எஸ்.என்.எம்.சுஹைல்
இலங்கையிலுள்ள 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் கடந்த மே 6 ஆம் திகதி முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை பெரும்பாலான உள்ளூராட்சி மன்றங்களில் அதிகாரங்களை யார் பெறப்போகின்றனர் என்ற தெளிவற்ற நிலைமை காணப்படுகின்றது. தேர்தல் முறையில் இருக்கும் ஒரு பாதகமான நிலை இதுவாக இருந்தாலும் சிறுபான்மையினர் மற்றும் சிறு கட்சிகளுக்கு இதுவொரு சாதகமான அரசியல் காப்பீடாகவே கருத முடியும்.
இந்நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 2 ஆம் திகதியன்று சபையை நிறுவ வேண்டியிருக்கிறது. சபைகளில் பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் கட்சிகளுக்கு ஆட்சியமைப்பதில் சிக்கல் இருக்காது. எனினும், அதிக ஆசனங்கள் அல்லது வாக்குகளை எடுத்த கட்சிகள் சபைகளில் ஆட்சியை கைப்பற்றுவதற்கான பெரும்பான்மையை நிரூக்க வேண்டியிருக்கிறது.
எது எப்படியோ தொடரும் இந்த அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்தில் பேரம் பேசல்களுக்கு பஞ்சம் இல்லை. இலங்கையின் ஆளும் அரசாங்கமான தேசிய மக்கள் சக்தியின் வீராப்பு இன்று குறைவடைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தேர்தலுக்கு முன்பு அவர்கள் தனித்தே ஆட்சியமைப்போம் என கூறியவர்கள் இன்று சுயேட்சைக் குழுக்கள் மற்றும் சிறுகட்சிகளின் ஆதரவை நாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அவர்களின் ஆணவப் பேச்சுகள் குறைந்து இன்று சிறு கட்சிகளிடம் மண்டியிடும் நிலைமை தோன்றியிருக்கிறது.
குறிப்பாக கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பாராளுமன்ற பொதுத்தேர்தலிலும் முஸ்லிம் பிரதேசங்களில் தேசிய மக்கள் கட்சிக்கு இருந்த செல்வாக்கு இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெகுவாக குறைவடைந்துள்ளது. முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்டுள்ள கிழக்கு மாகாணத்திலும் அதற்கு வெளியில் முசலி, அக்குறணை, கம்பளை, பேருவளை, களுத்துறை, மாபோல-வத்தளை மற்றும் கொழும்பு மாநகரிலும் தேசிய மக்கள் சக்திக்கு வாக்குச் சரிவு ஏற்பட்டுள்ளதுடன் தோல்வியை தழுவும் நிலையும் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், மாவனெல்லை மற்றும் புத்தளம் நகரிலும் தேசிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்
உள்ளூராட்சி தேர்தலில் அதிக ஆசனங்களை வென்றுள்ள முஸ்லிம் தரப்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திகழ்கிறது. அதன்படி முஸ்லிம் காங்கிரஸே முஸ்லிம் சமூகத்தின் ஆளும் கட்சி என்பதை இந்த தீர்தல் நிரூபித்துள்ளது. ஆறு சபைகளில் வெற்றிபெற்றுள்ளதுடன் நேரடியாக 116 ஆசனங்களை வென்றுள்ளது. அத்துடன், ஐக்கிய தேசியக் கூட்டணியின் தராசு சின்னம் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னம் என்பவற்றிலும் போட்டியிட்டு 200 வரையிலான ஆசனங்களை அக்கட்சி பெற்றுள்ளது. பெரும்பாலும் பட்டியல் மூலமான ஆசனங்களையே அக்கட்சி வென்றுள்ளமையினால் அவற்றை சுழற்சி அடிப்படையில் வட்டாரங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் அதிக ஆசனங்களை பெற்றவர்களுக்கு வழங்க கட்சி தீர்மானித்துள்ளதாக அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் கூறினார்.
குறிப்பாக தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடன் கலந்துரையாடல் நடத்தி சுமுகமாக இந்த தீர்மானத்திற்கு வர முடிந்ததாக கட்சியின் செயலாளர், பட்டியல் ஆசன பங்கீடு இன்றோடு நிறைவுக்கு வருகின்றது எனவும் குறிப்பிட்டார்.
இதனிடையே, எதிர்வரும் ஞாயிறு மற்றும் திங்கட் கிழமைகளில் கட்சியின் தலைமை அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களுக்கு விஜயம் செய்து பேச்சுவார்த்தைகளை நடத்தி சபைகளை கைப்பற்றுவது குறித்ததான பேச்சுவார்த்தைகளை இற்றைப்படுத்தவுள்ளதாகவும் நிஸாம் காரியப்பர் எம்.பி. தெரிவித்தார்.
‘வடக்கு கிழக்கு மாகாணத்திலுள்ள பல உள்ளூராட்சி சபைகளிலும் இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அதிகாரத்தை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் அதிகமாகவே இருக்கின்றது. அவர்களுடனும் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை நாம் முன்னெடுக்கவுள்ளோம்’.
இதனிடையே, ‘கொழும்பு மாநகர சபை மற்றும் களுத்துறை மாநகர சபை என்பவற்றில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து ஆட்சியை கைப்பற்றும் சாத்தியம் அதிகம் இருக்கிறது. கட்சியின் உயர் மட்டத்தில் இதற்கான பேச்சுவாத்தைககள் இடம்பெற்றுள்ளன. எனினும், தேசிய மக்கள் சக்தி எங்களோடு எந்தவொரு உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை. எமது கட்சியின் கீழ் மட்டங்களுடன் அக்கட்சியின் கீழ்மட்டத்தினர் உத்தியோகபூர்வமற்ற முறையில் ஆதரவு கோரிவருகின்றனர். எவ்வாறாயினும் அக்கட்சியின் உயர்மட்டம் எமது கட்சியுடன் பேச்சுகளை நடத்துமாயின் தேசிய மக்கள் சக்திக்கு உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்கான ஆதரவு வழங்குவது குறித்தும் நாம் பரிசீலிப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம்’ என்றும் மு.கா. செயலாளர் குறிப்பிட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பட்டியல் வேட்பாளர்கள் தெரிவு 70 வீதம் பூர்த்தியடைந்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நாம் அதிக ஆசனங்களை பெற்றுக்கொண்ட உள்ளூராட்சி சபைகள் மற்றும் கூட்டணிகள் மூலம் அதிகாரத்தை பெற்றுக் கொள்ள வாய்ப்புகள் இருக்கும் இடங்களில் நாம் பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம். குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தியுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. இதுதவிர, இலங்கை தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியுடனும் பேசியுள்ளோம் எனவும் அ.இ.ம.கா. தலைவர் குறிப்பிட்டார்.
தேசிய காங்கிரஸ்
தேசிய காங்கிரஸானது அக்கரைப்பற்று மாநகர சபையிலும் அக்கரைப்பற்று பிரதேச சபையிலும் அறுதிப்பெரும்பான்மையை பெற்றுள்ளது. அந்த சபைகளில் ஆட்சியமைப்பதில் பாரிய இழுபறி நிலை இல்லாமை அவர்களுக்கு பெரிய சிக்கலாக அமையாது. எனினும், அக்கட்சி அட்டாளைச் சேனை, இறக்காமம் மற்றும் சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளில் கிடைத்த ஆசனங்கள் பகிர்வு மற்றும் ஆட்சி அமைக்கும் தரப்பினருக்கு ஆதரவளிப்பது குறித்தான் பேச்சுகள் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
ஐக்கிய மக்கள் சக்தி
நாடு முழுவதிலுமுள்ள உள்ளூராட்சி சபைகளில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக உள்ள வட்டாரங்களில் பொதுவாக ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களே வெற்றிபெற்றிருக்கின்றனர். குறிப்பாக கண்டி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் அக்கட்சி வெற்றிபெற்ற வட்டாரங்களில் பெரும்பாலானவை முஸ்லிம் வாக்காளர்களை அதிகமாகக் கொண்ட வட்டாரங்களாகும். இந்நிலமை, ஏனைய மாவட்டங்களிலும் காணப்படுகின்றது.
திருகோணமலை:
கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள முஸ்லிம் பிரதேசங்களில் ஐக்கிய மக்கள் சக்தி ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்நிலையில், கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை மற்றும் குச்சவெளி, மூதூர், கந்தளாய் மற்றும் தம்பலகாம் பிரதேச சபையில் ஆட்சியமைப்பது தொடர்பில் பல்வேறு கட்சிகளுடன் முதற்கட்ட பேச்சுகள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் உதவிச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான இம்ரான் மகரூப் தெரிவித்தார்.
குறிப்பாக, இலங்கை தமிழரசுக் கட்சி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மற்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்பவற்றுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருக்கிறோம். பெரும்பாலும் எல்லாத் தரப்பினருடனான பேசுவார்தைகளும் சாதகமானதாகவே அமைந்திருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் இதுவரை பேச்சுகள் இடம்பெறவில்லை. அவர்கள் எம்முடன் பேச்சு நடத்தினால், அவர்களுடன் இணைந்து செயற்படுவது குறித்தும் ஆராய்ந்து பார்த்து தீர்மானம் எடுக்க முடியும். நீண்டகாலமாக இந்த பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகைக்கு கீழ் அதிகமான சபைகள் இருந்துள்ளன. இம்முறை அவர்களுக்கு பாரிய சரிவு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு:
கொழும்பு மாநகர சபையில் எதிர்க் கட்சிகளுடன் இணைந்து அதிகாரத்தை பெறுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி முயற்சித்து வருவதாக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் பிரதிச் செயலாளருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சி எமது கட்சிக்கு ஆதரவளிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது. அத்தோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி உள்ளிட்ட ஏனைய எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் தாம் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டி:
அக்குறணை பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது என அக்கட்சியின் உதவித் தவிசாளர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்தார்.
எமக்கு அக்குறணை பிரதேச சபையில் ஆட்சியமைக்க இன்னும் மூன்று ஆசனங்களே அவசியமாகின்றன. ஏற்கனவே, ஐக்கிய தேசியக் கட்சி எமக்கான ஆதரவை வெளிப்படுத்தியிருக்கிறது. அத்துடன், சுயாதீன குழுக்கள் மற்றும் பிற அரசியல் கட்சிகளின் ஆதரவும் எமக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்த ஹலீம், கண்டி மாவட்ட முஸ்லிம்கள் தேசிய மக்கள் சக்திக்கு தகுந்த பாடம் புகட்டியுள்ளனர் எனவும் குறிப்பிட்டார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி நடுநிலை வகிக்க எதிர்பார்ப்பதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் எம்.பி.முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணிக்கு இம்முறை நாடுமுழுவதுமாக 11 ஆசனங்களே கிடைத்துள்ளன. நாம் அனைத்து சபைகளிலும் தனித்து இயங்குவதற்கே எதிர்பார்க்கிறோம். வாக்கெடுப்பின்போது சுயாதீனமாக இயங்குவது குறித்து அவதானம் செலுத்தி வருகின்றோம். எனினும் புத்தளம் மாநகர சபை விடயத்தில் மாற்று நிலைப்பாடு இருக்கின்றது. எனவே, இது விடயமாக இன்றோ நாளையோ கட்சியின் உயர்குழு கூடி தீர்மானமொன்றை எடுக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஐக்கிய சமாதான கூட்டமைப்பு
கொழும்பு மாநகர சபையின் மேயரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பில் ஐக்கிய சமாதான கூட்டமைப்பு யாருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிக்கும் முக்கியமான கலந்துரையாடலுக்காக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைமைத்துவ சபையும், உச்ச பீடமும் இன்று கூடவுள்ளதாக ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஐ.ஏ.கலீலுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அண்மையில், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடினோம். அத்துடன் கொழும்பு மாநகர முன்னாள் மேயர் திருமதி ரோஸி சேனநாயக்கவுடனும் நாங்கள் கலந்துரையாடியுள்ளோம். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அழைப்பின் பேரில், முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க வையும் சந்தித்து கலந்துரையாடினோம். அதுபோன்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானுடனும் நாங்கள் கலந்துரையாடினோம். இனி விரைவில் தீர்மானத்தை அறிவிப்போம் என்றார்.
ஐக்கிய தேசியக் கட்சி
ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபட்ட பிறகு இம்முறை முஸ்லிம் பிரதேசங்களில் ஓரளவு ஆதரவு இருப்பதை இந்த தேர்தல் உறுதி செய்துள்ளதாக அக்கட்சியின் அக்குறணை பிரதேச அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெ.ஜெனுலாப்தீன் (லாபிர் ஹாஜியார்) குறிப்பிட்டார்.
கட்சிக்கு இம்முறை 381 ஆசனங்களே கிடைத்துள்ளன. வட்டாரம் மூலமாக எமக்கு நேரடியான முஸ்லிம் பிரதிநிதித்துவங்களும் கிடைத்துள்ளன. குறிப்பாக கொழும்பு மாநகரில் இரண்டு வட்டாரங்கள் வெல்லப்பட்டுள்ளன. அவை இரண்டிலும் முஸ்லிம் வேட்பாளர்களே போட்டியிட்டிருந்தனர். ஏனைய முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள வேட்பாளர்களும் அதிக வாக்குகளை பெற்றிருக்கின்றனர். பட்டியல் மூலம் கிடைத்த ஆசனங்களை வட்டாரங்களில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும் அவர்கள் பெற்ற வாக்கு விகிதாசார அடிப்படையில் ஆசனங்கள் பகிர்ந்து கொடுப்பதற்கு கட்சி தீர்மானித்திருக்கிறது. இதன்படி நாட்டின் பல பகுதிகளிலும் ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக முஸ்லிம் உறுப்பினர்கள் பிரதிநிதித்துவப்படுத்துவார்கள் எனவும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தி
தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற உள்ளூராட்சி சபைகளில் தாமே ஆட்சியமைப்போம் என அக்கட்சி தெரிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தி அதிக ஆசனங்களை பெற்றுள்ள சபைகளில் ஆட்சியமைக்கும் உரிமையை இலகுவாக பெற்றுள்ளது. எனினும், சில பிரதேசங்களில் சுயாதீனக் குழுக்கள் மற்றும் சிறிய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்நிலையில் கொழும்பு மாநகர சபையில் ஆட்சியமைப்பதற்காக சுயாதீனமாக உறுப்பினர்களை பெற்றுக்கொண்ட தரப்பினர்களுடனும் சிறிய கட்சிளுடன் அக்கட்சியின் பெலவத்தை தலைமையகத்தில் நேற்று முன்தினம் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு உட்பட இன்னும் சில சிறுபான்மை தரப்புகளும் கலந்துகொண்டிருந்தன.
எது எவ்வாறிருப்பினும் இந்த கலப்பு முறை தேர்தலானது பெரிய கட்சிகளுக்கு ஒரு பொறியையே வைத்துள்ளது. பன்மைத்துவமுள்ள இந்நாட்டில் எந்த தரப்பையும் புறந்தள்ளி செயற்பட முடியாத அளவிற்கு இந்த தேர்தல் முறை அமைந்திருப்பது சிறுபான்மையினருக்கும் சிறு சமூகக் குழுக்களுக்கும் சாதகமானது என்றே குறிப்பிட முடியும்.- Vidivelli