கேட்பதே கிடைக்கும்
ஒருவர் அதிகமாக பார்க்க விரும்புகின்ற உள்ளடக்கங்கள் ஆபத்தானவையாக இருந்தால், உதாரணத்திற்கு தற்கொலை தொடர்பான, அல்லது தம்மைத் தாமே துன்புறுத்திக் கொள்ளுதல் தொடர்பான வீடியோக்களை ஒருவர் அதிகம் பார்வையிட்டால் டிக் டாக் நிறுவனம் அத்தகைய உள்ளடக்கங்களையே அவருக்கு பெற்றுக் கொடுக்கிறது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் குறித்த நபர் தவறான தீர்மானங்களை மேற்கொண்டு உயிரை மாய்த்துக் கொள்ளும் வாய்ப்பும் உண்டு. சிறுவர்கள் ஆரோக்கியமான விடயங்களை பார்வையிட்டால் ஆரோக்கியமான விடயங்களை பெற்றுக் கொள்வார்கள். ஆபத்தான உள்ளடக்கங்களை பார்வையிட்டால் டிக் டாக் போன்ற சமூக வலைத்தள நிறுவனங்கள் ஆபத்தான உள்ளடக்கங்களை கொண்டு சேர்க்கின்றன. இது சிறுவர்களை பாதிக்கின்ற ஒரு விடயமாகும்.
சிறிய வயதில் ஒருவர் சமூக வலைத்தளத்திற்குள் பிரவேசிக்கின்ற பொழுது அவருடைய வளர்ச்சியோடு ஒட்டியதாக அவரில் ஏற்படுகின்ற சிந்தனை மற்றும் நடத்தை மாற்றங்களையும் சமூக வலைத்தளங்கள் மிக நுணுக்கமாக அவதானித்து வருகின்றன. அவர்களின் நடத்தை மாற்றத்திற்கு ஏற்ப சிறுவர்கள் மேற்கொள்ளும் கொள்வனவு தீர்மானங்களையும் அவை நுணுக்கமாக பதிவு செய்கின்றன.
பிறக்காத குழந்தைக்கும் பாதிப்பு
Veronica Barassi (2020) எழுதிய சைல்ட் டேட்டா சிட்டிசன் (child data citizen) ஒரு ஆபத்தான தகவலை வெளிப்படுத்தி இருக்கிறது. அதாவது, சில சமூக வலைத்தளங்கள் குறித்த சில நபர்களின் பயன்பாட்டின் காரணமாக குழந்தைகள் பிறப்பதற்கு முன்பதாகவே அக் குழந்தைகளின் எதிர்காலம் எவ்வாறு அமையப் போகிறது என்பது பற்றிய தகவல்களையும் திரட்டி விடுவதாக அவர் குறிப்பிடுகிறார். பிறப்பதற்கு முன்பதாகவே சிறுவர்கள் வர்த்தகப் பண்டங்களாக மாற்றப்படுகிறார்கள் என்பது அவருடைய அவதானிப்பு. தந்தை அல்லது தாயின் சமூக ஊடகப் பாவனை, கர்ப்ப காலத்தில் அவர்கள் உள்வாங்கிக் கொள்கின்ற சமூக ஊடக தகவல்கள், அவர்கள் பார்வையிடுகின்ற வீடியோக்கள், சக நண்பர்களுடன் அவர்கள் பரிமாறுகின்ற தகவல்கள் என்பனவற்றிலிருந்து ஊடகத் தளங்கள் இத்தகைய தகவல்களை திரட்டிக் கொள்வதாக அவர் குறிப்பிடுகிறார்.
சிலபோது, தாய்மார்கள் தமது கர்ப்ப காலங்களில் இணையதளத்திலும் சமூக தளங்களிலும் ஆரோக்கிய குறிப்புகளையும் மருத்துவ உள்ளடக்கங்களையும் பெறுவதுண்டு. தமது உடலில் ஏற்படுகின்ற பருவ மாற்றங்களை பதிவேற்றம் செய்து அது தொடர்பான ஆலோசனை குறிப்புகளை பெற்றுக் கொள்வதும் உண்டு. இது எமது சமூகத்தில் மிக சர்வ சாதாரணமாக நடைபெறுகின்ற ஒரு விடயம். கர்ப்ப காலத்தில் பயன்படுத்துவதற்கு என்றே சிலர் தனியான கையடக்கப் பிரயோகங்களை வைத்திருக்கிறார்கள். இவ்வாறு, பெற்றோர் அல்லது குழந்தை பராமரிப்பாளர்கள் இணையதளத்துக்கு வழங்குகின்ற தகவல்களின் மூலம் ஒரு குழந்தையின் பால் நிலை, அந்த குழந்தை சார்பாக என்ன பொருட்கள் கொள்வனவு செய்யப்பட உள்ளன, அந்த குழந்தையின் மீது உள்ள அன்பினால் எத்தகைய பொருட்களை பெற்றோர் அதிகம் தேடிப் பார்க்கின்றார்கள் போன்ற விடயங்களை எல்லாம் சமூக ஊடக அல்கோரிதம் கணித்துக் கொள்கிறது. எனவே, பெற்றோர் தமது இணையதள பயன்பாட்டின் காரணமாக கருவில் இருக்கின்ற குழந்தை தொடர்பான தகவல்களையும் வர்த்தக உலகிற்கு வழங்கி விடுகிறார்கள்.
ஹாவட் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை பேராசிரியர் Leah Plunkett “இணையதள கருவிகளின் ஈர்த்தெடுக்கின்ற தன்மை பெற்றோர் தம்மை அறியாமலே தமது பிள்ளைகளின் தகவல்களை தாராள மனதோடு பெற்றுக் கொடுக்க செய்கின்றது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.எனவேதான், பெற்றோரும் சிறுவர்களும் இணைய மற்றும் சமூக வலைத்தள தொழில்நுட்பத்தின் ஈர்ப்பு சக்தி பற்றி அறிந்து வைத்திருப்பது முக்கியம் எனப்படுகிறது.
சில ஈர்த்திழுக்கும் உத்திகள்
இதுவரை தொழில்நுட்பத்தின் ஈர்த்தெடுக்கின்ற வடிவமைப்பு என்றால் என்ன என்பது பற்றி விரிவாக நோக்கினோம்.
இனி சிறுவர்களையும் முதியவர்களையும் ஈர்த்து இருப்பதற்காக தொழில்நுட்பங்கள் எத்தகைய உத்திகளை பயன்படுத்துகின்றன என்பதை தொகுத்து நோக்கலாம்.
1. தவறவிடும் பயம்
(Fear of Missing Out).
தவறவிடும் பயம் என்பது சமூக ஊடகத்தை பயன்படுத்துகின்ற ஒருவர் ஏதாவது ஒரு முக்கியமான விடயத்தை தவற விட்டு விட்டோமோ, அதனால் தமக்கான சமூக அங்கீகாரம் குறைந்துவிட்டதோ என்ற அச்சத்தை தோற்றுவிப்பதாகும். தான் பதிவேற்றம் செய்த ஒரு விடயத்திற்கு அதிக லைக் மற்றும் கமெண்ட்ஸ் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இயல்பாகவே எம்மிடம் இருப்பதுண்டு. நமது பதிவுகளுக்கு சக நண்பர்களிடமும் புதியவர்களிடமும் இருந்து அதிக பின்னூட்டல்கள் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் அவ்வாறு தான்.
தவறவிடும் பயம் என்பது இணையதள பாவனைக்கு ஒருவர் அடிமையாக இருப்பதை எடுத்துக்காட்டும் அறிகுறியாகும். இது, ஒருவர் தனது இலத்திரனியில் கருவியிலிருந்து அல்லது சமூக வலைத்தளத்திலிருந்து பிரிந்து இருக்க முடியாத உளவியல் நெருக்கடியை குறிக்கிறது. எப்போதும் இணையதளத்தையும் சமூக ஊடகங்களில் நடைபெறுகின்ற சம்பவங்களையும் பார்வையிட்டுக் கொண்டே இருக்க வேண்டும் என்ற உளவியல் உந்துதலை நாம் இவ்வாறு குறிப்பிடலாம். வகுப்பில் இருந்தாலும் தமது சமூக ஊடக கணக்குகளில் ஏதாவது இடம்பெற்று விட்டதோ என்ற எண்ணம் ஒருவித அச்ச உணர்வை தோற்றுவிக்கும். அடிக்கடி இலத்திரனியல் கருவிகளை கையில் எடுத்து பார்வையிட வேண்டும் என்பது போல தோன்றும். வகுப்பில் மறைவாக வைத்திருந்த கையடக்கத் தொலைபேசியை ஆசிரியருக்கு அல்லது ஆசிரியைக்குத் தெரியாமல் மறைமுகமாக ஒருவர் பார்வையிடுவது தவறவிடும் பயத்தின் வெளிப்பாடாகும். ஒருவருடைய கல்வி, சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டாலும் கூட அடிக்கடி இலத்திரனியல் கருவியினை கையில் எடுத்து தனது வலைத்தளங்களில் என்ன நடைபெறுகின்றது என்பதை தேடிப் பார்க்கத் தோன்றுவது தவறவிடும் பயத்தின் மற்றும் ஒரு வெளிப்பாடாகும். ஒருவருக்கு தவறவிடும் பயம் ஏற்படுகிறது என்றால் அவர் தன்னுடைய சுய கட்டுப்பாட்டை மீறி இணையதளத்தை பயன்படுத்துகிறார் என்பதே அர்த்தம். தனக்குத் தெரியாமல் சமூக வலைத்தளத்தில் ஏதோ ஒன்று நடந்து விட்டது, சமூக வலைத்தளத்தில் இடம்பெறுகின்ற உரையாடல் ஒன்றில் தனது கருத்து இடம் பெறவில்லை, யாரோ ஒருவர் தனக்கு குறுஞ்செய்தியை அனுப்பி இருப்பார், தான் பதிவிட்ட கவிதை சமூக வலைத்தளத்தில் ஒரு பெரிய பேசு பொருளாக மாறி இருக்க வேண்டும் என பல வழிகளில் இந்த தவறவிடும் பயம் ஏற்படலாம்.
Altuwairiqi et al. (2019) ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு இந்த தவறவிடும் பயம் ஒருவரில் தூக்கமின்மை, அச்சம், வாழ்க்கைத் தேர்ச்சிகள் குறைவடைதல், உணர்வு சார் மன அழுத்தம், அன்றாட உணர்வுகளை முகாமை செய்ய முடியாமல், தனிப்பட்ட உறவு நிலையில் சிக்கல்கள் ஏற்படுதல் போன்றவற்றை தோற்றுவிக்க முடியும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Abel et al. (2016) ஆகியோர் மேற்கொண்ட ஆய்வு சமூக ஊடகத்தை பயன்படுத்துகின்ற ஒருவரிடம் ஏற்படுகின்றது. இது தவறவிடும் பயம் பதக்களிப்பினையும் பெறுமதியான ஒன்றை இழந்துவிட்ட உணர்வினையும் ஏற்படுத்துவதாக குறிப்பிடுகிறது. அத்தோடு, தவறவிடும் பயத்தின் காரணமாக இணையதளத்தை அல்லது சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றவர்கள் தொடர்ந்தும் அதிலே ஈடுபாடு காட்டும் ஆர்வத்தை பெறுகிறார்கள். இதனால் ஏனைய சமூக நடவடிக்கைகளில் இருந்து அவர்களது கவனம் திசை திருப்பப்படுகிறது. Przybylski et al. (2013) ஆகியோர் ஒரு சுவாரசியமான விடயத்தை பதிவு செய்கின்றனர். அதாவது, சமூக ஊடகத்தை அளவுக்கதிகம் பயன்படுத்துகின்ற சிலர் தாம் விரும்புகின்ற நடிகர்கள், நடிகைகள், விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், சமூகத் தலைவர்கள், சமூகத்தில் தாக்கம் செலுத்துகின்றவர்கள் போன்றோரின் வாழ்க்கையில் ஏதாவது மாற்றம் நிகழ்ந்துவிட்டதோ என்ற அச்சத்திலும் அடிக்கடி இலத்திரனியல் கருவிகளை கையில் எடுத்து சமூக ஊடகங்களுக்குள் பிரவேசிக்க முற்படுகின்றனர்.
அண்மையில் உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மானின் மனைவி ஸைரா பானு, தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார் என்ற செய்தி இணையதளங்களில் வைரலாக பரவிய போது அது ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் ரசிகர்களையும் பாதித்தது. அப்போது ஒருவர் “ எந்த ஒரு விடயத்திலும் கவனம் செலுத்த முடியவில்லை. நல்ல மனிதரான ஏ ஆர் ரஹ்மானின் வாழ்வில் இத்தகைய ஒரு சம்பவம் இடம்பெற்று இருக்கக் கூடாது. அவருடைய மனைவி அவரை உண்மையில் விவாகரத்து செய்யவில்லை என்றே என் மனம் எண்ணுகிறது. எனினும் அடுத்த கட்டமாக ஏதாவது ஒரு திகில் மாற்றம் அவர்களுடைய விடயத்தில் நடந்து விடுமோ என்ற எண்ணத்தால் அடிக்கடி youtube தளத்துக்குச் சென்று வீடியோக்களை பார்வையிட தோன்றுகிறது’’ என ஒருவர் குறிப்பிட்டார். இது தவறவிடும் பயத்தின் மற்றுமொரு வெளிப்பாடாகும்.
(தொடரும்…)
- Vidivelli