நக்பாவை நினைவுகூர்வதன் மூலம் பலஸ்தீனுக்கு தைரியமளிப்போம்

0 101

பலஸ்தீன பூமி ஆக்கிரமிக்கப்பட்டு இம்மாதம் 15 ஆம் திகதியுடன் 77 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன. இதனை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் நக்பா தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. கொழும்பிலும் நக்பா தின நிகழ்வு பலஸ்தீன தூதரகம் மற்றும் பலஸ்தீனுக்கான இலங்கை ஒருமைப்பாட்டுக்குழு ஆகியவற்றின் ஏற்பாட்டில் இன்று மாலை நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக பிரதமர் ஹரினி அமரசூரியவும் கெளரவ அதிதியாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் கலந்து கொள்ளவுள்ளனர். இதன்போது பலஸ்தீனின் சமகால நிலைவரங்கள் தொடர்பில் அரசியல் கட்சிகள் தமது நிலைப்பாடுகளை முன்வைப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலஸ்தீனப் போராட்ட வரலாற்றிலேயே தற்போதுதான் அம்மக்கள் மிகப் பாரிய அடக்குமுறைக்கும் முற்றுகைக்கும் முகங்கொடுத்துள்ளனர். 2023 ஒக்டோபர் முதல் இன்று வரை 585 நாட்களாக தொடரும் தாக்குதல்களில் 53 ஆயிரம் பலஸ்தீனர்கள் இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 11 ஆயிரம் பேர் காணமலாக்கப்பட்டுள்ளனர்.

இப் பின்னணியில்தான் பலஸ்தீன மக்களின் தாயகத்தையும் தேசிய அடையாளத்தையும் பறித்த அல் நக்பா எனப்படும் பேரழிவு நடந்து 77 ஆண்டுகளாகின்றன. இவ்வளவு காலமும் அந்த மக்களின் நீதியும் நியாயமும் அனைத்துக்கும் மேலாக அந்த மக்களின் மனிதாபிமானமும் மதிக்கப்படாமல் இருப்பது வெட்கக் கேடானதாகும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 181 ஆவது தீர்மானத்தின் மூலம் உலகின் பலம் பொருந்திய நாடுகளின் ஒப்புதலுடனும் ஆதரவுடனும் பலஸ்தீன் இரண்டாக உடைக்கப்பட்ட வரலாறு 1917 வரை நீண்டு செல்கிறது. அதிலிருந்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக பலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை சரிசெய்வதற்கான சாதகமான முயற்சிகள் எதனையும் உலகின் பலம் வாய்ந்த நாடுகள் இதுவரை மேற்கொள்ளவில்லை.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைத் தீர்மானம் 181 இன்படி பலஸ்தீன தேசத்தில் ஒரு யூத அரசும் பலஸ்தீனர்களுக்கான அரபு தேசமும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை யூத அரசு மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. பலஸ்தீனுக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசம் அனேகமாக மொத்தமாகவே யூத அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எஞ்சியிருக்கும் காஸா நிலப்பரப்பையும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அனுசரணையுடன் முற்றாக ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது. அதற்கான அழிவுகரமான நடவடிக்கைகளையும் கடந்த ஒரு மாத காலமாக முடுக்கிவிட்டுள்ளது.

இஸ்ரேலின் அனுசரணையாளரான அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் கைச்சாத்திடப்பட்ட ஒஸ்லோ உடன்படிக்கை தற்போது வெற்றுக்காகிதமாக மாறியுள்ளது. 1948 இன் பென் கூரியன் சித்தாந்தத்தைப் பயன்படுத்தி இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் இன்று பலஸ்தீனையும் அதன் மக்களையும் ‘இரத்து’ செய்யும் நிலைக்கு வந்துள்ளனர் என்பது தான் கவலைக்கிடமானது.

பலம் வாய்ந்த நாடுகளின் அனுசரணையோடும் ஆசியோடும் மேற்கொள்ளப்பட்ட இந்த அநீதியைச் சரி செய்வதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்துவிட்டன என்பதை நாம் ஒப்புக் கொண்டாக வேண்டும். ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட நூற்றுக் கணக்கான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கான எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அவை அனைத்துமே ஒஸ்லோ உடன்படிக்கை போல காகிதங்களுக்குள்ளேயே அடங்கிவிட்டன. பலஸ்தீன மக்களின் சுயாதீன இறையாண்மை அரசுக்கான உரிமைகள் அனைத்தும் கனவாகிப் போயின.

இஸ்ரேலிய சியோனிஸ்டுகள் பலஸ்தீன மக்களை அவர்களின் கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து விரட்டியடித்து அவர்களின் அடையாளத்தையும் தேசியத்தையும் அழித்தொழிக்க முயற்சித்து வருகிறார்கள். இவற்றுக்கிடையில் பின்வாங்காமல் அந்த மக்கள் தமது வாழ்வுரிமைக்காகவும் தமக்கான சொந்த நாட்டுக்காகவும் மேற்கொள்கின்ற போராட்டங்களைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதே பெருவெற்றியாகும். இது போற்றப்பட வேண்டியதாகும்.

அந்நக்பா எனும் பேரழிவு அடையாளப்படுத்துவது பலஸ்தீன மக்களின் போராட்டத்திற்கு உலக மக்கள் தமது ஒருமைப்பாட்டைத் தெரிவிப்பதாகும். பலஸ்தீன மக்களின் நக்பாவுக்காக குரல் கொடுப்பது என்பது எம் அனைவரதும் அரசியல், பொருளாதார, கலாச்சார அடிமைத்துவத்துக்கு எதிராகக் குரல் கொடுப்பதாகும்.
உலகில் எங்கோ நடக்கின்ற அநீதியும் அநியாயமும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லோருக்கும் தாக்கம் செலுத்துகின்ற அநீதியாகவும் அநியாயமாகவும் அமையும் என்ற வகையில் மனிதாபிமான சமூகமொன்றுக்கான எமது அர்ப்பணமே நாம் பலஸ்தீன மக்களுக்கு வழங்க முடியுமான பலமாகவும் தைரியமாகவும் அமையும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.