காஸா மக்களை வேறிடத்தில் குடியமர்த்தும் திட்டம் அநீதியானது
நிராகரித்த நாடுகளுக்கு உலமா சபை நன்றி தெரிவிப்பு
காஸா மக்களை பலவந்தமாக வேறிடத்தில் குடியமர்த்தும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் திட்டத்தை உறுதியாக நிராகரித்த அனைத்து அரசாங்கங்களுக்கும், நிறுவனங்களுக்கும் தமது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
ஏற்றுக்கொள்ள முடியாத இந்த முன்மொழிவானது பலஸ்தீன மக்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் கௌரவத்தை குறைத்து மதிப்பிடுவதுடன் சர்வதேச சட்டம், மனித உரிமைகள் மற்றும் நீதிக்கோட்பாடு, சுய நிர்ணய உரிமை என்பவற்றை புறக்கணிப்பதாகவும் உள்ளது.
காஸா மக்களின் கொள்கை ரீதியான நிலைப்பாடானது நீதி, சமாதானம் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் என்பவற்றுக்கான உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. பலஸ்தீனிய மக்களின் சுதந்திரம், கண்ணியம் மற்றும் அரசுரிமைக்கான நியாயமான அபிலாஷைகளை ஆதரிக்குமாறு சர்வதேச சமூகத்தினை நாங்கள் கேட்டுக் கொள்கின்றோம்.
பல தசாப்தங்களாக ஆக்கிரமிப்பு, இடப்பெயர்வுடன் துன்பங்களை அனுபவித்த காஸா மற்றும் பலஸ்தீன மக்களுடன் நாங்களும் இணைந்து நிற்கிறோம். முன்மொழியப்பட்ட இடமாற்றத் திட்டம் அநீதியானது மட்டுமன்றி பிராந்தியத்தில் நிலவும் மனிதாபிமான நெருக்கடியை மேலும் மோசமாக்குகிறது.
பலஸ்தீன மக்களின் நிலம், வீடுகள் மற்றும் இறையாண்மைக்கான உரிமைகள் சர்வதேச சமூகத்தால் ஆதரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட வேண்டும்.
சர்வதேச சட்டங்கள், நீதி மற்றும் சமத்துவக் கொள்கைகளுக்கு இணங்க பலஸ்தீன மக்களின் சுதந்திரம், கௌரவம் மற்றும் மாநில உரிமைகளைப் பெற தங்களது ஆதரவை தீவிரப்படுத்துமாறு உலகளாவிய தலைவர்கள், சர்வதேச அமைப்புகள் மற்றும் மனச்சாட்சி உள்ள அனைத்து நாடுகளையும் ம் நாங்கள் அழைக்கிறோம்.
பலஸ்தீன மக்களுக்கு அல்லாஹு தஆலா வலிமைகளையும், பொறுமையையும், வெற்றியையும் வழங்குவானாக. அப்பகுதியில் நீதியும் நிரந்தர அமைதியும் நிலவட்டும்.- Vidivelli