உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள்: அரச உளவு சேவை கான்ஸ்டபிள் கைது
புதிய விசாரணைகளின் கீழ் முதலாவது நடவடிக்கை
(எப்.அய்னா)
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய விசாரணைகளுக்கு அமைய, அரச உளவுச் சேவையின் கிழக்கு மாகாணத்துக்கு உட்பட்டு கடமைகளை முன்னெடுக்கும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை சி.ஐ.டி.யினர் கைது செய்துள்ளனர். நேற்று முன் தினம் இரவு அவரை கைது செய்ததாக சி.ஐ.டி. உயரதிகாரி ஒருவர் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கு முன்னர் அதனுடன் தொடர்புபட்ட சம்பவமாக நடந்த வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரின் கொலை தொடர்பில், விசாரணைகளை திசை திருப்ப நடவடிக்கை எடுத்தவிவகாரத்தில் இந்த பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018 நவம்பர் 30 ஆம் திகதி வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பில் சி.ஐ.டி.யினருக்கு விசாரணைகள் பொறுப்பளிக்கப்பட்ட பின்னர், குறித்த குற்றத்தை விடுதலை புலி ஆதரவாளர்கள் செய்ததாக காண்பிக்க உளவுத் துறையினர் பல்வேறு சான்றுகளை நிர்மாணித்ததாக கூறப்படுகின்றது.
அதன்படி அப்போது வவுணதீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட பின்னர் சி.ஐ.டி.யினரிடம் கையளிக்கப்பட்ட அஜந்தன் எனும் இளைஞனின் ஜெக்கட் ஒன்றினை கொலை நடந்த பகுதியில் வைத்து, பொலிஸ் மோப்பநாய் ஊடாக சந்தேகத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்ததாக கூறப்படும் விடயம் தொடர்பில், இப்போது குறித்த உளவுத்துறை பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளில் அவர் வழங்கிய வாக்கு மூலங்கள், அவரது மேலதிகாரிகள் வழங்கிய வாக்கு மூலங்கள் என அனைத்தும் ஒன்றுக்கொன்று முரணானது என உறுதி செய்யப்பட்ட நிலையில், குறித்த இடயம் தொடர்பில் இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுண தீவு கொலை விவகாரத்தில் விசாரணைகளை திசை திருப்ப உளவுத்துறை முன்னெடுத்த நடவடிக்கை காரணமாக உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சந்தேக நபர்களை கைது செய்வது சாத்தியமற்று போனதாக கருதப்படும் நிலையிலேயே இக்கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.- Vidivelli