பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவியும் செயலாளராக பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை – பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவுச்சங்கத்தை மீள ஸ்தாபிப்பதற்கான கூட்டம் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடைபெற்றபோதே இத்தெரிவுகள் இடம்பெற்றன.
இலங்கைக்கான பலஸ்தீனத் தூதுவர் இஹாப் ஐ.எம். கலீல் அவர்களும் இதில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். இதில் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி சாலி மற்றும் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரேஹாணதீர உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இலங்கைக்கும் பலஸ்தீனத்திற்கும் இடையிலான ஆழமாக வேரூன்றிய நட்பை இரு தரப்பினரும் எடுத்துரைத்தனர். பலஸ்தீன நலன் மற்றும் பலஸ்தீன மக்களின் உரிமைகளுக்கான இலங்கையின் நீண்டகால ஆதரவு இதன்போது சுட்டிக்காட்டப்பட்டதுடன் பல ஆண்டுகளாக இலங்கை மக்கள் பலஸ்தீன மக்களுடன் தொடர்ந்து ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி வருவது இங்கு குறிப்பிடப்பட்டது.
2015 ஆம் ஆண்டு முதன்முதலில் ஸ்தாபிக்கப்பட்ட இலங்கை பலஸ்தீன பாராளுமன்ற நட்புறவு சங்கம், இரு பாராளுமன்றங்களுக்கிடையில் கலந்துரையாடல் மற்றும் ஒத்துழைப்பை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளது என்பது இங்கு தெரிவிக்கப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற இராஜதந்திரத்தை வலுப்படுத்துதல், பரஸ்பர புரிதலை ஊக்குவித்தல் மற்றும் கலாசாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்தல் என்பவற்றுக்கு மீள ஸ்தாபிக்கப்பட்ட நட்புறவுச் சங்கம் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டைக் ஏற்படுத்தும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது.- Vidivelli