அநியாயங்கள் இடம்பெறுவதை கண்டு உணர்ச்சிவசப்படுவது மனித இயல்புதான். ஆனாலும், அதனை புத்தியின் மூலமும், இஸ்லாமிய வழியிலும் நிர்வகிக்க முஸ்லிம் இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அஷ்ஷெய்க் அர்கம் நூராமித் வலியுறுத்தியுள்ளார். கடந்த வாரம் இடம்பெற்ற ஜும்ஆப் பிரசங்கமொன்றில் உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சூடானில் இரு தரப்பு உள்நாட்டு யுத்தத்தினால் 3 இலட்சத்துக்கு அதிகமானோர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இராணுவமும் இன்னொரு சாராரும் யுத்தத்தில் ஈடுபடும் விடயத்தில் மிகக் கவலையான விடயம் என்னவெனில், ஒரு தரப்புக்கு முஸ்லிம் நாடொன்றே ஆயுதங்களை வழங்குகின்றது. இந்த விடயத்தை நாம் கண்டுகொள்வதே இல்லை. அத்தோடு, இது பெரும்பாலானோருக்கு தெரியாத விடயமாக உள்ளது.
சிரியாவில் பல வருடங்களாக நடக்கும் யுத்தத்தில் இலட்சக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். பல நகரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. அங்கு யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை, உள்நாட்டுக்குள் இரு தரப்பாக பிரிந்து மோதிக்கொள்கின்றனர்.
உலகத்தில் இன்று யுத்தம் அரசியலாக மாறியிருக்கிறது. யார் யாருடன் இருக்கின்றனர். யார் யாருக்கு உதவி செய்கின்றனர் என்பது யாருக்கும் தெரியாது.
இன்றைய யுத்தங்கள் இப்படித்தான் இருக்கின்றது. இதிலிருந்து அல்லாஹ் எமக்கு விமோசனத்தை தர வேண்டும்.
இந்த அநியாயங்களுக்கு எதிராக நாம் குரல் கொடுக்க வேண்டும். ஆனால், இதில் மிகவும் ஜாக்கிரதையாக நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இந்த விடயத்தை இளைஞர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். அநியாயங்களை காணும்போது எம்மால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை உணர்ச்சி தூண்டப்படுகிறது. இதனால், ஆத்திரம் கோபம் மேலிடுகிறது. அநியாயம் நடக்கும்போது ஒரு மனிதனுக்கு உணர்வு தூண்டப்படுவதானது சாதாரணம்தான். ஆனால், அந்த உணர்வுகளை நிர்வகிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
முதலாவது புத்திசுவாதீனமாக அந்த உணர்வு நிர்வகிக்கப்பட வேண்டும். அடுத்தபடியாக, இஸ்லாமிய கண்ணோட்டத்தில் அந்த உணர்வு நிர்வகிக்கப்பட வேண்டியது அவசியமாகிறது. இந்த சந்தர்ப்பத்தில் குர்ஆனும் ஹதீஸும் என்ன சொல்கிறது என்று பார்க்க வேண்டும். அல்லாஹ்வின் கட்டளையையும் ரசூலின் கட்டளையையும் மதித்து உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
உணர்வுகளுக்கு நாம் கட்டுப்படுவது இஸ்லாம் அல்ல, கோபம் ஆத்திரம் வருவதாயின் அதனை நாம் கட்டுப்படுத்தாது செயற்படுத்துவதானது இஸ்லாம் அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என அஷஷெய்க் அர்கம் நூராமித் தெரிவித்துள்ளார். – Vidivelli