களாவர்) வெப்பத்தைத் தணிக்கும் கடமையில் ஈடுபடுவதற்காக சவூதி அரேபியா 250,000 அதிகாரிகளையும் 40 நிறுவனங்களையும் ஈடுபடுத்தியுள்ளது.
அதிகாரிகள் நிழல் வலயங்களை 50,000 சதுர மீட்டருக்கு விரிவுபடுத்தியுள்ளனர், 400க்கும் மேற்பட்ட குளிரூட்டும் பிரிவுகளையும் நிறுவியுள்ளனர். அத்துடன் புனித நகரம் முழுவதும் வைத்தியப் பணியாளர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இஸ்லாத்தின் ஐந்து தூண்களில் ஒன்றான ஹஜ், அதை மேற்கொள்ள உடல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் திறன் கொண்ட முஸ்லிம்கள் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டிய கடமையாகும். கடுமையான வெப்பம் மற்றும் இறுக்கமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், புனித பயணத்தில் பங்கேற்கக் கிடைத்தமைக்கு யாத்திரிகர்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்தனர். ‘இது உண்மையில் அல்லாஹ்வின் அருளாகும்’ என பிலிப்பைன்ஸைச் சேர்ந்த யாத்திரிகரான அப்துல் மஜித் அதி தெரிவித்தார்.
அதிகப்படியான மக்கள் மக்காவினுள் நுழைவதைக் கட்டுப்படுத்துவதற்காக, சவூதி அரேபிய அதிகாரிகள் ட்ரோன்கள், செயற்கை நுண்ணறிவு மூலமான கண்காணிப்பு மற்றும் குறுஞ்செய்தி எச்சரிக்கைகளைப் பயன்படுத்தி பதிவு செய்யாத யாத்திரிகர்கள் மீது பெரிய அளவிலான நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளனர். செல்லுபடியாகும் ஹஜ் அனுமதி இல்லாமல் மக்காவினுள் நுழைபவர்கள் நாடுகடத்தப்படுதல், கடுமையான அபராதங்கள் அல்லது சவூதி அரேபியாவிற்குள் நுழைவதற்கு 10 ஆண்டுகள் தடை விதிக்கப்படலாம்.
செனகலைச் சேர்ந்த 52 வயதான மரியமா உட்பட பல யாத்திரிகர்களுக்கு, ஹஜ் ஒரு வாழ்நாள் கனவு நனவாகியுள்ளதை இந்தமுறை யாத்திரை குறிக்கின்றது. ‘நான் அதைப் பற்றி கனவு கண்டேன், இங்கு வரவேண்டும் என்றே ஒவ்வொரு முறையும் யோசித்தேன்,’ என அவர் கூறினார். சவூதி அரேபியா ஹஜ் மற்றும் உம்ராவிலிருந்து ஆண்டுதோறும் பில்லியன் கணக்கான வருமானத்தை ஈட்டுகிறது, அதே நேரத்தில் இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் என்ற வகையில் சவூதி அரேபியாவின் மத மற்றும் அரசியல் அந்தஸ்தையும் வலுப்படுத்துகிறது.- Vidivelli