ஏ.எச்.ஏ. ஹுஸைன்
இலங்கையில் வருடாந்த இறப்பு வீதம் அதிகரித்திருக்கின்ற அதேவேளை பிறப்பு வீதம் கணிசமாகக் குறைந்திருப்பதாக துறைசார்ந்தவர்களால் வெளியிடப்பட்டிருக்கின்ற அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் குறிப்பிடத்தக்க அளவு குறைவடைந்துள்ளதாக கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இந்த விடயம்பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, கடந்த காலங்களில் வருடாந்தம் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 3 இலட்சத்து 60 ஆயிரமாகக் காணப்பட்டது. எனினும் இந்த எண்ணிக்கை தற்போது 2 இலட்சத்து 40 ஆயிரமாகக் குறைவடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
நாட்டில், கடந்த காலங்களில், நிலவிய பொருளாதார நெருக்கடியினால் ஏராளமான இளையோர் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளமை குழந்தை பிறப்பு வீதத்தின் வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக அமைந்துள்ளதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் சிலர் தங்களது பொருளாதாரம் வலுப்பெறும்வரை திருமணத்தைக் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
குறைந்தளவான குழந்தை பிறப்பு வீதம் நாட்டின் எதிர்கால மனித வளத்திற்குச் சவாலாக அமையும் என்றும் விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
மகப்பேற்று மருத்துவர்கள் விடுத்துள்ள மற்றொரு பிறப்பு இறப்பு பற்றிய அறிக்கையில் மேலும் சில விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு இலங்கையில் 325,000 பேர் பிறந்துள்ளனர். ஆனால் இந்த எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் 247,000 ஆகக் குறைவடைந்துள்ளது.
தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்வதை தாமதமாக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. திருமணமான பல தம்பதிகள் இலங்கையை விட்டு வெளியேறியுள்ளனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திருமணம் செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 12.5 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளது.
இதற்கிடையே, ஆண்டு இறப்புகள் 2017இல் 146,000இல் இருந்து 2023இல் 181,000 ஆக அதிகரித்திருந்ததாக மகப்பேற்று வைத்தியர் பேராசிரியர் சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.
குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து, ஆட்களின் இறப்பு வீதம் அதிகரித்து வருவது எவ்வாறு பாதிக்கும்? அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் என்ன?
இந்த நூற்றாண்டின் இறுதியில் உலக மக்கள் தொகை குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக, சீனாவின் தற்போதைய 140 கோடி மக்கள் தொகை கிட்டத்தட்ட பாதியாகக் குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
உலக மக்கள்தொகை தினம் ஜூலை 11 அன்று வருகிறது, மேலும் சமூக-பொருளாதார அரசியல் விவகாரங்களில் மக்கள்தொகை கூடிக் குறைவது ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.
இலங்கையில் பிறப்பு வீதம் வேகமாக வீழ்ச்சியடைந்து 30 சத வீதமாகக் குறைந்துள்ளது.
நாட்டில் பிறப்பு விகிதங்கள் குறைந்து வருவதற்கு பொருளாதார சிக்கல்களே முதன்மையான காரணமாகும் என்று நிபுணத்துவ மருத்துவர்களும் துறைசார்ந்த ஆய்வாளர்களும் தெரிவிக்கின்றனர்.
பல குடும்பங்கள் இரண்டாவது குழந்தையைப் பெற்றுக் கொள்ளத் தேவை இல்லை என்று விரும்புகின்றனர். குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாதவர்களைப் பொறுத்தவரை, குழந்தைகளைப் பெறுவது அவர்களின் விருப்புப் பட்டியலில் முன்னுரிமையில் இல்லை.
மேலும், பல புதுமணத் தம்பதிகள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும் எண்ணத்தைத் தள்ளிப்போட்டுவிட்டு, அதிகம் சம்பாதிப்பதில் முன்னுரிமை கொடுத்து, குடும்ப வாழ்வைத் தொடங்குவதைத் தாமதப்படுத்துகின்றனர்.
நாட்டை விட்டுப் புலம்பெயர்ந்த பலர் இலங்கைக்குத் திரும்புவதைக் கருத்தில் கொள்ளவில்லை. இலங்கைத் தம்பதிகள் பலர் வெளிநாடுகளுக்கு புலம்பெயருவதை நோக்கமாக கொண்டுள்ளனர். இதுவரை இலங்கையில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்த இளைஞர்களும் தற்போது வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்.
சிறுபான்மை இனங்களை எடுத்துக் கொண்டால் அவர்களது பிறப்பு வீதத்தைப் பாதித்த பல காரணிகள் உள்ளன.
தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில், தமிழர் உரிமைப் போராட்டத்தின் விளைவாக படையினரால் அநேகமான இளைஞர் யுவதிகள் கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை, காணாமல் போனமை, அரசியல் கைதிகளாக விசாரணையின்றி வெளியில் விடப்படாமல் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளமை, புலம்பெயர்ந்தமை, விதவை மறுவாழ்வு ஊக்குவிக்கப்படாமை போன்றவை பிறப்பு வீதம் குறைவடைந்தமைக்கான காரணங்களாக உள்ளன என்று சமூக நோக்கர்கள் தெரிவிக்கின்றனர்.
முஸ்லிம் சமூகத்தை எடுத்துக்கொண்டால் அந்த சமூகத்திலுள்ள பலர் எல்ரீரீஈ இயக்கம் உட்பட ஏனைய தமிழர் உரிமைப் போராட்ட ஆயுத தாரிகளால் கொல்லப்பட்மை, இனச் சுத்திகரிப்புச் செய்யப்பட்டு அவர்களது வாழ்விடங்களை விட்டு விரட்டியக்கப்பட்டதால் குறுகிய அகதி முகாம்களில் நீண்ட கால அகதி வாழ்க்கை, ஈஸ்டர் குண்டு வெடிப்பைக் காரணம் காட்டி பலர் சிறையிலடைக்கப்பட்டுள்ளமை, முஸ்லிம்கள் அளவுக்கதிகமாக இனப்பெருக்கம் செய்வதாகப் பரப்பப்படும் இனவாத வெறுப்பு அச்சுறுத்தல், நிருவாக ரீதியான ஒடுக்குமுறைகள் பாகுபாடு என்பனவற்றாலும் அந்த சமூகத்தின் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுவில் சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களை எடுத்துக் கொண்டால், நாட்டில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தம் அதனால் ஏராளமான மூவின சமூகங்களையும் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டமை, அகதி வாழ்க்கை, இடம்பெயர்வு, சிறை வாழ்க்கை, கடத்தப்பட்டமை, காணாமலாக்கப்பட்டமை, கொல்லப்பட்டமை போன்றவையும் இயற்கை இடர்களான சுனாமி, கொரோனா உயிர்க் கொல்லி வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட மரணங்கள் போன்றவை மூவின சமூகங்களினதும் பிறப்பு வீதம் குறைந்து இறப்பு வீதம் அதிகரித்தமைக்கான காரணங்களாக உள்வாங்க முடியும்.
மலையகத்தில குடும்பக் கட்டுப்பாடு திணிக்கப்பட்டதாக அங்குள்ள சமூக அமைப்புக்கள் கருதுகின்றன. மலையகத்தின் தேயிலை, இறப்பர் தோட்டங்களில் இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பெண்கள் நிரந்தர குடும்பக் கட்டுப்பாடு செய்துகொள்ளும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருந்தமை, அங்கு மக்கள்தொகை வளர்ச்சி குறைவதற்கு ஒரு முக்கிய காரணம் என்று கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் இயக்குநர் பெரியசாமி முத்துலிங்கம் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சுட்டிக்காட்டியிருந்தார்.
சுகாதார அமைச்சின் 2023ஆம் ஆண்டுக்குரிய செயல்திறன் முன்னேற்ற அறிக்கையில் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுள்ள குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது.
அதில், பொருளாதார நெருக்கடி மற்றும் காலதாமதமான வழக்கமான கொள்முதல் காரணமாக, குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கான கருத்தடை சாதனங்களில் பற்றாக்குறை ஏற்பட்டது. எனினும், பயனுள்ள தேசிய குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு அமைவாக தேவையான அனைத்து அத்தியாவசிய குடும்பக் கட்டுப்பாட்டுச் சேவைகளுக்கான கருத்தடைப் பொருட்களும் அரசு நிதியில் வாங்கப்பட்டு 2022ஆம் ஆண்டிலும் 2023ஆம் ஆண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டிலும் அனைத்து மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோவிட் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியின் சவால்களுக்கு மத்தியில் 2021ஆம் ஆண்டில் 57.7% சதவீதமாக இருந்த நவீன கருத்தடை பரவல் விகிதம் 2022 இல் 59.4 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் மாவட்டங்களுக்கு கருத்தடைப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ததாக அந்த அறிக்கையில் மேலும் விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
2024ஆம் அரையாண்டு அரசிறை நிலைப்பாட்டு அறிக்கையில் செப்பமற்ற பிறப்பு வீதம் செப்பமற்ற இறப்பு வீதம் என்று குறிப்பிடப்பட்டு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மேலும், தேசிய கணக்காய்வு அலுவலகம் செயலாற்றல் கணக்காய்வுப் பிரிவு வெளியிட்டுள்ள 2013ஆம் ஆண்டு தொடக்கம் 2017ஆம் ஆண்டு வரையிலுமான ஆய்வு அறிக்கையில் 93 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமை, நாட்டு நிலவரம் மற்றும் வேறு காரணங்களுக்காகத் தற்காலிகமாக மூடப்பட்டிருந்ததோடு 2018ஆம் ஆண்டினுள் மட்டும் 101 பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததாக கல்வி அமைச்சின் புள்ளி விவரவியல் தகவல் அடிப்படையில் அவதானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தரம் 1 இல் மாணவர்கள் இணைவதில் காணப்படுகின்ற வீழ்ச்சி நிலையானது, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறப்பு வீதத்தின் வீழ்ச்சியைக் காட்டுவதாக, கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் ஜோன்குயின்ரஸ் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் 2018 ஏப்ரல் 02ஆம் திகதி நடைபெற்றபோது குறிப்பிட்டிருந்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, சமீப காலங்களில் கருவுறுதலிலும் ஆயுட்கால விகிதங்களிலும் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 1970 களின் முற்பகுதியில், பெண்கள் சராசரியாக தலா 4,5 குழந்தைகளைப் பெற்றனர். இருப்பினும், 2015ஆம் ஆண்டில், உலகின் மொத்த கருவுறுதல் ஒரு பெண்ணுக்கு 2 குழந்தைகள் என்றளவில் குறைந்து விட்டது.
உலகளவில் பிறப்பு விகிதங்கள் குறைவதற்கு, எளிய கருத்தடை முறைகள், பெண்களுக்கு அதிக அளவில் கல்வி, வேலைவாய்ப்பு கிடைப்பது, வாழ்க்கைச் செலவினம் அதிகரிப்பு ஆகியவை சில காரணங்களாகக் கூறப்படுகிறது.
2080 ஆம் ஆண்டில், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 18 வயதிற்கு உட்பட்டவர்களை விட அதிகமாக இருப்பார்கள்.
இந்த நடைமுறை தொடருமானால், பல வருடங்களுக்குப் பிறகு, தென் கொரியா, சீனா, ஜப்பான் போன்ற வளர்ந்த நாடுகளுக்கு ஏற்பட்ட மனித வளம் இல்லாத சிரமங்களை இலங்கையும் சந்திக்க நேரிடும்.
சிலர் குறைந்த பிறப்பு விகிதத்தை வளர்ந்த நாடுகளின் சிறப்பியல்பு என்று கருதுகிறார்கள். மக்கள் தொகைப் பெருக்கம்தான் வறுமைக்குக் காரணம் என்று உணர்ந்த அரசுகள். மக்கள் தொகைப் பெருக்கத்தை வெகுவாக கட்டுப்படுத்தின. ஆனால், அதன் விளைவுகள் வேறு மாதிரி ஏற்பட்டு வருகிறது. முதியோர்கள் அதிகமாகவும், இளையோர்கள் இல்லாத நிலையும் ஏற்படத் தொடங்கியுள்ளது. அதனால், அந்த நிலைப்பாட்டை எடுத்த சில நாடுகள் இப்போது விளைவுகள் பாரதூரமாவதை அறிந்து இயல்பாகச் சிந்திக்கத் தொடங்கி விட்டன. ஒரு காலத்தில் எவை எல்லாம் சரி என்று நினைத்தார்களோ இன்று அவை தவறென்று தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையைக் கொண்ட சீனா, ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவை கடுமையாக அமுல்படுத்தியது. அதனால், மக்கள்தொகை பெரிய அளவில் சரிந்தது. இதனால் கடந்த 2016-ம் ஆண்டு அந்தக் கொள்கையை அதிரடியாக ரத்துச் செய்து, 2 குழந்தைகள் பெற்றுக் கொள்ள அனுமதித்தது. அதன்பிறகும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லாததால் 3 குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்று கடந்த கொரோனா பாதிப்பின் பின்னர் 2021ம் ஆண்டு அறிவித்தது.
ஏற்கெனவே சீனாவில் குழந்தை பிறப்பு குறைந்து விட்டதால், சீனா முழுவதும் உள்ள மழலையர் பள்ளிகள் பல மூடப்பட்டு வருகின்றன. அந்த பள்ளிகள், முதியோர் இல்லங்களாக மாற்றப்படும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
சீனாவில் முதியோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 140 கோடி மக்கள் தொகையில், 30 கோடிப் பேர் 60 வயதைத் தாண்டியவர்கள் என்று சீன அரசின் புள்ளி விவரம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தம்பதிகளை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு 13 சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் பெற்றோருக்கு குழந்தைப்பேறு மானியம், வீட்டு வசதி, கல்வி, வேலைவாய்ப்பு, வருமானவரிச் சலுகைகள், அடிப்படை மருத்துவ காப்பீட்டுத் திட்டம், இடம்பெயர் தொழிலாளர்களுக்குப் பேறுகாலக் காப்பீடு, பேறுகால விடுமுறை, இதுபோன்ற குழந்தைப் பராமரிப்பு விடுமுறை தொடர்பான கொள்கைகளைச் சரியாக அமுல்படுத்த வேண்டும் என்றும் சீன அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், திருமணம் ஆகாத பெண்கள், ஊதியத்துடன் மகப்பேறு விடுப்பை எடுத்துக் கொண்டு செயற்கைக் கருவுறல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அதேபோல் தனிப்பெண்கள் வாடகைத் தாய் மூலமும் குழந்தைகளைப் பெற்றுக் கொடுக்கலாம். அவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறான உதவி ஊக்கங்கள் அந்நாட்டு அரசுகளால் வழங்கப்படுகின்றன.
திருமணமாகாத பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற சீன அரசின் கொள்கை மாற்றத்தால், செயற்கைக் கருவூட்டல் மையங்களின் தேவை அதிகரித்துள்ளதாக ஆசியா பசிபிக் தொழில் மேம்பாட்டு நிலையம் அறிவித்துள்ளது.
எனவே, இந்த நிலைமைகளை இனமதவாதமற்று நடுநிலையோடு, நின்று, நிதானித்து, உற்றுக் கவனித்து எதிர்கால சந்ததியினரின் ஒட்டுமொத்த நலனுக்காக இந்தப் பிரச்சினையின் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்,
மேலும் இது தேர்தல் காலத்தில் மட்டும் கவனம் செலுத்தும் இனவாதம் மதவாதம் சார்ந்த ஒன்றாக இருக்கக் கூடாது. ஒட்டு மொத்த மனித குலத்தின் நன்மைக்காக இந்த விடயங்கள் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டும்.- Vidivelli