எஸ்.என்.எம்.சுஹைல்
இலங்கை என்பது பல இனங்களும், பல மதங்களும், பல கலாச்சாரங்களும் இணைந்து வாழும் ஓர் அழகான நாடாகும். எனினும், அரசியல், வியாபார மற்றும் பல்வேறு சுய இலாபங்களுக்காக அவ்வப்போது இன,மதவாதங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டு இலங்கையின் பன்மைத்துவம் கேள்விக்குறியாக்கப்படுகின்றது.
நூற்றாண்டுகளுக்கும் மேலாக அரங்கேறும் இந்த கசப்பான சம்பவங்கள் நாட்டின் அமைதியை கெடுத்து வருகின்றன. குறிப்பாக 30 வருட கால உள்நாட்டு யுத்தம், இனக்கலவரத்தின் விளைவு, அந்த வடு மறைவதற்குள் நாட்டில் முஸ்லிம்கள் மீது பேரினவாதம் பாயத்தொடங்கியது. குறிப்பாக பொதுபலசேனா அமைப்பு, சிங்ஹல ராவய, ராவணா பலய மற்றும் அவ்வமைப்புகளைச் சார்ந்த இன்னும் பல குழுக்கள் கடந்த ஒன்றரை தசாப்தகாலமாக நாட்டில் அமைதிக்கு பங்கம் விளைவித்து வருகின்றன.
அரகலய மக்கள் எழுச்சிப் போராட்டம் பேரினவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும், அதற்கு பின்னரும் ஆங்காங்கே பேரினவாதம் தலைதூக்கத்தான் செய்தது. நாட்டில் புதியதொரு அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ள நிலையில், பேரினவாதத்திற்கு மீளவும் எழும்பவே முடியாது என முஸ்லிம்களும் ஏனைய சிறுபான்மையினரும் நம்பிக்கை வைத்தனர். எனினும், அதனை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் கடந்த சில வாரங்களாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஊடகங்களில் தெரிவிக்கும் கருத்துகள் அமைந்துள்ளன.
ஏறாவூரில் சில முஸ்லிம் குழுக்கள் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளதாக ஊடகங்களிடம் கூறியுள்ள ஞானசார தேரர், ஜும்மா தொழுகையின் போது ஆபத்தான கருத்துகள் கொண்ட துண்டுப்பிரசுரங்கள் பகிரப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். எனினும், அவரின் குற்றச்சாட்டுகளை ஏறாவூர் ஜம்இய்யதுல் உலமா கிளை முற்றாக மறுத்துள்ளது. அத்துடன், இவ்வாறான அபத்தமான பேச்சுகள் சமூக அமைதிக்கு களங்கம் ஏற்படுத்தும் என்றும், மக்களிடையே வெறுப்பு விதைப்பதற்கான முயற்சிகள் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதனிடையே, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதியமைச்சராக பதவி வகிக்கும் முனீர் முளப்பர் மீதும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ‘முனீர் உள்ளிட்ட சிலர், தீவிர சிந்தனைகளை பரப்பும் அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் எனவும், இதனால் நாடு ஆபத்தில் உள்ளதாகவும் தேரர் கூறினார். இந்த குற்றச்சாட்டுகளை, பிரதி அமைச்சர் மற்றும் ஆளும், எதிரணி உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.
துண்டுப்பிரசுர குற்றச்சாட்டு
சில வாரங்களுக்கு முன்பு ஏறாவூர் பள்ளிவாசலொன்றில் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதாக பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.
அத்துடன், ‘‘ சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய தீவிரவாதம் இலங்கையில் பரவுவது குறித்து சமீபத்தில் தான் தகவல்களை வெளியிட்டதை தொடர்ந்தே மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு இது குறித்து உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளேன். நாட்டில் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் மதபதற்றம் ஆபத்தான விதத்தில் அதிகரித்துள்ளதை இது வெளிப்படுத்துகின்றது.
ஏறாவூரின் பாரம்பரிய முஸ்லிம் சமூகத்தினர் தீவிரவாத ஒடுக்குமுறை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், எனது உதவியை கோரியுள்ளனர். அத்துடன், தங்கள் மத்தியில் உள்ள தீவிரவாத சக்திகள் குறித்து அவர்கள் தகவல்களை வழங்கியுள்ளதுடன் இவற்றை பகிரங்கப்படுத்துமாறு கோரியுள்ளனர்.
‘லிபியா கடாபி குழு’ என்ற குழுவினர் வட்ஸ்அப் மூலம் அச்சுறுத்தும் செய்திகளை வெளியிட்டுள்ளனர், தீவிரவாத கொள்கைகளை எதிர்க்கும் நபர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர் என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் உலமா சபை மறுப்பு
ஞானசார தேரரின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் ஏறாவூர் கிளையினால் மறுப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏறாவூர் ஜம்இய்யதுல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் ஏ.எல்.சாஜித் ஹுஸைன் (பாகவி) வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 20.05. 2025 திங்கட்கிழமை பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் நடாத்திய ஊடக சந்திப்பின் போது, எமது ஏறாவூர் பிரதேசத்தில் இடம்பெற்றதாக கூறப்பட்ட சம்பவங்கள் மற்றும் பள்ளிவாசல்களில் துண்டுப்பிரசுரம் வெளியீடு, நாட்டின் சட்டங்களுக்கு முரணான கடந்த கால நிகழ்வுகள், “லிபியா கடாபி” எனும் பெயரிலான அமைப்பின் தோற்றம், அடிப்படைவாத குழுக்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார். அவரால் முன்வைக்கப்பட்ட தகவல்கள் யாவும் உண்மைக்குப் புறம்பானவை. இவ்வாறான நிகழ்வுகள், சமூக விரோதச் செயல்கள், மார்க்க வரம்பு மீறல்கள், நாட்டின் சட்டத்திற்கு எதிரான அடிப்படைவாத குழுச் செயற்பாடுகள் எமது பிரதேசத்தில் எங்கும் இடம்பெறவில்லை.
இலங்கை ஒரு பன்முகச் சமூகமாகும். அதனை சிதைக்கும் செயற்பாடுகள் மீண்டும் மெல்ல மெல்ல தலைதூக்குவதாக உணர முடிகிறது. அவ்வப்போது சிலர் தங்கள் சுயநலன்களுக்காக இன, மத ரீதியிலான வெறுப்பு பிரசாரங்களில் ஈடுபடுவது கவலையை ஏற்படுத்துகிறது.
எமதூரில் சூபிஸ அமைப்பு என்ற பெயரிலோ, லிபியா கடாபி என்ற பெயரிலோ எந்த அமைப்பும் தோற்றம் பெறவில்லை. எந்த ஜும்ஆ பள்ளிவாயல்களிலும் “ஆப்தீன் காஸிம் மற்றும் ஞானசார தேரர் ஆகியோரை கல்லெறிந்து கொலை செய்யுங்கள்” எனும் தவறான துண்டுப்பிரசுரங்கள் பகிரப்படவில்லை. எமதூரின் தலைமைத்துவ சபையான அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா ஏறாவூர் கிளை இதனை உறுதிப்படுத்துகின்றது.
மேற்படி கலகொட அத்த ஞானசார தேரர் மூலம் முன் வைக்கப்பட்ட உண்மைக்குப் புறம்பான தகவல்கள் எமதூரின் ஒற்றுமையையும் சமூக ஐக்கியத்தை சீர்குலைப்பதுடன் நாட்டில் இன முரண்பாட்டை ஏற்படுத்தவல்லது. இதனால் எமது பிரதேசத்தின் தனித்துவம், மக்களின் உணர்வுகள், சமய ரீதியான அன்றாட செயற்பாடுகள் தாக்கமுற்றிருப்பதுடன், எமது நாட்டில் மீண்டுமொரு தடவை இன முரண்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் ஞானசார தேரரினால் வெளியிடப்பட்ட இவ்வறிக்கையினை வன்மையாக கண்டிக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த குற்றச்சாட்டானது எமது பிரதேசத்தைச் சேர்ந்த பள்ளிவாயல் பரிபாலன சபை உறுப்பினர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடுகளின் எதிரொலியாக பகை தீர்க்கும் வன்ம உணர்வுடன் புனையப்பட்ட ஒன்றாகும். எமது பிரதேசத்திற்கு இழுக்கை ஏற்படுத்திய சகோதரர்களின் இந்நாசகார நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. சில மாதங்களுக்கு முன்னர் யூ டியூப் சமூக வலைத்தளத்தில் குறித்த பள்ளிவாசலின் உறுப்பினர்கள் பலரை போதை விற்பனையில் ஈடுபட்டதாகவும், ஆயுதங்கள் வைத்திருப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டு, மிக இழிவாக அபகீர்த்தியை ஏற்படுத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஊகங்கள், முறையான விசாரணைகள் இன்றி வெளியிடப்படும் கருத்துப் பரிமாற்றங்கள் நாட்டில் ஐக்கியம், சமுக புரிந்துணர்வு, ஒரு சமூகத்தின் மார்க்க விழுமியங்கள் மீதான அபகீர்த்தியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தும் செயற்பாடுகளாகும் எனவும் ஏறாவூர் ஜம்இய்யதுல் உலமா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதியமைச்சர் முனீர் முளப்பர் மீதான குற்றச்சாட்டுக்கள்
ஏறாவூர் பள்ளிவாசல் மீது குற்றச்சாட்டுகள் ஞானசார தேரரால் முன்வைக்கப்பட்டு அதற்கு மறுப்பு வெளியிட்டப்பட்டிருக்கும் நிலையில், ஞானசார தேரர் தேசிய ஒருமைப்பாட்டு பிரதியமைச்சர் முனீர் முளப்பர் தொடர்பிலும் வெறுப்பு பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றார்.
‘தற்போதைய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக கடமையாற்றி வரும் முனீர் முளப்பர் இஸ்லாமிய கடும்போக்குவாதத்தை ஊக்குவிக்கும் நபர்’ என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளதுடன், உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் அரசாங்கத்துடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய கடும்போக்குவாத கொள்கையுடைய பலர் ஆளும் கட்சிக்குள் அடைக்கலம் புகுந்துள்ளனர். நிட்டம்புவ பகுதியில் தன்வீர் அகடமியின் பொறுப்பாளராக முனீர் கடமையாற்றி வருகிறார், கடவுளுக்காக உயிர்த்தானம் செய்ய வேண்டுமென வலியுறுத்தும் குழுவொன்றை முனீர் வழிநடத்துகின்றார். நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் இந்த அரசாங்கத்தில் இஸ்லாமிய கடும்போக்குவாத நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் மெத்தனப் போக்கு பின்பற்றப்படுகின்றது என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
முனீர் முளப்பர் மறுப்பு
பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரதியமைச்சர் முனீர் முளப்பர், ஞானசார தேரரின் கருத்துகள் பொய்யானவை, அவை அரசியல் நோக்கமுடையவை என சுட்டிக்காட்டியிருந்தார்.
‘தேரர் ஒருவர் என்னைப்பற்றி பொய்க் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வந்திருக்கிறார். திஹாரி பிரதேசத்தில் இருக்கும் ஒரு கல்வி நிறுவனத்தின் பொறுப்புதாரி என தெரிவித்திருக்கிறார். நான் திஹாரி பிரதேசத்துக்கு குடிவந்து தற்போது 10 வருடங்கள் ஆகின்றன. அதற்கு முன்பிருந்தே குறித்த கல்வி நிறுவனம் இருந்து வருகிறது. குறைந்தபட்சம் அந்த நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் இருப்பவர்களைக்கூட எனக்கு தெரியாது. அந்த தேரருக்கு தகவல் வழங்குபவர்கள் பிழையான தகவல்களை இருக்கிறார்கள் என பிரதியமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன், ‘நாங்கள் அடிப்படைவாதிகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டையும் தெரிவித்திருந்தார். ஆனால் இந்த நாட்டில் இருக்கும் பெளத்த, இந்து, கிறிஸ்தவ மதத்தலைவர்களுடன் எங்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதை அந்த மதத்தலைவர்களுக்கு தெரியும். நாங்கள் ஒருபோதும் அடிப்படைவாதிகளுக்காக கதைத்தவர்கள் அல்லர். மாறாக இந்த நாட்டின் அமைதிக்காக கதைத்தவர்கள். எங்கள் மீது குற்றச்சாட்டை முன்வைப்பவர்கள் அன்று இந்த நாட்டில் தீ மூட்டும்போது, நாங்கள்தான் நாடு பூராகவும் சென்று நாட்டில் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த பாடுபட்டோம் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம் என்றார் பிரதியமைச்சர்.
மேலும் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் துஷாரி ஜயசிங்க உரையாற்றுகையில், ‘எமது பிரதி அமைச்சர் ஒருவர் தொடர்பில் ஞானசார தேரர் மக்களை கோபமூட்டும் வகையில் இனவாத அடிப்படையில் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். ஆனால் எங்களில் யாரும் அடிப்படைவாதிகள் இல்லை. நாங்கள் மிகவும் முற்போக்கான பயணத்தை மேற்கொண்டு செல்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஞானசார தேரர் இதற்கு முன்னர் இவ்வாறான இனவாத கருத்துக்களை தெரிவித்து பேருவளை, தர்காநகர், கண்டி திகன பிரதேசங்களில் ஏற்பட்ட கலவரத்தினால் மக்கள் எதிர்கொண்ட துன்பங்கள் தொடர்பில் தற்போது மக்கள் எங்களுடன் கதைக்கின்றனர். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைகள் இடம்பெறும்போது மக்கள் வீதிக்கிறங்கி பாரிய பிரச்சினை ஏற்படுத்தியிருந்தனர். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவரையும் நீதிமன்றத்துக்கு அழைத்துவராமல், சிறைச்சாலையில் இருந்துகொண்டு, நிகழ்நிலை ஊடாக வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள தற்போது சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் துஷாரி ஜயசிங்க குறிப்பிட்டார்.
இதனிடையே, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் உதுமாலெப்பை உரையாற்றுகையில், தேசிய ஒருமைப்பாடு பிரதி அமைச்சர் தொடர்பில் அண்மையில் இனவாதிகள் பேசிய விடயங்களை பார்க்கும்போது கவலையாக இருக்கிறது. இனவாதம் பேசுபவர்களை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை. இனவாதத்தை இல்லாதொழிப்பதென தெரிவித்தே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. அதில் முன்னேற்றம் காணப்படுகிறதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் என்றார்.
இலங்கை ஒரு பன்முகச் சமூகமாகும். அதனை சிதைக்கும் செயற்பாடுகள் மீண்டும் மெல்ல மெல்ல தலைதூக்குவதாக உணர முடிகிறது. அவ்வப்போது சிலர் தங்கள் சுயநலன்களுக்காக இன, மத ரீதியிலான வெறுப்பு பிரசாரங்களில் ஈடுபடுவது கவலையை ஏற்படுத்துகிறது.
பொதுபலசேனா போன்ற அமைப்புகள் வெளிப்படையாக முஸ்லிம்களை இலக்குவைத்து இனவாத கருத்துகளையும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். இது நாட்டின் அமைதியை குலைப்பதாகவே அமைந்துள்ளது.
இப்படியான சூழ்நிலையில், உண்மைத் தகவல்களை முன்னிறுத்தி, சமூக ஒற்றுமையைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கத்திற்கும், ஊடகங்களுக்குமான ஒரு கடமையாகும். அதற்கும் மேலாக, ஒவ்வொரு பொது மகனும் தான் எதிர்பார்க்கும் சமூக நீதிக்காகப் பேசத் தொடங்க வேண்டும். அதாவது, இனவாதத்துக்கும் மதவாதத்துக்கும் இடமில்லாத, உரிமையும், சமத்துவமும் நிரம்பிய இலங்கையை உருவாக்குவதே நம் அனைவரது பொறுப்பாகும்.- Vidivelli