ஞானசார தேரர் எனக்கு எதிராக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்துக
பிரதியமைச்சர் முனீர் முளப்பர் பதில் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்
(எம்.ஆர்.எம்.வசீம்)
கலகொட அத்தே ஞானசார தேரர் ஊடக சந்திப்பொன்றை நடத்தி தனக்கு எதிராக தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர் தெரிவித்துள்ளார்.
பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 20ஆம் திகதி கலகொட அத்தே ஞானசார தேரரினால் நடத்தப்பட்ட பொதுபல சேனாவின் ஊடக சந்திப்பின்போது முனீர் முளப்பர் ஆகிய என்னைப்பற்றி உண்மைக்கு புறம்பான அறிவிப்பொன்றை மேற்கொண்டு ஊடகங்கள் ஊடாக அவதூறு பரப்பி இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
ஊடகங்களில் வெளியிடப்பட்ட அவமதிப்பு அறிக்கையின் காணொளியை இத்துடன் இணைத்துள்ளேன்.
தேரர் குறிப்பிட்டுள்ளதைப் போல, நிட்டம்புவ திஹாரி பிரதேசத்தில் அமைந்துள்ள தன்வீர் நிறுவனம், ஜமாஅதே இஸ்லாம் மற்றும் இஹ்வான் முஸ்லிம் ஆகிய அமைப்புகளுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அதேநேரம் கடவுளுக்காக மக்களைக் கொல்பவராகவோ அல்லது அதை ஆதரிப்பவராகவோ நான் ஒருபோதும் இருந்ததில்லை, மேலும் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் நான் கடுமையாக மறுக்கிறேன்.
மேலே பெயர் குறிப்பிடப்பட்டுள்ள தேரரின் குற்றச்சாட்டின் உண்மைத் தன்மை குறித்து விரிவான மற்றும் வெளிப்படையான விசாரணையை நடத்தி, தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கவும், மக்கள் பிரதிநிதியான என்னைப் பற்றிய தவறான சித்தரிப்பை சமூகத்தில் ஏற்படுத்தி எனது நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்துவதற்கு முயற்சித்தமைக்காக குறித்த தேரர் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.- Vidivelli