கொவிட்-19 நோயால் உயிரிழந்தோருக்கு மரியாதையான அடக்கும் உரிமையை மறுத்தமைக்காக, விசாரணை நடத்தி நீதியினை வழங்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் இந்த அறிவிப்பின் மூலம் வலியுறுத்தப்படுகிறது.
கொவிட்-19 காரணமாக இலங்கையில் கட்டாயமாக எரிக்கப்பட்ட முதல் முஸ்லிம் நீர்கொழும்பைச் சேர்ந்த முகம்மது ஜமால் ஆவார். 2020 மார்ச் 30ஆம் திகதி அவர் உயிரிழந்தார். மார்ச் 27ஆம் திகதி வெளியான அறிவுறுத்தல்களின் படி புதைப்பதற்கு அனுமதி இருந்த போதிலும், அவரது குடும்பத்தின் சம்மதமின்றியே சடலம் எரிக்கப்பட்டது. அந்த நேரத்தில் எந்த நாடும் இது போன்ற கொள்கையை அமுலில் வைக்கவில்லை, மேலும் இது உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டுதல்களுக்கும் முரணானது. மறுநாளில், இலங்கை சுகாதார அமைச்சு, கொவிட்-19 ஆல் உயிரிழந்தோரின் சடலங்களை எரிப்பதே ஒரே வழி என கட்டாய நடைமுறைகளை அறிவித்தது. இது முஸ்லிம் சமூகம் உள்ளிட்ட பல மதங்களுக்கு எதிரானது. இந்த கொள்கைக்கு தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
இஸ்லாத்தில் உயிரிழந்த சடலத்தை எரித்தல் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது. சடலத்தை மரியாதையுடன் குளிப்பாட்டி, ஆடையணிவித்து (கஃபன் செய்து) தொழுகை செய்து நல்லடக்கம் செய்வதே அதற்குரிய மரியாதையும் கடமையுமாகும். சடலத்தை எரிப்பது உடலின் புனிதத்தைக் களையும் செயல் எனக் கருதப்படுகிறது.
ஐ.நா மனித உரிமை பேரவையின் (46/1, 2021) என்ற இலக்க தீர்மானம், இச்செயல் மத சுதந்திரத்தையும் சிறுபான்மைகள் மீதான பாகுபாடையும் அதிகரித்துள்ளதாகக் கண்டித்தது.
இலங்கையின் பல மருத்துவ அமைப்புகள், WHO மற்றும் பல தொழில்நுட்ப நிபுணர்களின் கருத்துகளையும் புறக்கணித்து, அரசாங்கம் புதைப்பதற்கான அனுமதியை மறுத்தது. பின்னர், 2021 பெப்ரவரி மாதம், கட்டாய எரித்தல் கொள்கையை நிறைவு செய்து, மட்டுப்படுத்தப்பட்ட முறையில் மட்டுமே அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது (ஓட்டமாவடியில் அடங்கம் செய்ய அனுமதித்தது). இது குடும்பங்களுக்குப் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
2024 ஜூலை மாதத்தில், அடுத்த அரசாங்கம் முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்புக் கேட்டது மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற செயற்பாடுகள் மீண்டும் நடக்காது என உறுதியளித்தது.
இந்த மிகக் கொடுமையான, மனித உரிமைகளை மீறிய வரலாற்றுப் பகுதியில் இருந்து உடனடியாக நீங்கும் வகையில், நியாயமும் இழப்பீடும் வழங்கப்படுவது இன்றியமையாதது.
நாங்கள், முஸ்லிம் சிவில் சமூகம், மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்கள், கொவிட்-19 காரணமாக இடம்பெற்ற கட்டாய சடல எரிப்பை கடுமையாகக் கண்டிக்கிறோம். சுமார் 300 பேர், அதில் பிறந்து 20 நாட்கள் மட்டுமே நிறம்பிய குழந்தையும் கூட, குடும்ப சம்மதமின்றி எரிக்கப்பட்டனர்.
இந்தக் கொடூரமான மற்றும் அநியாயமான வரலாற்றுக் கட்டத்தை நினைவுகூரும் வேளையில், நியாயமும் இழப்பீடும் மிக முக்கியமானதாகும். இவ்வழியாக மட்டுமே, நாட்டின் அனைத்து குடிமக்களும் மரியாதையுடன் எதிர்காலத்திற்கு நகர முடியும்.
நாங்கள், இலங்கையில் கொவிட்-19 நோயால் உயிரிழந்தோரின் மீது கட்டாயமாகச் செயல்படுத்தப்பட்ட “வலுக்கேற்பச் சடலம் எரித்தல்” கொள்கையால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சிவில் சமுதாய உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அந்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மீறல்களை ஆழ்ந்த வேதனையுடன், வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இந்த கொள்கையின் காரணமாக, பிறந்ததிலிருந்து சில மணி நேரங்கள் மட்டுமே வாழ்ந்த ஒரு புதுப் பிறந்த குழந்தையை உள்ளடக்கிய சுமார் 300 பேர், அவர்களது குடும்பங்களின் விருப்பமின்றி மற்றும் சம்மதமின்றி எரிக்கப்பட்டனர். இது, இலங்கையின் அரசியலமைப்பில் பாதுகாக்கப்படும் அடிப்படை உரிமைகளை மிக மோசமாக மீறியது.
வலுக்கேற்பச் சடலம் எரித்தல் நடைமுறைக்கு ஐந்தாண்டுகள் நிறைவு காணும் இந்நாளில், 2020 ஆம் ஆண்டில் அனைத்து இலங்கையர்களும் அனுபவித்த துயரங்களையும் வேதனைகளையும் நாம் மிகக்கவலையுடன் நினைவுகூருகிறோம்.
எனவே, இலங்கை அரசாங்கம் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்:
சட்டத்திற்குப் புறம்பாக “கட்டாய ஜனாஸா எரித்தல்” எவ்வாறு மற்றும் ஏன் நடைமுறையில் கொண்டு வரப்பட்டது என்பதற்கான சுயாதீனமும் நம்பகமானதுமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இது, மீண்டும் நிகழாதிருக்கும் உத்தரவாதங்கள் மற்றும் நேரடி பொறுப்பாளர்களை அடையாளம் காணும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து நீதித்துறைப்படிகளும் உள்ளடக்கப்பட வேண்டும்.
விஞ்ஞான ஆதாரங்கள் மற்றும் மனித உரிமைகள் குறித்த தகவல்களை புறக்கணித்தோரை, அதாவது இந்தக் கொடூரமான கொள்கையை திட்டமிட்டும், நடைமுறைப்படுத்தியதும் பொறுப்பாளர்களாக உள்ள அதிகாரிகளையும், முடிவெடுத்தவர்களையும் சட்டத்தின் கீழ் நீதிக்கு முன் கொண்டு வரப்படல் வேண்டும்.
மார்ச் 31ஆம் திகதியை, கட்டாய ஜனாஸா எரிக்கப்பட்டவர்களின் நினைவாகவும், எதிர்காலத்தில் இத்தகைய அநியாயங்கள் மீண்டும் நிகழாதிருக்கும் உறுதிப்பத்திரமாகவும், தேசிய நினைவு நாளாக அறிவிக்கப்படல் வேண்டும்.
ஒரு தேசிய நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும். இதில், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட வேண்டும். இது அவர்களின் நினைவுகளுக்கும், குடும்பங்களின் வேதனைகளுக்கும் மரியாதை செலுத்தும் முகமாகவும், இலங்கையின் அனைத்து சமூகங்களுக்கும் அணுகத்தக்கவாறும் இருக்க வேண்டும்.
இந்தப் பிரகடனம், இலங்கையில் நீதியும், மரியாதையும், அடிப்படை உரிமைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட வேண்டும் என்ற தீவிர உறுதிமொழியாகக் கருதப்படுகிறது.
இந்த நேரத்தில் பாதிக்கப்பட்ட சமூகத்துடன் துணையாக நின்ற அனைத்து நற்பண்புடைய நபர்களுக்கும் மற்றும் சர்வதேச சமூகத்திற்கும், நாங்கள் எங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதோடு, இச்சம்பவங்களைப் பற்றிய எங்கள் ஈடுபாடும் தொடரும் என்பதையும், அவர்களின் புரிதலையும் ஒத்துழைப்பையும் எதிர்பார்க்கின்றோம்!- Vidivelli