அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அறபுக்கல்லூரியில் 01.05.2025 அன்று நடைபெற்ற முப்பெரும் விழாவில் ஓர் அங்கமான இக்கல்லூரியின் பணிப்பாளர் சபையின் ஆயுட்காலத்தலைவராக கடமையாற்றிய பேராசிரியர் மர்ஹூம் அச்சி.எம்.இஸ்ஹாக் பற்றி தென்கிழக்குப் பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கை அறபு மொழிப் பீட முன்னாள் பீடாதிபதி, பேராசிரியர், மெளலவி எம்.எஸ்.எம்.ஜலால்தீன் ஆற்றிய நினைவுப் பேருரை
பேராசிரியர் அச்சி முஹம்மத் இஸ்ஹாக் பற்றி, அன்னாரது கல்விச் சாதனைகள் பற்றி, நாம் தெளிவான ஓர் ஆய்வைச் செய்வதாயின், அவர் வாழ்ந்த காலப்பகுதி, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் கல்வி கற்ற அவரது பின்புலம், குறிப்பாக அக்கால இலங்கை முஸ்லிம்களின் கல்வி நிலை என்பன பற்றிய தெளிவான ஒரு பார்வை எம்மிடம் இருக்க வேண்டும். இவ்வாறான பின்புலத்தை நாம் அறியாமல் பேராசிரியர் இஸ்ஹாக் பற்றிய ஒரு தெளிவான முடிவுக்கோ ஆய்வின் கருக்கோடலுக்கோ (Research Finding) நாம் வர முடியாது.
1939ஆம் ஆண்டில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்திலுள்ள நிந்தவூரில் முத்து முஹம்மது ஹாஜியாரின் மகனாக ஒரு சராசரிக் குடும்பத்தில் பிறந்து, அக்கால சூழலில் இலங்கை முஸ்லிம்களிடத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த இஸ்லாமிய பாடத்திட்டத்தையும், அல் – குர்ஆன், அல்ஹதீஸ் கல்வியையும் அடிப்படையாகக் கொண்டிருந்த உள்ளூர் மத்ரஸா ஒன்றிலேயே தனது ஆரம்பக்கல்வியை (Primary Education) பெற்றுக்கொண்டார்.
ஆழமாக வேரூன்றியிருந்த
மத்ரஸாக் கல்வி
இக்காலப் பகுதியில் இலங்கை முஸ்லிம்களிடையே மத்ரஸாக்கள் எனப்படும் இஸ்லாமியக் கல்வி நிலையங்கள் செல்வாக்குப் பெற்றிருந்தமைக்கு பல விஷேட காரணங்கள் காணப்படுகின்றன. 16ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து (கி.பி. 1505இல்) இலங்கையைக் கைப்பற்றி தமது குடியேற்ற நாடாக ஆட்சி செய்த ஒல்லாந்தர், போர்த்துக்கேயர், பிரித்தானியர் என்ற மூன்று காலனித்துவ ஆட்சியா ளர்களும் தொடர்ஞ்சேற்றியாக இலங்கையில் அறிமுகப்படுத்தியிருந்த கல்விக் கொள்கை முழுக்க முழுக்க கிறிஸ்தவ மதப் பிரசாரத்தின் அச்சாணியாகவே காணப்பட்டது. அதிலும் குறிப்பாக பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் கிறிஸ்தவ மதப் பிரசாரத்தையே தமது மூல மந்திரமாகக் கொண்டிருந்தனர்.
இலங்கையின் கல்வி நூற்றாண்டை முன்னிட்டு 1969ஆம் ஆண்டில் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட “இலங்கையின் கல்வி” (The Education of Ceylon) என்ற நான்கு வால்யூம்களைக் கொண்ட நூலில் இதுபற்றிய தெளிவான விளக்கம் காணப்படுகிறது. முழுக்க முழுக்க கிறிஸ்தவ மதகுருமாரிடம் விடப்பட்டிருந்த இலங்கையின் கல்வித் துறை கிறிஸ்தவ மதப் பிரசாரத்துக்கும், அதன் பரவலுக்கும் ஏற்ற வகையில் போர்த்துக்கேய அரசாங்கத்தால் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதுபற்றி கிறிஸ்தவ பாதிரியானஎம்.எல்.ஏ.தொன்பீற்றர் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “உண்மையில் தங்கள் குடியேற்ற நாட்டு மக்களை தங்கள் சமயத்துக்கு மாற்ற வேண்டும் என்பதே போர்த்துக்கேய அரசாங்கத்தின் நிலையான கொள்கையாகும். கிறிஸ்தவ சமயத்துக்கு அரசர்கள் அளித்த ஆதரவை போப்பாண்டவர்கள் உவந்தேற்றார்கள்.” (Sirisene – 1969)
இவ்வாறு போர்த்துக்கேய, ஒல்லாந்த காலப்பிரிவின் அனைத்து தகவல்களையும் சான்றுகளையும் தொகுத்துப் பார்க்கின்ற போது அக்காலப் பிரிவில் இலங்கை முஸ்லிம்கள் ஐரோப்பியரின் கல்விக் கூடங்களிலோ, கல்வி நடவடிக்கைகளிலோ சிறிதும் அக்கறையின்றி தமது தொழில் நடவடிக்கைகளிலேயே கவனம் செலுத்தியமை ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. காலனித்துவ ஆட்சியாளர்களின் கத்தோலிக்க மதமாற்றத்துக்கான கல்விக் கொள்கையில் சிக்கி சிங்கள மக்கள் மட்டுமன்றி, தமிழ் மக்களும் இரையாகிப் போயிருந்ததை ஒரு போர்த்துக்கேய எழுத்தாளரே பின்வருமாறு குறிப்பிடுகின்றார். “யாழ்ப்பாணத் தமிழ் மக்களும், பெளத்த மக்களும் மிக இலகுவாக கிறிஸ்வத மதத்தை தழுவிக் கொண்டார்களாயினும் முஸ்லிம்கள் எவ்வகையிலும் கிறிஸ்தவ மதத்தைத் தழுவவில்லை” (Koloniei – 1965)
இவ்வாறான காலனித்துவ ஆட்சியாளர்களின் மதமாற்ற சூழ்ச்சிக்கு எவ்விதத்திலும் இரையாகாத இலங்கைவாழ் முஸ்லிம்கள், அப்போது அறிமுகப்படுத்தப்பட்ட மேலைத்தேய கல்வி முறைக்கு இடங்கொடாது தமது பண்டைய மூதாதையர் அறிமுகப்படுத்திய இலங்கை முஸ்லிம்களிடையே வலுவுற்றிருந்த தமது மதசார்பான பள்ளிவாயல்களோடு ஒட்டிய மத்ரஸா, மக்தப் கல்வியில் மட்டுமே ஊறி, அதையே தமது குழந்தைகளுக்கு கல்வி என்ற பெயரில் புகட்டி வந்ததையும் நாம் காணலாம்.
இவ்வாறு இலங்கை முஸ்லிம்களின் கல்வி மக்தப், மத்ரஸாக்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு காணப்பட்டாலும், இலங்கையின் பல பாகங்களில் மேலை நாட்டுக் கல்வியில் தேறிய சில முஸ்லிம்கள் சிலரும் பரவலாகக் காணப்பட்டார்கள் என்பதை எமக்குக் கிடைக்கும் ஆய்வுகள் நிரூபிக்கின்றன.
முஸ்லிம்கள் தமது உறுதியான ஈமானியப் பற்றுதலினால் மேற்குலக ஆங்கில மொழிக் கல்வியையே உதாசீனம் செய்து, தமது மக்களையும், தமது எண்ணங்களையும் பூரணமாகக் காப்பாற்றிக் கொண்டார்கள். ஆனாலும் எமது சமூகம் கல்வியின் ஏணிப் படிகளில் மிகவும் பின்தங்கி சில வேளைகளில் எமது அரசியல் குடிசார் உரிமைகளையும் இழக்க வேண்டி ஏற்பட்டது வரலாறாகும். நவீன கல்வி அமைப்பில் ஏனைய சமூகங்களைவிட அதல பாதாளத்தில் நாம் வீற்றிருந்தோம் என்பதையும், அப்பின்னடைவு இன்றும் கூட எமது சமகால ஏனைய சமூகத்தினரிடையே சுமார் அரை நூற்றாண்டுக்கப்பால் எம்மைத் தள்ளிவிட்டது என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
ஆங்கிலக் கல்வி இன்மையால் இலங்கையின் சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமை, பிரதிநிதித்துவம் என்பவற்றை நோக்காகக் கொண்டு 1879ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட சட்ட சபையில் (Legislative Council) எமது பிரதிநிதித்துவம் ஆட்சியாளர்களால் வழங்கப்படாது, முஸ்லிம்களின் பிரதிநிதித்துவமும் சேர். பொன்னம்பலம் ராமநாதனுக்கே வழங்கப்பட்டமை எமது வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயமாகும்.
இவ்வாறு இலங்கை முஸ்லிம்கள் பிரித்தானிய ஏகாதிபத்திய இறுதிக்காலம் வரை (1900 வரை) சர்வதேச ரீதியிலான கல்வியில் மிகப் பின் தங்கியிருந்தாலும், அறிஞர் சித்திலெப்பை, டி.பி.ஜாயா, ஒராபி பாஷா, வாப்பிச்சி மரைக்கார், சேர். ராஸிக் பரீத், கலாநிதி பதியுதீன் மஹ்மூத், டாக்டர் எம்.ஸி.எம். கலீல் போன்ற பல அறிஞர்களின் முயற்சியினால் கல்வியில் குறிப்பாக ஆங்கிலக் கல்வியில் படிப்படியாக ஏற்றம் காணத் தொடங்கினார்கள்.
1884ஆம் ஆண்டில் கொழும்பில் முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு முதலில் தோற்றுவிக்கப்பட்ட “அல்– மத்ரஸதுல் கைரியத்துல் இஸ்லாமிய்யா” பாடசாலையும், தொடர்ந்து 1892ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கொழும்பு ஸாஹிராக் கல்லூரியும் இலங்கை முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு வித்திட்டது என்று கூறலாம். அப்போது பிரித்தானியா போன்ற ஐரோப்பிய நாடுகளில் இலங்கையின் சிங்கள, தமிழ் மக்கள் கணிசமான அளவு அங்குள்ள பல்கலைக்கழகங்களுக்கு சென்று பல்துறைகளில் சித்தி பெற்ற போதும் இலங்கை முஸ்லிம்களின் இவ்வாறான மேலைநாட்டு பல்கலைக்கழக நுழைவு ஒப்பீட்டளவில் மிகப் பின்தங்கியே காணப்பட்டது. கி.பி. 1890 – 1906 ஆண்டு காலப் பகுதிகளில் லண்டன் கேம்பிரிட்ஜ் சிரேஷ்ட பரீட்சையில் இலங்கையில் மொத்தம் 437 மாணவர்கள் தேறியிருந்தார்கள். இவர்களில் 06 பேர் மட்டுமே (1.48%) முஸ்லிம் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (Wimalaratne – 1986)
கிழக்கு மண்ணிலிருந்து
ஒரு மகன் – மகான்
இவ்வாறான முஸ்லிம்களின் கல்விப் பின்னணியிலேயே 1939 இல் பிறந்த கிழக்கு மாகாண புதல்வரான அச்சு முஹம்மது இஸ்ஹாக் அவர்களின் கல்வி எழுச்சியை நாம் நோக்க வேண்டியுள்ளது. தனது ஆரம்பக்கல்வியை தமதூரில் மத்ரஸா மற்றும் முழுமை பெறாத பாடசாலைகளில் பெற்றுக்கொண்ட இஸ்ஹாக் தொடர்ந்து கொழும்பு ஸாஹிராவில் தனது உயர் கல்வியை பெற்றுக் கொண்டார். கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் தனது 14 வயதில் இணைந்து கொள்வதற்கு முன் கல்முனையில் உள்ள “வீஸ் ஹை ஸ்கூல்” (தற்போதைய Wesley High School) இலும் தனது இடைநிலைக் கல்வியை தொடர்ந்தார்.
இஸ்ஹாக் கொழும்பு ஸாஹிராவில் சேர்ந்திருந்த காலம் ஸாஹிராவின் வரலாற்றில் ஒரு பொற்காலம் என்று கூறலாம். ஸாஹிராவின் வரலாற்றில் இலங்கை முஸ்லிம்களிடையே அக்கால கட்டத்தில் அறிவியல் உலகில் புகழ் பெற்றிருந்த டி.பி.ஜாயா, ஏ.எம்.ஏ.அஸீஸ், ஐ.எல்.எம்.மஸுர், எஸ்.எல்.எம். ஷாபி மரைக்கார் போன்ற தலைசிறந்த பலர் அதிபர்களாகக் கடமையாற்றியுள்ளார்கள். இப்பட்டியலில் ஸாஹிராவின் பொற்காலமென வர்ணிக்கப்படும் ஏ.எம்.ஏ.அஸீஸ் அவர்களின் காலப்பகுதி 1948 முதல் 1961ஆம் ஆண்டு வரையுமாகும்.
ஏ.எம்.ஏ.அஸீஸ் அக்காலப்பகுதியிலேயே இப்போதும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் அல்லது மிக அண்மையில் மரணித்த கலாநிதி.எம்.ஏ.எம். சுக்ரி, பேராசிரியர் அமீரலி, பேராசிரியர் அப்துல் காதர், எஸ்.எச்.எம்.ஜமீல், ஏ.எம்.சமீம், எம்.எம்.எம்.மஃறூப் போன்ற தலைசிறந்த அறிஞர்கள் கல்வி கற்று அறிவியலின் உச்சத்துக்கே சென்றார்கள் என்று கூறலாம்.
1953ஆம் ஆண்டு தனது 14ஆவது வயதில் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் இணைந்து தனது கல்வியைத் தொடர்ந்த (பேராசிரியர்) இஸ்ஹாக் அக்காலப்பகுதியில் அழைக்கப்பட்டுவந்த சிரேஷ்ட பாடசாலைச் சான்றிதழ் பரீட்சை (Senior School Certificate Examination:SSC)க்கான வகுப்பில் சேர்ந்து தனது இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்தார். அதன் பெறுபேறாக தற்போதைய க.பொ.த. உயர்த தர (G.C.E. Advance Level) பரீட்சைக்கு சமனாக அப்போது செயல்படுத்தப்பட்டு வந்த அதி சிரேஷ்ட பாடசாலை சான்றிதழ் பரீட்சை (Higher Senior School Certificate Examination: HSC)க்கு தகுதி பெற்று தொடர்ந்து கல்வியைப் பூர்த்தி செய்து 1957/1958 காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட ஒரே ஒரு பல்கலைக்கழகமான இலங்கை பல்கலைக்கழகத்தில் (University of Ceylon) இணைந்து 1962 பொறியியல் பீட பட்டதாரியாக மிகச் சிறந்த சித்தியுடன் வெளியானார். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற அதே ஆண்டிலேயே (1962/1963) உதவி விரிவுரையாளராக பதவியைப் பெற்றுக்கொண்டார். 1963,1964 காலப்பகுதியில் நீர்வள உதவி முகாமைத்துவ நிபுணராக (Assistant Superintent of Surveys (Water Resources)) நியமிக்கப்பட்டார்.
இலங்கை பல்கலைக்கழக
தோற்றத்தின் ஆரம்பத்தில்
இலங்கை பல்கலைக்கழகத்தின் வரலாறு 1942ஆம் ஆண்டிலேயே இலங்கை பல்கலைக்கழகம் (University of Ceylon) என்ற பெயரிலேயே பிரித்தானிய அரசாங்கத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வாறு பல்கலைக்கழகம் தோன்றி இருபது வருடங்களுக்குள் அங்கு கல்வி கற்று பொறியியல்/விஞ்ஞானத் துறைப் பட்டதாரியாக வெளியானதன் மூலம் இத்துறை சார்ந்த கிழக்கு மாகாண முதல் முஸ்லிம் பட்டதாரி என்ற பெருமையை இஸ்ஹாக் அவர்கள் பெற்றுக் கொள்கின்றார்.
விளையாட்டுத் துறையிலும்
பேராசிரியர் இஸ்ஹாக் பல்கலைக்கழக கல்வித் துறையில் மட்டுமன்றி, பாடசாலை, பல்கலைக்கழக பல்துறைசார் விளையாட்டுக்களிலும் பல்வேறு சாதனை படைத்துள்ளார். பல்கலைக்கழக காலத்தில் உதைபந்தாட்டம் (Soccer), றக்பி, கூடைப்பந்தாட்டம் (Volley Ball), மல்யுத்தம் (wrestling) போன்ற விளையாட்டுக்களில் 1958–1962 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல திறமைகளை வெளிக்காட்டியதுடன், அதி உயர் விருதான வர்ண விருதையும் (Colors Men (Letterman)) பெற்றுக்கொண்டுள்ளமை, கிழக்கு மாகாண முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல, இலங்கை முஸ்லிம் கல்வியியலாளர் சமுதாயத்துக்கே ஒரு பெருமை தரும் விடயமாகும். அதுமட்டுமன்றி இலங்கை பல்கலைக்கழகத்தின் விளையாட்டுக் கழக தலைவராகவும் செயலாளராகவும் 1960–1962 காலப்பகுதியில் கடமையாற்றி சாதனை படைத்துள்ளார்.
இவ்வாறு பாடசாலைக் காலம், பல்கலைக்கழகத்திலும் பல்வேறு விளையாட்டுத் துறைகளில் சாதனை படைத்த ஒரே கல்வியலாளராகவும் இஸ்ஹாக் திகழ்ந்தார்கள்.
வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில்
பேராசிரியர் இஸ்ஹாக் 1962 இல் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் தனது முதலாவது விஞ்ஞானத் துறைப் பட்டத்தை பெற்றவுடனேயே பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் புலமைப்பரிசில் மூலமாக தனது பட்டப்பின் படிப்புக் கல்வியை தொடரும் வாய்ப்பை மிக இலகுவாகப் பெற்றுக்கொண்டார். உதாரணமாக 1965ஆம் ஆண்டில் ஒல்லாந்து (Holland) நாட்டில் புலமைப்பரிசில் மூலம் பொறியியல் துறையில் டிப்ளோமா கல்வியைப் பூர்த்தி செய்தார். அதைத் தொடர்ந்து அமெரிக்காவின் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் புலமைப்பரிசில் மூலம் 1971ஆம் ஆண்டில் பட்டப்பின் படிப்பு விஞ்ஞான பட்டத்தையும் (M.S.), 1975 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் மற்றொரு பல்கலைக்கழகமான “வின்கொன்ஸின்” பல்கலைக்கழகத்தில் (University of Winconsin) தனது கலாநிதிப் பட்டத்தையும் (PhD) பெற்றுக் கொண்டார். இவரது பட்டப்படிப்புகள் யாவும் குடிசார் பொறியியல் துறை சார்ந்ததாகவும் (Civil Engineering) அதில் விஷேட ஆய்வுக் கருவாக “நீர்வளம்– தொலை உணர்தல்” (Water Resources, Remote Sensing) என்பது பற்றி அமைந்திருந்தமை விஷேட அம்சமாகும். அதுமட்டுமன்றி இவர் ஓர் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய குடிசார் பொறியியலாளர் (Chartered Civil Engineer of the UK) ஆகவும் தனது பதவி நிலையை உயர்த்திக் கொண்டார். இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அக்காலப் பிரிவில் இவ்வாறான தொழில்சார் தகைமைகளை யாரும் பெற்றிருக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவை மட்டுமன்றி, அமெரிக்க குடிசார் பொறியியலாளர்கள் சங்கத்தின் (American Society & Civil engineering) கெளரவ உறுப்பினராகவும், லண்டன் குடிசார் பொறியியலாளர்கள் நிறுவனம், சர்வதேச நீர்வள நிறுவனம், அமெரிக்க நீர்வள நிறுவனம் போன்றவற்றிலும் அங்கத்துவம் பெற்றிருந்தார்.
இவர் கல்வி கற்ற அமெரிக்க பல்கலைக்கழகமான வின்கொன்ஸின் பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்ததொரு பல்கலைக்கழகமாக இன்றுவரை திகழ்வதுடன் உலகின் முதன்மையான நோபல் பரிசு பெற்ற சுமார் இருபது விஞ்ஞானிகள் இப்பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்களாகும்.
அதேபோல் இவர் கல்வி கற்ற அமெரிக்க வொஷிங்டன் பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்ற எட்டு விஞ்ஞானிகள் இன்றுவரை நோபல் பரிசு பெற்றுள்ளனர். 2004 ஆம் ஆண்டில் இளவரசர் சுல்தான் சர்வதேச ஆய்வுக் கல்விக்கும் இவர் பரிந்துரைக்கப்பட்டமை இவரின் சர்வதேச ரீதியிலான அங்கீகாரத்தை வெளிப்படுத்துகின்றது.
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் உதவி விரிவுரையாளராக 1971–1974 காலப் பகுதியில் இணைந்து கொண்ட பேராசிரியர் இஸ்ஹாக் 1974 – 1975 காலப்பகுதியில் மிச்சிகன் அரச பல்கலைக்கழகத்தில் (Michigan State University) உதவி பேராசிரியராகவும் கடமையாற்றி 1975ஆம் ஆண்டளவில் பதவி உயர்வு பெற்று சவூதி அரேபிய பல்கலைக்கழகத்தில் கடமையாற்றத் தொடங்கினார். 1975ஆம் ஆண்டில் சவூதி அரேபியாவிலுள்ள மன்னர் பஹ்த் பெற்றோலிய கனிமவள பல்கலைக்கழகத்தில் குடிசார் பொறியியல் துறையில் உதவி பேராசிரியராக, துணைப் பேராசிரியராக கடமையாற்றி, 1999 ஆம் ஆண்டில் ஒரு முழுமை பெற்ற பேராசிரியராகவும் (Merit Professor) பல்வேறு பதவி உயர்வுகளை தொடர்ந்து பெற்றார்.
இவர் கடமையாற்றிய அமெரிக்கா, சவூதி அரேபிய மல்கலைக்கழகங்களில் பல நூற்றுக்கணக்கான மாணவர்களின் பட்டப்பின் படிப்பு, கலாநிதி கற்கை நெறிகளில் வழிகாட்டியாகவும் மேற்பார்வையாளராகவும் (Supervisor) கடமையாற்றி அம்மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்துக்கு பல வழிகளில் அத்திவாரமிட்டுள்ளார். அதுமட்டுமன்றி உலகத்தரம் வாய்ந்த பல்வேறு சர்வதேச ஆய்வுச் சஞ்சிகைகளில் நூற்றுக்கணக்கான துறைசார் ஆய்வுக்கட்டுரைகளையும் எழுதியுள்ளார். பல சர்வதேச ஆய்வு மாநாடுகளிலும் ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
தனது பல்கலைக்கழக பணிகளை முடித்துக்கொண்டு தாய் நாட்டுக்குத் திரும்பிய பேராசிரியர் இஸ்ஹாக் 2007ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டுவரை இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக (Chancellor) பலமுறை இலங்கை அரசாங்கத்தால் நியமிக்கப்பட்டார். நிந்தவூரில் ஸகாத் நிதியத்தை ஆரம்பித்து வைத்த முன்னோடியாகவும் பேராசிரியர் இஸ்ஹாக் விளங்கினார்கள். சவூதி அரேபிய பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக 30 வருடங்கள் பேராசிரியராக கடமையாற்றிய பெருமை அவருக்கே உரியதாகும். இலங்கையின் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சு, சுற்றுச் சூழல் இயற்கை வளங்கள் அமைச்சுகளிலும் பல வருடங்கள் ஆலோசகராகப் பணியாற்றியுள்ளார். இலங்கையின் தலைசிறந்த மத்ரஸாக்களில் ஒன்றான கிழக்கிலங்கை அறபுக்கல்லூரி (அட்டாளைச்சேனை) நிர்வாகத் தலைவராக இருபது வருடங்களுக்கு மேல் பணியாற்றி தனது ஈருலக வெற்றிக்கும் இறை அருளை பெற்றுக்கொண்ட பேராசிரியர் இஸ்ஹாக் தனது 85 ஆவது வயதில் 25.12.2024 இல் புனித மக்காவில் இறையடி சேர்ந்தார்கள். (இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்) அன்னாரின் மறுமை வெற்றிக்கு துஆ செய்வோமாக.- Vidivelli