(றிப்தி அலி)
இவ்வருடத்திற்கான புனித ஹஜ் கடமையினை நிறைவேற்றுவதற்கான இலங்கையின் முதலாவது குழு எதிர்வரும் மே 13ஆம் திகதி செல்லவுள்ளதாக ஹஜ் முகவர் சங்கத்தின் தலைவர் ஏ.கியூ.பீ.எம். கரீம் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்.
இதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரச ஹஜ் குழு, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கொழும்பிலுள்ள சவூதி அரேபிய தூதுவராலயம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த வருடம் புனித ஹஜ் கடமையினை மேற்கொள்ள சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு 3,500 ஹஜ் கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 90 சதவீதமான யாத்திரிகர்கள் தமது பெயர்களை பதிவு செயதுள்ளதாக அரச ஹஜ் குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கைக்கு இந்த வருடம் கிடைக்கப் பெற்ற ஹஜ் கோட்டாக்கள் 92 ஹஜ் முகவர் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அதேவேளை, 30 நாட்களுக் கான ஹஜ் பொதிக்கு 21 இலட்சம் ரூபாவினை அறிவிடுமாறு ஹஜ் குழு சிபாரிசு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை யாத்திரிகர்களுக்கு இந்த வருடம் மினாவில் 2ஆவது வலயத்தின் பீ பிரிவிலேயே விலேயே கூடாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் ஹஜ் குழு தீர்மானித்துள்ளது. – Vidivelli