பலஸ்தீனில் நிகழும் இன அழிப்பை தமிழர்களும் எதிர்க்கின்றனர்
இஸ்ரேலின் செயற்பாட்டை எதிர்க்கும் கடமை எமக்கு உண்டு என்கிறார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
(எம்.ஆர்.எம்.வசீம், இரா.ஹஷான்)
பலஸ்தீன மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இனவழிப்புக்கு எதிரான நிலைப்பாட்டிலேயே தமிழ் மக்களும் இருக்கின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
இஸ்ரேல் அரசாங்கம் பலஸ்தீன மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இனவழிப்பை எதிர்க்க வேண்டிய கடமை நீதி நியாயத்தை விரும்பும் எந்தவொரு இனத்திற்கும் மனிதர்களுக்கும் இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, சபையில் எனக்கு முன்னர் உரையாற்றிய உறுப்பினர் ஒருவர், இந்த அரசாங்கம் நாட்டின் முஸ்லிம் மக்களுடனும், பலஸ்தீன மக்களுடனும் உறுதியாக இருப்பதாக கூறினார். இவ்விடத்தில் நான் ஒருவிடயத்தை சுட்டிக்காட்டுகின்றேன். அதாவது தமிழ் மக்களும் பலஸ்தீன மக்களுக்கு எதிரான இனவழிப்புக்கு எதிராக அவர்களுடன் ஒன்றாக இருக்கின்றனர் என்பதனை கூறுகின்றோம்.
இதனை கூறுவதால் நாங்கள் யூதர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அவர்களுக்கு எதிராகவும் இனப்படுகொலை நடந்துள்ளது. அவர்களுக்கும் நியாயம், நீதி மற்றும் பாதுகாப்பு அவசியமாகும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது.
ஆனால் யூதர்கள் என்ற பெயரில் இன்று இஸ்ரேல் அரசாங்கம் பலஸ்தீன மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இனவழிப்பை எதிர்க்க வேண்டிய கடமை நீதி நியாயத்தை விரும்பும் எந்தவொரு இனத்திற்கும் மனிதர்களுக்கும் இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்டுகின்றேன் என்றார்.- Vidivelli