ரூமி ஹாரிஸ்
கொள்கை வேறுபாடு, இயக்க வேறுபாடு, தரீக்கா வேறுபாடு இன்றி நான் நாட்டின் நாலா பாகங்களிலுமுள்ள பள்ளிவாசல்களில் ஜும்மாக்களில் கலந்து கொண்டுள்ளேன். அந்த அனுபவத்தில் பொதுவாக ஜும்மாக்களில் சீர் செய்யப்பட வேண்டிய விடயம் ஒன்றினை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
பொதுவாக ஜும்மாக்களுக்கு குறித்த தலைப்புகள் வழங்கப்பட்டிருக்கும். சில ஜும்மாக்களில் தலைப்பினை விளங்கப்படுத்துவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வார்கள். இதன்போது ஆரம்பம் ஒரு டெஸ்ட் மெட்ச் போன்று நின்று நிதானமாக இருக்கும். அத்தோடு சில சம்பவங்களை அல்லது குர்ஆன் வசனங்களை அல்லது ஹதீஸ்களை தொட்டுச் செல்ல முற்படும்பொழுது அதோடு தொடர்புபட்ட தலைப்புக்கு அப்பாற்பட்ட இன்னும் ஒன்றில் பிரசங்கம் நிகழ்த்துபவர் ஆழமாக சென்று விடுவார். உதாரணத்திற்கு அப்பிள் பழத்தை பற்றி பேச முனைந்தவர் நியூட்டனின் வரலாற்றை நீண்ட நேரமாக விளக்கி இருப்பார். இவ்வாறு அவர் மெய் மறந்து தலைப்பிலிருந்து விலகி நீண்ட தூரம் சென்ற பின்னர் திடீரென கடிகாரத்தை பார்ப்பார். அப்பொழுதுதான் தான் நீண்ட நேரம் தலைப்பிற்கு வெளியே இருப்பதை பிரசங்கம் நிகழ்த்துபவர் உணர்ந்து கொள்வார். இந்த நீண்ட சம்பவங்களை ஒரு ஜும்மாவில் சொல்லிவிட முடியாது என்று கூறிவிட்டு இப்போது மீண்டும் தலைப்புக்குள் வந்தாலும் அவர் தலைப்போடு சொல்ல விரும்பிய கருத்துக்களை சொல்வதற்கு நேரம் இடம் கொடுக்காது. எனவே குறித்த நேரத்திற்குள் ஜும்மாவை நிறைவுசெய்ய வேண்டும் என்பதற்காக ஒரு T20 போட்டி போல் அவசர அவசரமாக ஜும்மா பிரசங்கத்தை நிறைவு செய்துவிடுவார். கடைசியில் அரபியில் ஓத வேண்டிய விடயங்களைக் கூட தெளிவாக ஓதப்படாமல் பட்டும் படாமல் மிக வேகமாக ஓதப்பட்டு அல்லாஹு அக்பர் என்று பிரசங்கத்தை நிறைவு செய்துவிட்டு இறங்கி விடுவார்.
இவ்வாறான அசெளகரியங்கள் ஜும்மாக்களில் இடம்பெறாமல் ஜும்மா பிரசங்கம் நிகழ்த்த பயிற்சி வழங்கும் போது நேர முகாமைத்துவத்தையும், தலைப்போடு ஒன்றிப் போவதையும் பற்றி பயிற்சி வழங்கப்பட வேண்டும்.
அத்தோடு ஜும்மா பிரசங்கங்களில் அழகிய மொழிநடை பயன்படுத்தப்பட வேண்டும். அங்கவீனர்கள், விசேட தேவையுடயோர் என்ற அழகிய தமிழ் சொற்கள் இருக்க அண்மையில் ஒரு ஜும்மாவில் சொத்தி, நொண்டி என்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டன. மேலும் நீண்ட காலமாகவே இருந்து வருகின்ற உயர்திணை – அஃறிணை வேறுபாடு மற்றும் இது போன்ற அடிப்படை இலக்கணங்கள் சீரமைக்கப்பட வேண்டும்.
உபதேசம் செய்பவர்களுக்கே உபதேசமா? என்று யாரும் பிழையாக எண்ண வேண்டாம். பல ஜும்மாக்களில் அனுபவப்பட்ட பின்னரே இதனை எழுதி இருக்கிறேன். – Vidivelli