குழந்தைகளை நெறிப்படுத்துகின்ற முறைகள்
இணைய உலகிற்கு குழந்தைகளை தயார்படுத்துகின்ற பெற்றோர் முதன் முதலில் செய்ய வேண்டியது தமது இணைய பயன்பாடு தொடர்பான தர்க்க ரீதியான சுயவிசாரணை ஒன்றை மேற்கொள்வதாகும். குழந்தைகளுக்கும் மாணவர்களுக்கும் தமது பராமரிப்பில் உள்ளவர்களுக்கும் தாம் எத்தகைய முன்மாதிரிகளை கொண்டிருக்கிறோம் என்பதை ஒவ்வொருவரும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். சிறுவர்கள் பெற்றோர்களை கேள்வி கேட்க முடியாதவர்களாக இருந்தாலும் பெற்றோரின் இணையதள பாவனையை மிக அவதானமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும்.
பெற்றோர் எவ்வளவு நேரம் இணையதளத்தில் செலவிடுகிறார்கள், யாருடன் தொடர்புகளை பேணிக் கொள்கிறார்கள், எந்த விண்ணப்பங்களை அதிகம் பிரயோகிக்கின்றார்கள், எந்த சந்தர்ப்பங்களில் அதிகமாக இலத்திரனியல் கருவிகளை பயன்படுத்துகின்றார்கள் என்பதையெல்லாம் பிள்ளைகள் அவதானித்துக் கொண்டிருக்கிறார்கள். வாகனங்களில் பிள்ளைகளை அழைத்துச் செல்கின்ற பெற்றோர் தமது பயணங்களின் போது இலத்திரனியல் கருவிகளை பயன்படுத்துகின்ற பழக்கம் இருந்தால் முதலில் அது ஆபத்தானது என்பதற்கு அப்பால் குழந்தைகள் பெற்றோரின் இணையதள செயல்பாடுகளை நேரடியாக அவதானிக்கும் வாய்ப்பினை அது ஏற்படுத்திக் கொடுக்கிறது என்பதையும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும்.
பெற்றோர் தம்மை தயார்படுத்திக் கொள்ளுதல்
தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், இலத்திரனியல் கருவிகள் மற்றும் சமூக ஊடகங்கள் என்பனவற்றின் பிரதிகூலங்களை மாத்திரம் கருத்தில் கொள்கின்ற பெற்றோர் குழந்தைகளை வளர்த்தெடுப்பது ஒரு சிக்கலான விடயம் என்றே கருதுகின்றனர். எனினும், தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பமும் அதனோடு சார்ந்த இணைய வரப்பிரசாதங்களும் ஆபத்தானவை என்கின்ற உண்மைக்கு அப்பால், குழந்தைகளின் கல்வி சமூக பொருளாதார முன்னேற்றத்தில் அதிகளவு பயன் விளைவிக்க கூடியவை என்பனவற்றையும் பெற்றோர் கருத்தில் கொள்ள வேண்டும்.
அத்தோடு, இணைய உலகில் பிரவேசிப்பது – அதே கல்வி பொழுதுபோக்கு சமூகம் சார்ந்த எந்த விடயமாக இருந்தாலும் சரி, சிறுவர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்று என்பதையும் பெற்றோர் கருத்தில் கொள்ள வேண்டும். இலத்திரனியில் கருவிகளை குழந்தைகளிடமிருந்து பறித்தெடுக்கின்ற பொழுது அது குழந்தைகளின் அபிவிருத்தியை பல்வேறு தளங்களில் பாதிக்கின்றது என்பதையும் உணர வேண்டும். குழந்தைகளை இணைய உலகிற்கு தயார்படுத்துகின்ற ஒவ்வொரு பெற்றோரும் இணைய உலகத்திற்கான குடிமக்கள் அல்லது பிரஜைகள் யார்? அவர்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டிய பண்புகள் எவை? என்பனவற்றை அறிந்து வைத்திருப்பது காலத்தின் தேவையாகும். ஒரு குழந்தை ஏக காலத்தில் தான் வாழ்கின்ற சமூகத்திலும் தான் பிரவேசிக்கின்ற இணைய உலகத்திலும் சிறந்த பிரஜையாக தம்மை வெளிக்காட்டிக் கொள்வது பெற்றோரின் வழிநடத்தலில் உள்ளதாகும்.
ஆரோக்கியமான இணையப்
பிரவேசத்திற்கு வழிகாட்டுதல்
இணைய உலகில் குழந்தைகளை வளர்த்தெடுக்க விரும்புகின்ற பெற்றோர் தம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டிய மற்றுமொரு விடயம் இணைய உலக குடிமக்களுக்கான ஆரோக்கியமான நடத்தைகளை தெரிந்து வைத்திருப்பதாகும். குழந்தைகள் இணைய உலகில் எவ்வளவு நேரம் செலவிடுகிறார்கள் என்பதை விட தான் செலவிடும் நேரத்தில் பிரதிபலனாக இத்தகைய அடைவினை கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற்றோரிடம் இருக்க வேண்டும். இணைய உலகில் இருக்கின்ற ஒரு சந்தர்ப்பத்திலும் சக நண்பர்களை மதித்தல், ஆரோக்கியமான தொடர்பாடலில் ஈடுபடுதல், புத்தாக்கம் மிக்க தயாரிப்புகளை வெளிக்கொண்டு வருதல், காலத்துக்கு தேவையான பிரச்சினைகள் தொடர்பாக அறிவு சார்ந்த நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபடுதல், சக நண்பர்களின் கருத்துக்களுக்கு பாராட்டுகளை வழங்குதல், தர்க்க ரீதியான கருத்துக்களை முன் வைக்க வேண்டி வருகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நியாயமான முறையில் நடந்து கொள்ளுதல், சக நண்பர்களின் ரகசியங்களை பாதுகாத்தல், சக நண்பர்கள் விரும்பாத விடயங்களில் ஈடுபடுவதில் இருந்து தவிர்ந்து கொள்ளுதல், தவறான அடையாளங்களை ஏற்படுத்திக் கொண்டு ஏனையவர்களுக்கு உள்ளத்தை பாதிக்கின்ற பின்னூட்டல்களையும் கருத்துக்களையும் வழங்காதிருத்தல் போன்ற நல்ல பண்புகளை விதைக்கின்ற ஆற்றல் ஒவ்வொரு பெற்றோரிடமும் இருக்க வேண்டும்.
பருவ வயதை அடைகின்ற ஒவ்வொரு சிறுவர்களும் இணையவெளியில் தமக்கான நண்பர்களைத் தேடிக் கொள்கின்றனர். சிலர் குடும்பங்களில் ஏற்படுகின்ற தகராறு, பெற்றோரிடம் ஆசிரியர்களிடம் மற்றும் உறவினர்களிடமிருந்து போதிய அன்பு கிடைக்காமை, நட்பு கிடைக்காமை போன்ற காரணங்களால் முன்பின் அறியாத முகம் தெரியாத நண்பர்களிடம் இணைய உலகில் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு ஆறுதல் பெறுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. எவ்வாறாயினும், இணைய உலக நண்பர்களுடன் நட்பினை பேணிக் கொள்ளும் ஒவ்வொரு பிள்ளைகளிடமும் பெற்றோர் உரையாடலில் ஈடுபட வேண்டும். வயதுக்குப் பொருத்தமான வகையில் அவர்களின் நட்பு எந்த திசையை நோக்கி செல்கின்றது என்பது பற்றியும் உரையாடல்கள் இடம் பெற வேண்டும். தம்மோடு பேசுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றோர் ஏற்படுத்திக் கொடுக்கின்ற பொழுது பிள்ளைகள் தீர்வு காண முடியாமல் தமக்குள்ளேயே திண்டாடிக் கொண்டிருக்கின்ற நட்புசார் பிரச்சினைகளை திறந்த மனதோடு பேசுகின்ற வாய்ப்பு ஏற்படுகின்றது. தமது கருத்துக்களை பிள்ளைகளிடம் திணித்து பிள்ளைகள் எப்போதும் தமது எதிர்பார்ப்புகளை மாத்திரம் நிறைவேற்றுகின்றவர்களாக நடந்து கொள்ள வேண்டும் எனக் கருதுவது முரண்பாட்டு நிலையை தோற்றுவிக்கின்றது.
குழந்தைகளுக்கு எப்போது இலத்திரனியல் கருவிகளை கொடுக்க வேண்டும்?
குழந்தைகள் சுதந்திரமாக எப்போது இலத்திரனியல் கருவிகளை பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும் என்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் உள்ளன. உலக சுகாதார நிறுவனம் இரண்டு வயதுக்கு குறைந்த சிறுவர்கள் இலத்திரனியல் கருவிகளைப் பயன்படுத்துவதை ஆபத்தானதாக கருதுகிறது. பல ஆய்வாளர்கள் மூன்று தொடக்கம் 5 வயது வரையிலான சிறுவர்கள் சுமார் ஒன்று தொடக்கம் இரண்டு மணி நேரத்திற்கு இலத்திரனியல் கருவிகளைப் பயன்படுத்தலாம் என்ற பரிந்துரையை வழங்குகின்றனர். எனினும் பருவ வயதை நோக்கி வளர்கின்ற ஒரு பிள்ளை சுயாதீனமாக எப்போது இலத்திரனியில் கருவிகளை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் உறுதியான நிலைப்பாடுகள் எதுவும் கிடையாது. எனினும் இது தொடர்பான ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் வழங்குகின்ற இணைய உளவியலாளர்கள் குழந்தைகளின் தர்க்க சிந்தனை, அறிவு மட்டம், சமூகத் தொடர்பாடல், குடும்ப உறவுகளுடன் ஆரோக்கியமான உரையாடலை பேணிக் கொள்கின்ற திறன் போன்றவற்றின் அடிப்படையில் இது தீர்மானிக்கப்பட வேண்டும் என்கின்றனர். இதன் அர்த்தம், ஒரு குழந்தை பருவ வயதை அடைந்திருந்தாலும், அக்குழந்தையின் கல்வி சமூக நடத்தைகள் சுயாதீனமான இணைய பாவனைக்கு பொருத்தமற்றதாக இருந்தால் அத்தகையவர்களுக்கு சொந்தமாக பயன்படுத்தக்கூடிய இலத்திரனியல் கருவிகளை பெற்றுக் கொடுப்பது பிரச்சினைக்குரியது என்பதாகும். இந்த இடத்தில் பெற்றோர் மிகுந்த அவதானத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும் குழந்தைகளுக்கு சுயாதீனமாக பயன்படுத்துவதற்காக இலத்திரனியல் கருவிகளை பெற்றோர் பெற்றுக் கொடுக்கின்ற பொழுது அதனால் ஏற்படுகின்ற நன்மைகளைப் போன்று தீமைகளுக்கும் அவர்கள் பொறுப்பு கூற வேண்டி உள்ளது என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்குகின்ற ஒவ்வொரு பெற்றோரும் அதன் பாதுகாப்பு விண்ணப்பங்கள் (அப்) பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆரோக்கியமற்ற உள்ளடக்கங்களை, குறிப்பாக ஆபாச உள்ளடக்கங்களை சிறுவர்கள் பார்வையிடுவதை, அல்லது தேடுவதை கட்டுப்படுத்தும் பல ஏற்பாடுகள் ஆப்பிள் மற்றும் அண்ட்ரோய்ட் கையடக்க தொலைபேசிகளில் காணப்படுகின்றன. தமது கையடக்க தொலைபேசியில், செட்டிங் பகுதியில், ஆபத்தான உள்ளடக்கங்களை தடுத்து நிறுத்தும் ஏற்பாடுகள் உள்ளன. அதேபோன்று, ஆபத்தான விண்ணப்பங்களை (அப்) தரவிறக்கம் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் ஏற்பாடுகளும் உள்ளன. கைப்பேசியை பெற்றுக்கொண்ட குதூகலத்தில் பல சிறுவர்கள் தமது பெற்றோரின் வங்கி கணக்கட்டைகளை பயன்படுத்தி கொள்வனவு செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவதும் உண்டு. இவற்றை முன்கூட்டியே பெற்றோர் தடுத்து வைத்துக் கொள்ள முடியும். மிக முக்கியமானதாக பெற்றோர் கட்டுப்பாட்டு கருவிகள் பல உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இலவசமானவை. மேலும் சில கட்டணம் செலுத்தப்பட வேண்டியவை. ஒவ்வொரு பெற்றோரும் தனித்தனியாக இத்தகைய கட்டுப்பாட்டு கருவிகள் பற்றி தெரிந்து வைத்துக் கொள்வதோடு அவற்றை முதன் முதலில் பிள்ளைகளுக்கு இலத்திரனியல் கருவிகளை பெற்றுக் கொடுக்கின்ற போதே உட்செலுத்தி வைக்க வேண்டும். அவ்வாறு செய்கின்ற பொழுது, பெற்றோர் தமது எதிர்பார்ப்பை முன்கூட்டியே பிள்ளைகளுக்கு விளக்கி விட்டதாக அமைந்து விடும். இவற்றை சிறிது காலம் சென்ற பின்னர் செய்கின்ற பொழுது, பெற்றோர் தன் மீது சந்தேகப்படுகின்றார்கள் என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு வந்து விடுகின்றது. எனவே, முதன் முதலில் இலத்திரனியல் கருவிகளையும் கையடக்கத் தொலைபேசிகளையும் பிள்ளைகளுக்கு சுயாதீனமாக பயன்படுத்துவதற்காக வழங்குகின்ற பெற்றோர், இத்தகைய விடயங்களை தம்மால் செய்து கொள்ள முடியாது என்று இருக்கின்ற போது, தமது கிராமங்களில் வாழ்கின்ற இது பற்றிய போதிய ஆற்றல் உள்ளவர்களிடம் சென்று இவற்றைச் செய்து கொள்வது ஆரோக்கியமானதாகும்.- Vidivelli