தொழில்நுட்பத்தின் சக்தி
முன்னர் குறிப்பிட்டது போல ஓர் இலத்திரனியல் தொடர்பாடல் கருவிகள் உயிரற்ற, அசையா, சடப் பொருளாக இருந்தால் எம்மீது எந்தவிதமான பாதிப்பினையும் செலுத்தாமல் அமைதியாக இருக்க வேண்டும். ஆனால், கருவிகள் எம்மிடையே சமூக ஊடாட்டத்தை தூண்டிவிட்டு இருக்கின்றன. எமது உணர்வுகளை செயல்பட வைக்கின்றன. தம்மை பயன்படுத்த எம்மைத் தூண்டிக்கொண்டே இருக்கின்றன. அதற்குத் தனியான இலக்கு உண்டு. எமது உளவியலை எமக்கு எதிராகத் தூண்டிவிடுகிற வல்லமையும் அதற்கு உண்டு.
பிரபல சமூக ஊடகத் தளங்களான Facebook, Twitter, Instagram, Snapchat, Tiktok, Youtube யாவும் ஈர்த்திழுக்கும் தொழில்நுட்ப உத்தியால் உருவாக்கப்பட்டவை. அவற்றை பயன்படுத்தும் மக்களது எண்ணங்கள், உளப்பாங்கு மற்றும் நடத்தைகள் என்பவற்றில் தாக்கத்தை செலுத்தும் இலக்கில் உருவாக்கப்பட்டவை. இவற்றை வடிவமைக்கும் போது தொழில்நுட்ப கம்பனிகள் மனித உணர்வு, ஊக்கம், இயலுமை, தூண்டுதல் என்பனவற்றை நன்கு புரிந்து செயல்படுகின்றன. அவற்றை பயன்படுத்தும் போது, எமது கருத்துச் சுதந்திரத்தை பயன்படுத்தி, சமூகத்துக்குத் தேவையான கருத்தை சொல்கின்ற ஒரு பிரஜையின் உள்ளுணர்வை அவை எமக்கு வழங்குகின்றன. அத்தோடு, கோடிக்கணக்கான டொலர்களை செலவழித்து, வலைத்தளங்களின் ஒவ்வொரு சிறு கூறுகளையும் கல்வியறிவற்றவர்களும் இலகுவாக பயன்படுத்தும் விதத்தில் அவை உள்ளடக்கியுள்ளன. இதனால், மேற்குறித்த தளங்களை கற்றவர்களைப் போல கல்வி அறிவில் குறைந்தவர்களும் மிகத் துரிதமாக பயன்படுத்த முடியும். அதற்காக, கையேடுகளை பயன்படுத்த வேண்டிய தேவையும் இல்லை. ஓரிரு தடவைகள் பயன்படுத்தினாலே போதும் அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்தும் திறமை ஏற்பட்டு விடுகிறது. இதனையே, இலத்திரனியல் கருவிகளது ஈர்த்திழுக்கும் சக்தி என்கிறோம்.
சமூக வலைத்தளங்களின் ஈர்த்திழுக்கும் சக்தியுடன் கூடிய வடிவமைப்பு இன்று முக்கிய ஒரு பேசுபொருளாக மாறியுள்ளது. இவை மனித சமூகத்தின் உண்மையான சமூக ஊடாட்டத்தை வளப்படுத்தி இருக்கின்றனவா அல்லது குறைத்திருக்கின்றனவா என்ற பிரதான வினாவை அண்டியதாக விவாதங்கள் இடம்பெற்று வருகின்றன.
உண்மையில், சமுக ஊடகங்களின் வடிவமைப்பு மக்களிடையே உறவினை பலப்படுத்தும் ஆற்றலை வழங்குகின்ற அதேநேரம், மாயையான தொடர்புகளையும் உருவாக்கி உள்ளது. எந்தவிதமான சமூகப் பெறுமானங்களும் இல்லாமல் தொழில்நுட்பத்தின் உந்துதலால் கிடைக்கும் உறவுகள் சிறுவர்களை அதிகம் பாதிக்கின்றன. சிறுவர்களின் அவதானத்தை பாதிக்கின்றன. வெப் 3.0, மற்றும் நிகழ்நிலை உலகம் என்பனவற்றின் மீதான அதீத அக்கறை, வளர்ந்து வரும் இளம் சமூகத்தின் தொடர்பாடலை இலத்திரனியல் கருவிகளின் திரைகளுக்குள் சுருக்கிவிடுகின்றன. சிறுவர்களின் சமூக ஊடாட்டத்தைப் பொறுத்தவரையில் நிகழ்நிலை உலகிற்கும் சாதாரண சமூக வாழ்விற்குமிடையில் பெரியதொரு வித்தியாசத்தை சிறுவர்கள் காண்பதில்லை.
திருடப்படும் தகவல்கள்
தொழில்நுட்பத்தின் ஈர்த்திழுக்கும் வடிவாக்கம் பற்றி, உளவியலாளர் பீஜே ஃபோக் (BJ Fogg) என்பவர் முதன் முதலில் பேசியுள்ளார். அவரது கருத்திற்கேற்ப, நீண்ட வரலாற்றையுடைய ஈர்த்திழுக்கும் வடிவாக்கம் என்பது முதன் முதலில் தொழில்நுட்பத்தில் பயன்படுத்தப்பட்டதற்கான காரணம் வர்த்தக நோக்கமாகும். குறிப்பாக, இலாபம் ஈட்டும் நோக்கத்திலான சமூக ஊடாட்டத்தை தூண்டி விடுவதாகும். இதன் நோக்கம் வலைப்பின்னல் தளங்களையும் இலத்திரனியல் கருவிகளையும் பயன்படுத்துகின்றவர்கள் தமது நேரத்தை அதிக நேரம் சமூக ஊடாட்டத்தில் செலவிட தூண்டுவதாகும்.
முன்னர் குறிப்பிட்டது போல, அதிக சமூக ஊடாட்டம் என்பது ஒருவரது தனிப்பட்ட தகவல்களை அதிகமாக வெளிப்படுத்துவதாகும். தனிப்பட்ட தகவல்களான -பெயர், வயது, முகவரி, பாலினம், சமயம், இனம், தொழில், மாவட்டம், நாடு, கல்வித் தகமை, சமூக அந்தஸ்து, நண்பர்கள், குடும்ப உறவினர்கள், குழ்ந்தைகள், அவர்களத்து நண்பர்கள், பிறந்த திகதி, பாடசாலை, பல்கலைக்கழகம், தொழில் மற்றும் தொழில் செய்யும் இடம், அண்மையில் சென்ற பயணங்கள், அண்மையில் சந்தித்த நண்பர்கள், அண்மையில் கொள்வனவு செய்த பொருள்கள், கொள்வனவு நடத்தை, பிடித்த அம்சங்கள், பிடிக்காதவை, அரசியல் நிலைப்பாடு, பிடித்த விளையாட்டு வீரர், பிடித்த நடிகர், பிடித்த வாகனம், பயன்படுத்தும் கைப்பேசி, அதிக நேரம் செலவிடும் சமூக வலைத்தளங்கள், சமூக வலைத்தளங்களில் செலவிடும் நேரம், செல்லப்பிராணி, பயன்படுத்தும் வாகனம், பயணம் செய்ய விரும்பும் கிராமங்கள், நண்பர்களை சந்திக்கும் இடம், பொழுதுபோக்கு…. போன்ற பல்வேறு விடயங்களை பெற்றுக் கொடுக்கின்றன. வர்த்தக நிறுவனங்களை பொறுத்தவரை இது ஒரு பெரிய அடைவு தான்.
அத்தோடு, சமூக வலைப்பின்னல் தளங்களின் ஈர்த்தெடுக்கின்ற வடிவமைப்பு முற்றிலும் பாதகமானது என்று சொல்வதற்கும் இல்லை. அத்தகைய வடிவமைப்பில் சில நன்மைகளும் உண்டு. ஒருவரது நடத்தையில் நேர் நிலையான சாதகமான மாற்றங்களை கொண்டு வருவதற்கும் இத்தகைய வடிவமைப்பு பயன்படும்.
டார்க் பெட்டன்ஸ் (Dark Patterns)
ஈர்த்திழுக்கும் வடிவமைப்பில் மறைமுகமாக பொதிந்து இருக்கின்ற பயன்பாட்டாளர்களை தவறாக வழிநடத்துகின்ற போக்கினை ஆங்கிலத்தில் டார்க் பெட்டன்ஸ் (Dark Patterns) என்பார்கள். இது இயல்பிலேயே பாதிப்பானது. இத்தகைய வடிவமைப்பை தொழில்நுட்பத்தில் நேரடியாக அவதானிக்க முடியாது.
இணையதளத்திலும், கையடக்க தொலைபேசிகளிலும் நாம் பல செயலிகளை, அதாவது தொழில்நுட்ப விண்ணப்பங்களை பயன்படுத்துகிறோம். இத்தகைய விண்ணப்பங்கள், நாம் அறியாத வகையில், வேண்டுமென்றே, ஏதாவது ஒரு விடயத்தில் ஈடுபடத் தூண்டுவதை டார்க் பெட்டன்ஸ் (Dark Pattern) என்கின்றோம். இவ்வாறு, எதிர்பாராத விதமாக, இணையதளத்தின் மூலம் தவறாக நடத்தப்பட்ட அனுபவங்கள் நம்மில் பலருக்கு இருக்க முடியும். நமக்குத் தெரியாமல் ஏதாவது ஒரு விடயத்தை செய்யத் தூண்டுவது என்றால் என்ன?.
உதாரணத்திற்கு நிகழ்நிலை வணிக தளம் ஒன்றில், மாநாடு ஒன்றுக்கான அனுமதிக் கட்டணத்தை செலுத்த நாம் முற்படுகின்ற போது, அக்கட்டணத்துடன் சேர்த்து, நாம் அறியாமலேயே, இராப் போசனத்திற்காகவும், மாநாட்டுக்கு வந்து செல்வதற்கான போக்குவரத்திற்காகவும், முதலுதவி செலவினங்களுக்காகவும் மேலதிக சில தொகையை அந்த வணிக தளம் அறவிட்டுவிடும். இது நமது கவனயீனத்தின் காரணமாக மாத்திரமன்றி குறித்த இணைய தளம் நம்மை தவறாக வழிநடத்தியதன் காரணமாகவும் இடம்பெறலாம்.
நண்பர் ஒருவர் சர்வதேச மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக புலமைப் பரிசில்கள் உண்டு என இணையதளம் ஒன்றில் பிரசுரிக்கப்பட்டு இருப்பதை கண்டார். குறித்த புலமைப்பரிசில் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் உள்ள கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புலமைப்பரிசில் நிறைவடைவதற்காக இரண்டு நாட்கள் மாத்திரமே உள்ளன என்ற ஒரு அவசர செய்தியும் அங்கே இருந்தது. அத்தோடு, புலமைப்பரிசில் பெறுவதற்கு தகுதியுடையவர்கள் உடனடியாக சிறு தொகையை செலுத்தி தம்மை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்ற செய்தியும் அங்கே இருந்தது. குறித்த நபர் அவசர அவசரமாக சிறுதொகை பணத்தை செலவு செய்து அனுமதிக் கட்டணத்தை செலுத்தினார். அதன் பின்னர், தங்குமிடக் கட்டணம், விமான டிக்கெட்களுக்கான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, மற்றும் குறிப்பிட்ட சில சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் என்பனவற்றை செலுத்தாமல் அவரால் குறித்த புலமைப்பரிசிலுக்கு தகுதி பெற முடியாது என்பதை தெரிந்து கொண்டார். இப்போது அவருக்கு புலமைப் பரிசிலும் இல்லை தான் செலுத்திய அனுமதிக் கட்டணமும் இல்லை.
இதேபோன்று தான், அமேசான், அலிபாபா, தராஸ் போன்ற இணையதள வணிகத்தில் ஈடுபடுகின்ற ஏதாவது ஒரு நிறுவனத்திடம் நீங்கள் குறித்த ஒரு பொருளை கொள்வனவு செய்ய முற்படுகின்ற போது, குறித்த ஒரு பொருளுடன் சேர்த்து வேறு பல பொருட்களையும் கொள்வனவு செய்யத் தூண்டும். உதாரணத்துக்கு நீங்கள் கையடக்கத் தொலைபேசி ஒன்றை கொள்வனவு செய்வதற்கு முயன்றால், அதற்குரிய கட்டணத்தை காட்டும் அதேநேரம், கையடக்க தொலைபேசி ஒரு தொடர்பான செவிப்பொறி (earphone), திரை பாதுகாப்பு அட்டை (screen protector) மற்றும் கையடக்கத் தொலைபேசியை நிறுத்தி வைப்பதற்கான நிறுத்து கருவி என்பனவற்றுக்கான கட்டணங்களையும் சேர்த்து காட்டும். இதுவும் ஒரு வகை Dark Pattern தான்.
இன்னும் சில சந்தர்ப்பங்களில், இணையதளங்களில் பொருட்களை கொள்வனவு செய்ய முற்படும் போது அத்தளங்கள் குறித்த பொருட்களுக்கான விலையை முதலில் குறைவாக காட்டுவார்கள். அதற்கு காரணம், விலை குறைவாக இருக்கின்ற பொழுது நாம் அதனை கொள்வனவு செய்ய முற்படுவதாகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவசர அவசரமாக பொருட்களை கொள்வனவு செய்ய முயன்று இறுதியாக கட்டணம் செலுத்துகின்ற கட்டத்திற்கு வந்து சேர்கின்ற போது பொதுவகை கட்டணங்கள் சிலவும் அங்கே காணப்படும். உதாரணமாக பொருட்களை அனுப்புவதற்கான கட்டணம் (delivery charge), வரி, பொருட்கள் உடையாமல் இருப்பதற்கான கட்டணம் என பலவற்றை குறிப்பிடலாம். இவ்வாறு நம்மை அறியாமலேயே இன்னும் ஒருவருக்கு வர்த்தக ரீதியான நன்மையை பெற்றுக் கொடுப்பதற்காக நமக்குத் தீங்கு விளைவிக்கும் உத்தியை தான் டாக் பெட்டன் (Dark Pattern) என்கிறோம். இத்தகைய உத்திகளின் மூலம் ஒரு பொருளை அவசரமாக கொள்வனவு செய்யவோ, ஒரு சேவையை தாமதம் இன்றி பெற்றுக் கொள்ளவோ நாம் தள்ளப்படுகிறோம். அத்தோடு சில குறிப்பிட்ட பொருட்களை கொள்வனவு செய்ய முற்படும்போது, சில அறக்கட்டளைகளுக்கான கொடுப்பனவுகளை வழங்க வேண்டிய சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன.
இதன் இன்னும் ஒரு பகுதியாக இணையதளம் ஒன்றுக்கு இலகுவாக பிரவேசிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும் அதேவேளை, அதிலிருந்து நாம் நினைத்தபோது இலகுவாக வெளிவர முடியாத நிலை காணப்படுவதை குறிப்பிடலாம். எடுத்துக்காட்டாக, பேஸ்புக் போன்ற தளங்களுக்குள் பிரவேசிக்கின்ற பொழுது அதனை இலகுவாக செய்துவிட முடியும். ஆனால் ஒரு கணக்கை உருவாக்கிய பின்னர், அதனை இலகுவில் அழித்து விட முடியாது. சில சந்தர்ப்பங்களில் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியும் ஏற்படும். அப்போது குறித்த கணக்கை அழிப்பதற்கு பதிலாக மீண்டும் அதனை புதுப்பித்துக் கொள்வது இலகுவாக தென்படும். அப்படி வெளியேற வேண்டும் என்று இருந்தால் குறித்த இணையதளத்திற்கு பல தகவல்களை நாம் வழங்கிய பின்னர் அது சாத்தியப்படும்.
இந்தியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் yourstory.com எனும் இணையதளம் பின்வரும் தகவலை வழங்குகிறது : ஒரு ஆய்வுக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட 53 தளங்கள்/செயலிகளில் 98% செயலிகளில் குறைந்தது ஒரு டார்க் பேட்டர்னாவது இருப்பது தெரியவந்துள்ளது. அத்தோடு, சராசரியாக ஒரு செயலி ஒன்றில் சுமார் 2.7% டாக் பேட்டன் இருப்பதும் தெரிய வந்துள்ளது. ஃபின் டெக், கல்வித்தொழில்நுட்ப, எட்டெக் மற்றும் ஆரோக்கிய தொழில்நுட்பச் செயலிகளான ஹெல்த் டெக் செயலி உள்ளிட்ட ஒன்பது செயலிகள் 21 பில்லியனுக்கும் அதிகமான பதிவிறக்கங்களைக் கொண்டுள்ளன. இவற்றில் பல்வேறு விதமான ஏமாற்று வித்தைகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ஆய்வு செய்யப்பட்ட 53 செயலிகளில் 43- இல், செட்டிங்ஸ் அல்லது புரொஃபைல் பிரிவுகளில் ஏமாற்றும் வடிவங்கள் கண்டறியப்பட்டன. இதில் ஏதாவது ஒரு சிரமத்தை ஏற்படுத்தி ஒரு குறிப்பிட்ட செயலை செய்யுமாறு அவர்களை நச்சரிப்பதும் உள்ளடங்கும்.
ஹரி ப்ரிங்னள் (Harry Bringnull) என்பவர் குறிப்பிடுகையில் “ டாக் பெட்டன் என்பது இணையதளங்கள், சமூக வலைத்தளங்கள், கையடக்க பிரயோகங்கள் அவற்றை பயன்படுத்துபவர்கள் தாம் சற்றும் எதிர்பாராத அல்லது தாம் விரும்பாதவற்றை செய்யும் படி தூண்டுவதற்கான தந்திரோபாயங்கள்’ என்பார். சமூக வலைத்தளங்களில் இலகுவாக காணப்படுகின்ற பல கருவிகள் இந்த வகையைச் சாரும்.
(தொடரும்…)
-Vidivelli