பாதாள உலக குழுக்களின் பின்னணியில் அரசியல்வாதிகள்

0 102

நாட்டில் கடந்த சில மாதங்களாக துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. தினமும் ஏதாவதொரு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான செய்திகளே வந்தவண்ணமுள்ளன. நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடந்த 8 மாதங்களில் நாட்டில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளதாகவும் இவற்றில் 52 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இச் சம்பவங்கள் பொது மக்களின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும் இதனால் நாட்டின் சுற்றுலாத்துறையும் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போதைப் பொருளுடன் தொடர்புடைய குழுக்களிடையே நிலவும் இந்த மோதலில் பாதிக்கப்படுவது அப்பாவிப் பொது மக்களே என்றும் அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்தக் கருத்துகளுக்கு பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாட்டிலுள்ள முன்னணி அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில அரசியல் தலைவர்கள் முக்கியமான 10 பாதாளக் குழுக்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளமை தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாகத் தெரிவித்துள்ள கருத்து கூர்ந்து நோக்கத்தக்கதாகும்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் ‘‘ ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சில அரசியல் தலைவர்களே முக்கியமான 10 பாதாளக் குழுக்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளமை தொடர்பில் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன. முப்படைகளில் இருந்து இடைவிலகியவர்களில் ஒருசிலர் பாதாளக் குழுக்களுடன் தொடர்புகொண்டு கூலிப்படையினராக செயற்படுகிறார்கள். இவ்வாறான 3,000 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் இராணுவ முகாம்களில் இருந்து பாதாளக் குழுக்களுக்கு துப்பாக்கி உட்பட ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதங்களை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இதற்கமைய இதுவரையான காலப்பகுதியில் 1,278 ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஏதேனும் பகுதியில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் பதிவானால் துரிதகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன’’ எனத் தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்தக் கருத்து பாதாள உலகக் குழுக்களும் நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளின் உறுப்பினர்களுக்குமிடையிலான நெருங்கிய தொடர்பை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

அது மாத்திரமன்றி கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற முக்கிய கூட்டமொன்றில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி இம்முறை உள்ளூராட்சித் தேர்தல்களில் போட்டியிட்ட பல வேட்பாளர்களுக்கு போதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடையவர்கள் நிதியுதவி செய்துள்ளதாகவும் அவ்வாறான பலர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறானவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறும் அவர் பொலிசாரைப் பணித்துள்ளார். இது அரசியல் பொறிமுறையில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் ஊடுருவுவது ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்றும் குற்றவாளிகள் தமது நோக்கங்களை நிறைவேற்ற இது வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இது இவ்வாறிருக்க கடந்த வாரம் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ‘ஹரக் கட்டா’ என்றழைக்கப்படும் பாதாள உலகத் தலைவர் ஒருவர் தன்னை விடுவிப்பதற்கு முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் முன்னாள் அமைச்சர் டிரான் அலசும் பெருந்தொகைப் பணத்தைக் கோரியதாக ஊடகங்கள் முன்னிலையில் பகிரங்கமாகக் குறிப்பிட்டிருந்தார்.

மேற்படி விடயங்கள் இலங்கையில் திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுக்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் மிக நெருங்கிய தொடர்பிருப்பதையே உறுதிப்படுத்துகின்றன.

இலங்கையில் அனைத்து துறைகளிலும் ஊடுருவியுள்ள மோசமான அரசியல் கலாசாரமே இந்தப் பாதாள உலக குழுக்கள் மற்றும் போதைப் பொருள் வியாபாரிகளின் எழுச்சிக்கும் சமூகத்தின் சீரழிவுக்கும் பிரதான காரணமாக மாறியுள்ளன. அந்த வகையில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளபடி சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகள் இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதுடன் மக்கள் அரங்கில் அவர்களது குற்றப் பின்னணியும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் இதுவரை காலமும் இவ்வாறான சக்திகளுக்கு பாதுகாப்பு வழங்கி வளர்த்தெடுத்தவர்களின் உண்மை முகம் வெளிச்சத்துக்கு வரும். இது விடயத்தில் அரசாங்கம் பொறுப்புடன் செயற்படும் என எதிர்பார்க்கிறோம். யாரினதும் அழுத்தங்களுக்காக உண்மைகள் மூடி மறைக்கப்படாது என்றும் நம்புகிறோம்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.