சிறுவர்கள்
சிறுவர்களின் அதீத இணையதள பாவனை தொடர்பான விவாதங்களில் அவர்கள் இணையதளத்தில் செலவிடுகின்ற நேரத்தின் அளவு ஒரு பிரதான பேசு பொருளாக உள்ளது. எனினும், எவ்வளவு நேரம் அவர்கள் இணையதளத்தில் செலவிடுகிறார்கள் என்பதை விட என்ன உள்ளடக்கத்தை அவர்கள் நுகர்கின்றார்கள் என்பதே பிரச்சினைக்குரிய விடயமாகும். சிலவேளை அதிகநேரம் இலத்திரனியல் கருவிகளை பயன்படுத்துவது நாம் நினைக்கிற அளவு பாரிய சிக்கல்களை தோற்றுவிக்காவிட்டாலும் எத்தகைய உள்ளடக்கங்களை சிறுவர்கள் பார்வையிடுகிறார்கள் என்பதைப் பொறுத்து பிரச்சினைகள் ஏற்படலாம். எனவே, எவ்வளவு நேரம் பார்வையிடுகிறார்கள் என்பதை விட என்ன விடயத்தை பார்வையிடுகிறார்கள் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
கவர்ச்சியாகவும் இலவசமாகவும் கிடைக்கின்ற எந்த ஒரு பொருள் மீதும் சிறுவர்களின் பற்றுதல் அதிகமாக காணப்படும். ஒரு இடத்தில் தமக்கான வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கின்றது என்று தோன்றினால், சிறுவர்கள் அந்த இடத்தை அதிகம் விரும்புகின்றார்கள். வாய்ப்புகள் நிறைந்து இருக்கின்ற ஒரு இடத்தில் அதிக நேரத்தை செலவழிக்க முற்படுகிறார்கள். அத்தகைய இடங்களில் தமது வாழ்க்கைக்கான பயன்கள் அதிகமாக இருப்பதாக உணர்வார்கள். இணையதளத்தையும் சிறுவர்கள் அவ்வாறே பார்க்கிறார்கள். உலகத்தில் நடக்கும் சகல விடயங்களையும் அவ்வப்போது உடனுக்குடன் அறிந்து கொள்வதற்கான ஒரே மூலமாக அவர்கள் இணையதளத்தை கருதுகின்றார்கள்.
சிறுவர்கள் தமது சுய கட்டுப்பாட்டை இழந்து சமூக ஊடகங்களை பயன்படுத்துகின்ற போது அவர்கள் எவ்வளவு நேரம் செலவிடுகின்றார்கள் என்பதை பெற்றோரும் சிறுவர் பராமரிப்பாளர்களும் இலகுவில் அறிந்து கொள்ள முடியும். சமூக வலைத்தளங்களும் இணைய வழி விளையாட்டு தளங்களும் அவற்றுக்கான வாய்ப்புகளை பெற்றோருக்கும் சிறுவர் பராமரிப்பாளர்களுக்கும் வழங்கியுள்ளன.
சில இணையதள நிறுவனங்கள் தமது தளங்களில் உள்ள பெற்றோர் கட்டுப்பாட்டு கருவிகளை (Parental control tools) பயன்படுத்தி சிறுவர்கள் எவ்வகையான இணையவழி விண்ணப்பங்களை பயன்படுத்துகின்றார்கள், எப்போது பயன்படுத்துகிறார்கள், எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறார்கள் என்பதை பெற்றோர் கட்டுப்படுத்த முடியும் என முழு பொறுப்பையும் பெற்றோர்களிடம் விட்டுவிடுகிறார்கள்.
பொறுப்புக் கூறுல்
இது தொடர்பில் உளவியலாளர்களும் சிறுவர் உரிமை செயற்பாட்டாளர்களும் வேறு விதமான கருத்துக்களை முன் வைக்கிறார்கள். அதாவது, சிறுவர்கள் எவ்வளவு நேரம் இணையதளத்தில் செலவிடுகின்றார்கள் என்பதை கட்டுப்படுத்துவதில் பிரயோசனமில்லை. பெற்றோர் குழந்தைகளை கட்டுப்படுத்துவதை ஒரு செயற்பாடாக எல்லா காலங்களிலும் செய்ய முடியாது. அது சாத்தியமானதல்ல என்பதுடன் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவில் விரிசல்களை ஏற்படுத்தும் உபாயமாகவும் அது அமைய முடியும் என நம்புகின்றனர். இதனால், சர்வதேச சமூக வலைப்பின்னல் மற்றும் இணையதள நிறுவனங்கள் தமது தொழில்நுட்பத்தின் வடிவமைப்பிலேயே சிறுவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவது கட்டாயமாகும். தொழில்நுட்ப கருவிகளையும் சமூக ஊடக தளங்களையும் உருவாக்கும் போது குறிப்பிட்ட வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு பொருத்தமற்ற உள்ளடக்கங்களை பார்வையிடுவதை தடுத்து தமது கருவிகளை உருவாக்க முடியும் என அவர்கள் கூறுகின்றனர். சிறுவர்கள் பாதிக்கப்படுவதில் இணையத்தளங்களை நடத்தும் கம்பனிகள் பொறுப்புச் சொல்ல வேண்டும் என்பது அவர்களது பிரதான வாதமாகும்.
உலகில் உள்ள எல்லா பெற்றோரும் –- பெற்றோர் கட்டுப்பாட்டு கருவிகளை சிறந்த முறையில் பயன்படுத்தும் ஆற்றலை கொண்டிருப்பதில்லை. கல்விப் பின்புலம் கொண்ட பெற்றோர் இலகுவாக தமது சிறுவர்களின் இணையதள பயன்பாட்டை முகாமை செய்ய முடியும். ஆனால், கல்வி அறிவியல் குறைந்த பெற்றோருக்கு அல்லது தொழில்நுட்ப ஆற்றல் குறைந்த பெற்றோருக்கு இது இலகுவான ஒரு அனுபவமாக அமையாது. எனவே, தொழில்நுட்ப நிறுவனங்கள் தமது தொழில்நுட்பக் கருவிகளை அறிமுகம் செய்கின்ற போது அவை சிறுவர்களின் பாதுகாப்புக்கும் நலனுக்கும் உகந்ததா என்பதை சோதித்துப் பார்க்க வேண்டும்.
அத்தோடு எல்லா பெற்றோர் கட்டுப்பாட்டு கருவிகளும் இலவசமாக கிடைப்பதில்லை. கூகுள் நிறுவனத்தின் ஃபேமிலி லிங்க் (Family Link) எனப்படுகின்ற பெற்றோர் கட்டுப்பாட்டு கருவி இலவசமாக கிடைக்கின்றது. எனினும், ஏனைய கருவிகள் உச்ச பயன்பாட்டை பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த விவாதத்தில் சர்வதேச தொழில் நுட்ப நிறுவனங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய மற்றும் ஒரு விடயம், உலகில் உள்ள எல்லா சிறுவர்களுக்கும் பெற்றோர் இருப்பதில்லை. சில குழந்தைகள் குடும்பத்தில் உள்ள ஏனைய பராமரிப்பாளர்களின் கண்காணிப்பில் உள்ளனர். சில சிறுவர்களுக்கு பெற்றோரும் இல்லை பராமரிப்பாளர்களும் இல்லை. இத்தகைய நலிவுற்ற நிலையில் இருக்கின்ற சிறுவர்கள் இணையதளத்தின் வசீகரிப்புக்கு தம்மை பலி கொடுத்து விடுகின்றனர். இந்த விடயத்தில் சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள் எந்த பொறுப்பினையும் எடுத்துக் கொள்ளவில்லை.
அதிக இணையதள பாவனை குடும்ப விரிசலுக்கு காரணமாக அமைவதாக பல பெற்றோர்கள் முறையிடுவதுண்டு. “சிலவேளைகளில் மனைவி கணவனுடன் பேச முற்படுகின்ற போது கணவன் தொலைபேசியில் பிஸியாக இருப்பார். கணவன் மனைவியுடன் பேச முற்படுகின்ற பொழுது மனைவி சமூக வலை பின்னல் தளங்களில் குடும்ப உறவினர்களுடன் உரையாடலில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார். குடும்பம் ஒன்றில் யாரோ ஒருவர் எப்போதும் இலத்திரனியல் கருவிகளை பயன்படுத்திக் கொண்டிருப்பதால் மற்றும் ஒருவருடன் பேச முடியாத நிலை தொடர்ந்து கொண்டு செல்கிறது. உணவருந்துகின்ற வேளையிலாவது ஒருவர் மற்றவருடன் பேசலாம் என்று பார்த்தால் அப்போதும் சிலர் தமது கையடக்க தொலைபேசிகளுடன் வந்து அமர்ந்து விடுகின்றனர்” இது அடிக்கடி பலராலும் முன் வைக்கப்படுகிற ஒரு அனுபவப் பகிர்வாகும். இவை யாவற்றுக்கும் காரணம் தொழில் நுட்பங்களின் ஈர்த்தெடுக்கின்ற வடிவமைப்பாகும்.
நாம் ஒரு சேவையினை பெற்றுக் கொள்வதற்காக கட்டணம் செலுத்தாவிட்டால் நம்மையே அந்த சேவை கட்டணமாக பயன்படுத்திக் கொள்கிறது என்று ஒரு கூற்று உள்ளது. இதனை மிக அவதானத்துடன் புரிந்து கொள்வது முக்கியமாகும். இலவச சேவையினை வழங்குகின்ற தொழில்நுட்ப நிறுவனங்கள் தாம் வழங்கும் சேவைக்கு பணத்தினை பெற்றுக் கொள்ளாவிட்டாலும் அதற்கு பகரமாக சேவையை பெற்றுக் கொள்பவர்களின் தனிப்பட்ட தகவல்களை இலவசமாக பெற்றுக் கொள்கின்றது. இது தொடர்பாக முன்னரும் சிறிதளவு பார்த்தோம். முன்னர் குறிப்பிட்டது போல தனிப்பட்டவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் அவர்களது தகவல்கள் வர்த்தக நிறுவனங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்படுகின்றன. சமூக ஊடகங்களில் இருந்து தமது வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகளைப் பெற்றுக் கொள்ளும் வர்த்தக நிறுவனங்கள் அவர்களின் நிதி, நுகர்வு பண்பாடு, நுகர்வு காலம் என்பனவற்றை தொகுத்தெடுத்து அதற்கேற்றால் போல விளம்பரங்களை அவர்களது சமூக ஊடக சுவர்களுக்கு கொண்டு சேர்க்கின்றன. தனிப்பட்ட ஒருவரின் தேவை அறிந்து உற்பத்திப் பொருட்களை அவர்களின் சமூக ஊடக சுவர்களுக்கு வந்து சேர்க்கின்றன.
வர்த்தக நிறுவனங்களின் இலக்குகளை பூர்த்தி செய்வதற்காக தொழில் நுட்ப தளங்கள் பல்வேறு உத்திகளை பயன்படுத்துகின்றன.
முதலாவது: சமூக ஊடக நிறுவனங்கள் தமது தளங்களை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்களின் தொகையை ஒவ்வொரு நொடிப் பொழுதிலும் பெருக்கிக் கொள்ளும் செயற்பாட்டில் ஈடுபடுகின்றன. பயன்பாட்டாளர்களின் தொகை இயல்பாகவே அதிகரிக்கும் வகையில் ஈர்த்திழுக்கும் தொழில்நுட்ப வடிவம் அமைக்கப்பட்டிருக்கும். நண்பர்களை பெருக்கிக் கொள்ளுதல், நாம் ஏற்பாடு செய்கின்ற நிகழ்வுகளை மக்கள்மயப்படுத்துதல், தனது நிறுவனத்தின் நிகழ்ச்சிகள் தொடர்பாக தெளிவூட்டுதல், குறிப்பிட்ட ஒரு நிகழ்வில் கலந்து கொள்வதற்கான பங்கேற்பாளர்களை ஊக்குவித்தல் என பல்வேறு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்து பயன்பாட்டாளர்களை சமூக ஊடகத் தளங்கள் பெருக்கிக் கொள்கின்றன.
இரண்டாவது: சமூக ஊடகத் தளங்களைப் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தாம் எப்போது அத்தளங்களுக்குள் பிரவேசித்தாலும் தாம் எதிர்பார்த்ததை விட அதிக நேரத்தை செலவிடும் படியான கவனக் கலைப்பான்கள் வழங்கப்படுகின்றன. இதனால், குறுஞ்செய்தியை பார்வையிடச் சென்ற ஒருவர் தன்னை அறியாமலேயே யூட்யூப் தளத்தில் மூழ்கி விடுகிறார். எனவே, வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு உத்தியாக சமூக ஊடக நிறுவனங்கள் தமது தளங்களை பயன்படுத்தும் பயன்பாட்டாளர்கள் அதிக நேரத்தை செலவிடும் மாயத்தை உள்ளே வைத்திருக்கிறார்கள்.
மூன்றாவது: உள்ளடக்கங்களை வழங்குவதும் ஊடாட்டத்தை ஏற்படுத்துவதுமாகும். அதாவது, தனது கருத்துக்களை வெளியிட வேண்டும் என்ற ஆர்வம் சகல மனிதர்களிடமும் உண்டு. ஏதாவது ஒரு பொது விடயம் தொடர்பில் சார்பாகவும் எதிராகவும் கருத்துச் சொல்ல வேண்டிய ஊக்கம் சகலருக்கும் உரியது. சிலர் தாம் அன்றாடம் செய்கின்ற ஒவ்வொரு விடயங்களையும் தமது சமூகத்தில் உள்ள சக நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கின்ற ஆர்வத்தைக் கொண்டிருக்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் இந்த இயல்பான மானிட ஆர்வத்தை வர்த்தகமாக்கியுள்ளன. மேலோட்டமாக பார்க்கையில் மனிதர்கள் அது கருத்துச் சுதந்திரத்திற்கும் புத்தாக்க உணர்வுக்கும் களம் அமைப்பது போன்ற ஒரு தோரணையில், மக்களை பேச வைத்திருக்கின்றன. இதனால் சமூக வலைப்பின்னல் தளங்களின் உருவாக்கம் மக்களை பேசும்படி செய்திருக்கிறது. எழுதும்படி செய்திருக்கிறது. பின்னூட்டல் வழங்கத் தூண்டியிருக்கிறது. தமது கருத்து நிலைக்காக பரிந்து பேச ஒழுங்கு செய்திருக்கிறது. இதுவும் தொழில்நுட்பங்கள் வாடிக்கையாளர்களையும் சிறுவர்களையும் ஈர்த்தெடுப்பதற்கான ஒரு உத்தியாகும்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வு ஒன்று அதிர்ச்சி தரும் ஒரு தகவலை வெளியிடுகிறது. அப்பல்கலைக்கழகத்தின் மன அளவியல் நிலையமும் மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ஆய்வு மையமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றிலே ஒரு சிறிய லைக் பொத்தானை நாம் அழுத்துகின்ற பொழுது, குறித்த சமூக வலைத்தளம் நமது பால் நிலையை (ஆண்- பெண் வித்தியாசத்தை) சுமார் 75 தொடக்கம் 80 வீதம் வரை துல்லியமாக மதிப்பிடுவது அறியப்பட்டுள்ளது.
அது மாத்திரமன்றி வெறுமனே ஒரு லைக் பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒருவரது போதைவஸ்துப் பயன்பாடு (65%), பெற்றோருடனான தொடர்பு (60%), அவரது இனம் (95%), அரசியல் சார்பு நிலை (85%) என்பனவற்றை கணித்துக் கொள்கின்றன.
அதேபோன்று 2001 ஆம் ஆண்டு வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (Wall Street Journal) மேற்கொண்ட ஆய்வின்படி சுமார் 36 நிமிடங்கள் ஒருவர் டிக் டாக் வலைத்தளத்தை பயன்படுத்தினால் அவர் பற்றிய மிக ஆழமான ரகசியங்களை அத்தளத்தின் அல்கோரிதம் பெற்றுக் கொடுப்பதாக அறியப்பட்டுள்ளது. டிக் டாக் தளத்தில் வீடியோக்களை பார்வையிடும் போது, அல்லது தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள ஏதாவது ஒரு உள்ளடக்கத்திற்கு லைக், கமெண்ட் வழங்கும் பொழுது அந்நிறுவனம் தனிப்பட்ட தகவல்களை மிக இலகுவில் பெற்றுக் கொள்கிறது. இதனாலேயே ஒரே விதமான, நாம் விரும்புகின்ற உள்ளடக்கங்களை தொடர்ந்து டிக் டாக் நமது சுவர்களில் பதிவேற்றம் செய்து கொண்டிருக்கிறது.
(தொடரும்…)
-Vidivelli