சட்டத்தரணி றுடானி ஸாஹிர்
அறிமுகம்
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வரலாற்றில் பிரதிநிதித்துவ அரசியல் குறித்து பேசப்படும் காலம் சமகால அரசியல் சூழ்நிலையில் மீண்டும் ஏற்பட்டிருக்கின்றது. 1885களில் சேர்.பொன்னம்பலம் இராமனாதன் அவர்களால சட்டவாக்க சபையில் “இலங்கைச் சோனகருக்கான” தனியான பிரதிநிதித்துவம் கடுமையாக எதிர்க்கப்பட்டது. இப்பின்னணியில் றோயல் ஆசியாட்டிக் கழகத்தில் அவர் ‘Ethnology of the ‘Moors’ of Ceylon’ எனும் தலைப்பில் அவர் 26.04.1888 இல் ஆய்வுக்கட்டுரை ஒன்றை சமர்ப்பித்தார்.
சேர்.பொன்னம்பலம் இராமனாதனால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து அறிஞர் எம்.சி.சித்திலெப்பையினால் தொடர்தேர்ச்சியாக எழுதப்பட்ட மறுப்பு ஆக்கங்களும், ஐ.எல்.எம்.அப்துல் அஸீஸ் அவர்களினால் 1907ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட “A Criticism of Mr.Ramanathan’s Ethnology of the ‘Moors’ of Ceylon” எனும் மறுப்பு நூலும் வரலாற்று முக்கியத்துவமானது. சுதந்திரத்திற்கு முன்னரான மேற்படி வரலாற்று நிகழ்வுகள் ‘அரசியல் பிரதிநிதித்துவத்தின் முக்கியத்துவத்தை’ அக்கால முஸ்லிம் முன்னோடிகள் உணர்ந்து செயற்பட்டமையும், இது குறித்து அக்கால முஸ்லிம் சமூகத்தின் அரசியல் விளிப்பு நிலையையும் துலாம்பரமாக காட்டி நிற்கின்றது. 1936 இல் நடைபெற்ற அரச சபைக்கான தேர்தலில் நிகழ்ந்த முஸ்லிம் பிரதிநிதித்துவ இழப்பின் எதிரொலியாக 1939ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5ஆம் திகதி மருதானை ஸாஹிரா கல்லூரியில் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாடு நடைபெற்று 86 ஆண்டுகள் முடிவுறுகின்றது. இத்தறுவாயில் இவ்வரலாற்று முக்கியத்துவமான மாநாட்டின் பின்னணி குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.
முதலாவது முஸ்லிம் சட்டவாக்க
சபை அங்கத்தவர்
கோல்புறூக்- கமறன் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கமைய முதலாவது சட்டவாக்கச் சபை (Legislative Council)1833 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்டதுடன் இன ரீதியான பிரதிநிதித்துவத்துவமும் பிரித்தானியரினால் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டவாக்க சபை தாபிக்கப்பட்டு சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் 1883 ஆம் ஆண்டு முதலாவது முஸ்லிம் (நியமன) அங்கத்தவராக எம்.சீ. அப்துர் ரஹ்மான் சட்டவாக்க சபையில் நுழைந்தார். 1883 தொடக்கம் 1889 வரை அவர் முஸ்லிம்களை பிரதிநிதித்துவப்படுத்தினார். 1900- –1915 வரை வாப்பிச்சி மரைக்கார் அப்துர் ரஹ்மான் அவர்களும், 1917-–1923 வரை என்.எச்.எம். அப்துல் காதர் அவர்களும் நியமன அங்கத்தவர்களாக கவர்னரினால் நியமிக்கப்பட்டனர். 2 ஆவது மனிங் சீர்திருத்தத்தின் பின், 1924ஆம் ஆண்டு சட்டவாக்க சபைக்கு நடாத்தப்பட்ட தேர்தலில் சேர்.முஹம்மது மாக்கான் மாக்கார், என்.எச்.எம். அப்துல் காதர், கலாநிதி ரீ.பி.ஜாயா ஆகிய மூன்று முஸ்லிம் பிரதிநிதிகள் வெற்றிபெற்று சட்டவாக்க சபை நுழைந்தனர்.
1931 ஆம் ஆண்டு அரச சபைக்கான தேர்தல்
டொனமூர் சீர்திருத்தத்தின் மூலம் 1931ஆம் ஆண்டு சர்வசன வாக்குரிமை அறிமுகப்படுத்தப்பட்டு அரச சபைக்கான தேர்தல் (Sate Council Elections) பிரதேச வாரி முறையில் (Territorial Basis) நடத்தப்பட்டது. முஸ்லிம்களின் கோரிக்கைகளை டொனமூர் சீர்திருத்தக்குழு புறக்கணித்திருந்தது. இந்நிலையில், முஸ்லிம் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்படக் கூடிய இரண்டே இரண்டு தொகுதிகள் மட்டும் காணப்பட்டன. ஒன்று கொழும்பு மத்தி; மற்றையது தற்போதைய அம்பாறை மாவட்டம் உள்ளடங்கலான மட்டக்களப்பு- தெற்கு தேர்தல் தொகுதி. முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும் நோக்கத்துடன் அத்தேர்தலில் சேர் முஹம்மது மாக்கான் மாக்கார் மட்டக்களப்பு- தெற்கு தேர்தல் தொகுதியில் பெரும் நிலச்சுவாந்தரும் சட்டவாக்க சபை உறுப்பினருமாக இருந்த ஈ.ஆர். தம்பிமுத்து அவர்களை எதிர்த்துப் போட்டியிட்டார். கிழக்கு முஸ்லிம் மக்கள் முழுமையான ஆதரவை சேர். முஹம்மது மாக்கான் மாக்கார் அவர்களுக்கு வழங்கினார்கள். 31 வயதிற்கு மேற்பட்ட ஆண், பெண் இருபாலாரும் வாக்களித்தனர். சிவப்பு (ஈ.ஆர். தம்பிமுத்து), பச்சை (சேர்.முஹம்மத் மாக்கான் மாக்கார்) நிறங்கள் அவர்களுக்கு முறையே ஒதுக்கப்பட்டிருந்தன. தேர்தல் முடிவில், அரச சபைக்கான ஒரேயொரு முஸ்லிம் அங்கத்தவராக சேர்.முஹம்மத் மாக்கான் மாக்கார் மட்டக்களப்பு- தெற்கு தேர்தல் தொகுதியிலிருந்து 2637 பெரும்பான்மை வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டார். அதே வேளை கொழும்பு- மத்தி தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட ரீ.பி. ஜாயா அவர்கள் ஏ.ஈ. குணசிங்கவினால் 5203 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார்.
தேர்தலொன்றின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதலாவது முஸ்லிம் உறுப்பினரைத் தேர்ந்தெடுத்த பெருமையை இதன் மூலம் மட்டக்களப்பு- தெற்கு தேர்தல் தொகுதி பெறுகின்றது. சேர்.முஹம்மது மாக்கான் மாக்கார் அவர்கள் முதலாவது முஸ்லிம் அமைச்சராக அமைச்சரவையில் அமர்வதற்கும் இவ்வெற்றி வழிவகுத்தது. அவர் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் போக்குவரத்து அமைச்சராக கடமையாற்றினார்.
துரதிஷ்டவசமாக 1936ஆம் ஆண்டு நடைபெற்ற அரச சபைக்கான தேர்தலில் எந்தவொரு முஸ்லிம் அங்கத்தவரும் தெரிவாகவில்லை. புதிய தேர்தல் முறையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் அதியுச்ச சபையான அரச சபையில் இழக்கப்பட்டது. பூச்சிய நிலைக்கு வந்தது. இவ்வரசியல் நெருக்கடி நிலை பெரும் கவலையையும் அதிருப்தி அலையையும் முஸ்லிம்கள் மத்தியில் உருவாக்கியது. இது இவ்வாறிருக்க, பல்வேறு சீர்திருத்த சிபாரிசுகளை முன்வைத்து 04.03.1939 கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இலங்கை தேசிய காங்கிரஸின் விஷேட கூட்டம் நடைபெற்றது.
“இலங்கை முஸ்லிம்களுக்கு 68 இல் 8 ஸ்தானங்கள் வேண்டும்”
கவர்ணரின் புதிய சீர்திருத்த சிபாரிசில் ஏமாற்றமடைந்த முஸ்லிம்கள் “இலங்கை முஸ்லிம்களுக்கு 68 இல் 8 ஸ்தானங்கள் வேண்டும்” என்ற கோரிக்கையை முன்னிறுத்தி மார்ச் மாதம் 5ஆம் திகதி 1939ஆம் ஆண்டு கொழும்பு மருதானை ஸாஹிரா கல்லூரியில் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் மாநாட்டை ஏற்பாடு செய்தனர். மேற்படி பிரேரணையை ரி.பீ.ஜாயா அவர்கள் முன்வைத்தார். அம் மாநாட்டின் தலைவராக சேர். முஹம்மது மாக்கான் மாக்கார் அவர்களும் செயலாளராக டாக்டர் பதியுத்தீன் மஹ்மூத் அவர்களும் செயற்பட்டனர். தீவின் நாலா புறத்திலுமிருந்தும் முஸ்லிம்கள் ஒன்றுகூடினர். சுமார் 6 மணித்தியாலங்கள் இடம்பெற்ற இம்மாநாட்டில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தின் அவசியம் குறித்தும், தேசிய அரசியலில் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலம் குறித்தும் தீவிரமாக சிந்தித்த டாக்டர் எம்.ஸீ.எம்.கலீல், முதலியார் எஸ்.ரீ.அப்துல் ரஹ்மான், டபிள்யூ.எம் ஹாஸிம், புரக்டர் எம்.ஐ.எம்.ஹனீபா, எம்.எச்.எம்.சுலைமான், எச்.எஸ்.இஸ்மாயில், கலீபத்துஷ்ஷாதுலி எஸ்.ஓ.எஸ். ஐதுரூஸ் மௌலானா, சேர்.முஹம்மது மாக்கான் மாக்கார், சேர் ராஸிக் பரீட், ரி.பி.ஜாயா, எம்.எஸ்.காரியப்பர் ஸஹீட் ஏ மரிக்கார், பதியுதீன் மஹ்மூத், எஸ்.எல்.முஹம்மத், டாக்டர்.எம்.எஸ். கெளசுல் அமீர் உட்பட பல முஸ்லிம் தலைவர்கள் பங்குபற்றினர்.
அம்மாநாட்டில் சேர் முஹம்மது மாக்கான் மாக்கார் அவர்கள் தெரிவித்த பின்வரும் கருத்துக்கள் கூர்ந்து கவனிக்கத்தக்கது.
“முஸ்லிம்களுக்கு போதுமான பிரதிநிதித்துவத்தை நான் கேட்டேன், ஆனால் 50:50 கோரிக்கையை ஆதரிக்குமளவு நான் செல்லமாட்டேன், ஏனெனில் எண்கள் மற்றும் விகிதாசாரங்கள் எனும் கோரிக்கைகள் என்பன நல்ல அரசாங்கம் (Good Government) எனும் பிரதான கேள்விக்கு சற்று கூடுதலாகவோ குறைவாகவோ இருக்கும். மேலும், நல்ல அரசாங்கம் என்பது என்ன? இரு வார்த்தைகளில் அதனை சாரம்சப்படுத்தலாம். ஒன்று நீதி இரண்டாவது பாரபட்சமின்மை. எல்லா மனிதர்களுக்குமான நீதி. மற்றும் எல்லாச்சமூகங்களுக்கும் பாரபட்சமின்றிய நடாத்துகை. நீதி மற்றும் பாரபட்சமின்மையின் பெயரில் பெரும்பான்மை சமூகம், சிறுபான்மை சமூகத்தின் நிலைக்குத் தாழ்த்தப்பட வேண்டும் என்று நான் அப்பொழுதும், இப்பொழுதும் விரும்பவுமில்லை. அதற்கு மாறாக, என்னுடைய நல்லெண்ணத்தை காட்டும் விதமாக ‘இந்நாட்டில் சிங்கள ஆட்சி நடைபெறுவதற்கு எனக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை’ என்று குறிப்பிட்டுள்ளேன். என் உள்ளம் வகுப்பு வாத தப்பெண்ணத்திலிருந்து எவ்வளவு சுதந்திரமாக இருக்கின்றது என்பதற்கு இக்கருத்து மட்டுமே போதுமான சான்றாகும்.”
மாநாட்டில் பதியுதீன் மஹ்மூத் அவர்கள் பின்வருமாறு கருத்துக்களை பகிர்ந்தார் “என்னுடைய சிங்கள சகோதரர்களுக்கு நான் நிச்சயமாகக் கூற விரும்புவது என்னவென்றால் இந்த நாட்டிற்கு பூரண விடுதலை கோருவதில் நான் அவர்களோடு ஒருவனாய் இருக்கின்றேன். அவர்களுடைய தேசிய, கலாசார அபிலாசைகளை நான் வெகுவாகப் போற்றுபவன் என்று அவர்கள் என்னை கணிக்கலாம். அவர்கள் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும் நானும் எனது சீதாயமும் என்றும் இந்நாட்டில் நம்பிக்கைக்குப் பாத்திரமான நண்பர்களாக வாழுவோம். என்னிலோ அன்றி எனது சமுதாயத்திலோ இந்நாட்டிற்கு அதன் குழந்தைகள் காட்ட வேண்டிய பற்றிலோ அல்லது அசைக்க முடியாத விசுவாசத்திலோ சற்றேனும் குறைகாண முடியாது.”
1905 ஆம் ஆண்டு நடைபெற்ற துருக்கித்தொப்பிப் போராட்டத்திற்குப்பின்னர் பெருந்திரளான முஸ்லிம்கள் கலந்துகொண்ட வரலாற்றுச்சிறப்புமிக்க கூட்டமாக இம்மாநாடு அமைந்தது. முஸ்லிம்களுக்கான போதுமான அளவு பிரதிநிதித்துவத்தை (Adequate Representation) ஏனைய சமூகங்களது நலனை பாதிக்காத வண்ணம் பிரித்தானிய அரசிடம் கோருவது குறித்து பல்வேறு தரப்பட்ட கருத்துக்களும் குழப்பகரமான நிலைமையும் தோன்றியிருந்தது. வேற்றுமைகளை உதறித்தள்ளி பிரிந்து நின்ற பலரையும் அரசியல் எழுச்சியடையச் செய்து பல்வேறு கருத்து நிலையிலிருந்தவர்களையும் அம்மாநாடு ஒன்றிணைத்தது. மக்கள் வெள்ளம் ஸாஹிராக்கல்லூரியில் நிரம்பி வழிந்தது. கல்லூரியின் நடைபாதை, மூலை முடுக்குகளெல்லாம் மக்கள் பேரார்வத்துடன் குழுமி நின்றனர். இம்மாநாடு குறித்த செய்தியை 06.03.1939இல் முன்பக்கத்தில் தினகரன் பிரசுரித்தது. இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள், பிரேரணைகள் சொற்பொழிவுகள் பின்னர் எழுத்து வடிவில் தொகுக்கப்பட்டு பிரிட்டிஷ் மன்னர் 5ஆம் ஜோர்ஜ், குடியேற்ற மந்திரி, இலங்கை கவர்னர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அந்நூலின் பெயர் பின்வருமாறு அமைந்திருந்தது “Proceedings of the all Ceylon Muslim Political Conference held at Zahira College on 5th March 1939 on the reforms of the constitution compiled and published for and on behalf of the all Ceylon Muslim political Conference Committee”.
முடிவுரை
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பம் இலங்கையின் வரலாற்றில் மிக முக்கிய காலப்பிரிவாகும். இலங்கையரை அரசியல் விழிப்படையச்செய்த காலம் அது. அரசியல் எதிர்காலம் குறித்து சிந்தித்து தம்மை தயார்படுத்தும் விதமாக ஒவ்வொரு சமுதாயமும் தம்மை புனர்நிர்மாணம் செய்து கொண்டிருந்தனர். முஸ்லிம்கள் கல்வியறிவிலும், அரசியல் முதிர்ச்சியிலும் பின்தங்கி நின்றனர். 1915 இல் நிகழ்ந்த கண்டிக்கலவரம் முஸ்லிம்களை நிலைகுலையச் செய்தது. அக்காலப்பிரிவில் இலங்கை சோனகரின் அபிலாஷைகளை வென்றெடுப்பதோடு, இலங்கையானது ஆங்கில ஏகாதிபத்தியத்திலிருந்து விடுபட வேண்டுமென முஸ்லிம் தேசிய தலைவர்கள் முன்னின்றுழைத்தனர். சுதந்திரத்திற்கு முன்னரான காலத்தில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தை பாதுகாப்பதோடு தேசிய அரசியலையும் நேர்மறையாக கையாளுவது என சாதுர்யமாக அரசியலை அவர்கள் அணுகியுள்ளனர். தமது சமூகத்தினதும் தேசத்தினதும் எதிர்காலம் குறித்து ஒருசேர சிந்தித்து கூட்டாக செயலாற்றியிருப்பது அக்கால முஸ்லிம் அரசியல் தலைவர்களது தூரதிருஷ்டி பார்வையையும் சமூக அக்கறையையும் தேசப்பற்றையும் தெளிவாகக் காட்டி நிற்கின்றது.- Vidivelli