டிஜிட்டல் சத்துணவு முறை
என்றால் என்ன?
போஷாக்கு மிக்க உணவு பழக்கம் என்பது சத்து நிறைந்த உணவு வகைகளை உரிய வேளைக்கு தேவைக்கு ஏற்ற அளவில் பொறுப்புடன் நுகர்வதை குறிக்கும். நாம் ஆரோக்கியமாக வாழ சிறந்த உணவு பழக்கம் அவசியமானது. போஷாக்கான உணவு எமது ஆரோக்கியத்தை மாத்திரமன்றி, எமது அறிவு, கல்வி வளர்ச்சி, சமூக செயற்பாடு என்பனவற்றிலும் தாக்கம் செலுத்துகின்றது. இதேபோன்று, டிஜிட்டல் சத்துணவு பழக்கம் என்பது அறிவினை வளர்த்து, ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நமது இயலுமையை ஊக்குவிக்கும் சிறந்த உள்ளடக்கங்களை நுகர்வதாகும். நாம் இணையதளத்தில் எதனை, எப்போது, மற்றும் எவ்வளவு நுகர்கின்றோம் என்பது தொடர்பில் அக்கறையுடனும் பொறுப்புடனும் நடந்து கொள்வது டிஜிட்டல் சத்துணவு முறையின் நோக்கமென இணைய உளவியல் ஆய்வாளர்கள் விளக்குகின்றனர். டிஜிட்டல் சத்துணவு முறையின் பிரதான இலக்கு மெய்மறந்து இணையப்பாவனையில் மூழ்குவதை தவிர்த்து, உடல், உள, சமூக ஆரோக்கியத்தை பேணும் வகையில் உள்ளடக்கங்களை பெற்றுக்கொள்வதாகும்.
சிறந்த டிஜிட்டல் சத்துணவை நுகரும் பழக்கம் உள்ளவர்; இணையதள நுகர்வு நேரத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். எப்போது எவ்வளவு இணையத்தை பாவிக்க வேண்டும் என்பதை பொறுப்புடன் தீர்மானிப்பார். எத்தனை டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தினாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு, காத்திரமான தேவைகளுக்கு மாத்திரம் அவற்றை பாவிப்பார். இணைய உலகில் சஞ்சாரம் செய்வதை சுயமாகவே கட்டுப்படுத்திக் கொள்வார். டிஜிட்டல் கருவிகளை பயன்படுத்தும் போது தனது சமூக வாழ்க்கையின் கடமைகளுடன் சமநிலையை பேணிக் கொள்வார். உள, உடல் மற்றும் சமூக ஆரோக்கியத்தை பேணுவார். தனது புத்தாக்க உற்பத்தி திறனை மேம்படுத்தும் வகையில் இணையத்தைப் பயன்படுத்துவார். தனிமனித தொடர்பாடலை நேர்த்தியாகப் பேணிக்கொள்வார். ஆரோக்கியமான பொழுதுபோக்கை கொண்டிருப்பார். அதேபோன்று, உள்ளத்திற்கு, உடலுக்கு அல்லது சமூக வாழ்க்கைக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உள்ளடக்கங்களை நுகரமாட்டார். பிரயோசனமான உள்ளடக்கமாக இருந்தாலும் அதனை அளவுக்கு உட்கொள்வார். தம்மையும் மற்றவரையும் பாதிக்கும் உள்ளடக்கங்களை பரிமாற்றம் செய்யமாட்டார். போலியான தகவல்களை பெறவோ பரிமாறவோ மாட்டார்.
வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு அதீத இணைய பாவனையின் பிரதிகூலங்களை எடுத்துக் கூறும் போது மேற்சொன்னவாறு போசாக்கு உணவு பழக்கத்துடன் தொடர்புபடுத்தி விளக்கலாம். தொடர்பாடல் வலைப்பின்னல் துரிதமாக வளர்ந்து வரும் இக்காலத்தில் காட்டாறு போல டிஜிட்டல் உள்ளடக்கங்கள் எம்மை நோக்கி வருகின்றன. காலந்தோறும் நாம் தகவல்களை பெற்றுக் கொண்ட பழைய முறையில் அதிக மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாம் தகவல்கள் எம்மிடம் தேவைக்கு அதிகமாக வந்து சேர்வதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது. செய்தித்தாளையும் வானொலியையும் நம்பிய நம்மைச் சூழ நூற்றுக்கணக்கான ஊடகங்கள் வந்து விட்டன. சர்வதேச ஊடகங்களை நாம் விரல் முனையில் வைத்துக் கொண்டிருக்கின்றோம். நிபுணத்துவம் பெற்றவர்களே பொது வெளியில் தகவல்களை பரிமாற முடியும் என்ற நிலை மாறி ஒவ்வொரு தனிநபரும் ஊடகவியலாளர்கள் எனும் நிலை உருவாகியுள்ளது. ஸ்மார்ட் கைபேசியை வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தனியான ஊடகத்தை கையில் வைத்திருப்பவர்கள் போலாவர். யாரும் செய்திகளை பரப்பலாம். எப்படியும் செய்திகளை சொல்லலாம். எப்போது வேண்டுமானாலும் செய்திகளைப் பரப்பலாம்.
தகவல் மாசடைதல்
செய்தியும் தகவலும் மிகச் சுலபமாகக் கிடைக்கும் சூழ்நிலையில் தகவல்கள் மாசடைதல் இன்ஃபர்மேஷன் பொல்யூஷன் (Information Pollution) எனும் ஒரு புதிய கோட்பாட்டை கனேடிய சிவிக்ஸ் நிறுவனத்தின் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர். தகவல் மாசடைதல் என்பது பல்கிப் பெருகிவரும் தகவல்களுக்குள் உண்மைக்குப் புறம்பான செய்திகள் மலிந்து உண்மையின் பெறுமதி மங்கிப்போவதைக் குறிக்கின்றது. எமது தகவல் சூழலும் இவ்வாறுதான். அதிலுள்ள பல தகவல்கள் போலியானவை. உண்மைக்குப் புறம்பானவை. இட்டுக்கட்டப்பட்டவை. திரிபுபடுத்தப்பட்டவை. அரைவாசி உண்மையானவை. உணர்ச்சிவசப்படுத்தப்பட்டவை. மக்களை ஏமாற்றும் உத்திகளைக் கொண்டவை. எனவே, எமது தவல் சூழல் மாசடைந்துவிட்டது. இந்நிலையில், நாம் நல்ல சத்துணவை நுகர்வதுபோல நல்ல தகவல்களை தேடித் தெரிவுசெய்து உட்கொள்ள வேண்டும்.
நாம் சத்துணவை எல்லா இடங்களிலும் எதிர்பார்க்க முடியாது. அதிகமான இடங்களில் மலிவான பொருட்கள் மாத்திரமே கிடைக்கும். சத்துணவுப் பொருட்களுக்கு சில நேரம் விலை சற்று அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட இடங்களில் மாத்திரமே அவை கிடைக்கும். சத்துணவை விற்பவர்கள் அவற்றின் தரம் பற்றி வெளிப்படையாக குறிப்பிடுவார்கள். இதேபோன்றுதான் இணைய வெளியிலும். நல்ல உள்ளடக்கங்கள் எல்லா இடங்களிலும் கிடைப்பதில்லை. அதனை நாம் திட்டமிட்டுத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும்.
சத்துணவு உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்துவது போல நல்ல உள்ளடக்கங்கள் நல்ல உள ஆரோக்கியத்தை ஏற்படுத்துகின்றன. எனவே இணையத்தளத்தில் பல்வேறு விதமான உள்ளடக்கங்களை நுகரும் நாம் அத்தகைய உள்ளடக்கங்கள் எமது ஆரோக்கியத்தை எவ்வாறு வளப்படுத்துகின்றன என்பதை சுய விசாரனை செய்துகொள்ள வேண்டும். இரண்டு விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். ஒன்று செய்தி மற்றும் தகவல்களை புத்திசாலித்தனமாக உள்வாங்கிக் கொள்ளுதல். இரண்டாவது, நாம் இணையதளத்தில் நுகரும் உள்ளடக்கங்கள் எமது சமூக நலனையும் உடலுள ஆரோக்கியத்தையும் எவ்வாறு பாதிக்கும் என்பதை அறிந்து செயல்படுதல்.
டிஜிட்டல் சத்துணவு எனும் எண்ணக்கருவில் உள்ளடங்கும் மற்றொரு அம்சம், பாதுகாப்பான இணையப்பாவனையாகும். சமூக ஊடகங்களிலும் ஏனைய இணையத்தளங்களிலும் மிகவும் கண்மூடித்தனமாக எமது தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல், வீட்டு முகவரி, தொழில் செய்யும் இடம், பிள்ளைகளின் விபரங்கள், பாவிக்கும் வாகனம் போன்ற தனிப்பட்ட தகவல்களை பகிர்கின்றோம். இது மிகவும் ஆபத்தான செயற்பாடாகும். டிஜிட்டல் சத்துணவு முறையைப் பேணும் ஒருவர் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டார்.
டிஜிட்டல் உள்ளடக்கங்களை நுகர்தல்
இணைய உள்ளடக்கங்கள் பல உள்ளத்திற்கு பலத்தை வழங்குகின்றன. ஆளுமை முதிர்ச்சியையும் அறிவாற்றலையும் ஏற்படுத்துகின்றன. அதேபோல, அனேகமான இணைய உள்ளடக்கங்கள் எம்மிடையே அமைதியின்மையை, விரக்தியை, தனிமையை, நடத்தை மாற்றத்தை தோற்றுவிக்கின்றன. சில மாற்றங்கள் அழிவினை நோக்கி எம்மை இட்டுச் செல்கின்றன. எனவே, குழந்தைகள் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் இணைய உள்ளடக்கங்கள் எமது உள நலனை எவ்வாறு பாதிக்கின்றன என்பது பற்றி பேசப்பட வேண்டும். மேலே குறிப்பிட்ட சத்துணவு வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளவாறு எமது இணைய உள்ளடக்கங்களை பெற்றுக் கொள்ள வேண்டும். சமநிலையை பேண வேண்டும்.
மேலே பிரசுரிக்கப்பட்டுள்ள படத்தைக் கவனியுங்கள். (படம் : https://www.internetmatters.org/)
கற்றல் மற்றும் உருவாக்குதல்
இணையவெளியில் பிரயோசனமுள்ள உள்ளடக்கங்களைக் கற்றுக்கொள்ளவும் உருவாக்கவும் நாம் ஒப்பீட்டளவில் அதிக காலத்தை செலவிட வேண்டும். இதில் வீட்டுவேலைகளை தயாரித்தல், கல்வி சார் ஒப்படைகளை தயாரித்தல் என்பனவும் அடங்கும். வரைதல், வீடியோ கதைகளை உருவாக்குதல், புத்தகங்களை தயாரித்தல், ஆய்வுகளை மேற்கொண்டு டிஜிட்டல் ஊடகங்களை மக்கள் மயப்படுத்தல் என்பனவும் அடங்கும். அறிவியல் உண்மைகளைக் கண்டறிவதற்கும் அதிக நேரத்தை எடுத்துக்கொள்ளலாம்.
துரதிஷ்டவசமாக இளம் தலைமுறை பயன்தரக்கூடிய தேவைகளுக்காக குறைவான நேரத்தை செலவிடுகின்றனர். நண்பர்கள் குடும்பத்தினர் ஓரளவு அறிமுகமானவர்களுடன் தொடர்பு கொள்வதற்காக, கல்வித்தரமற்ற இணைய விளையாட்டுக்களில் ஈடுபடுவதற்காக அதிக நேரத்தை செலவிடும்போது எமது டிஜிட்டல் போஷாக்கு பாதிக்கப்படுகிறது.
தொடர்பாடல் திறனை வளர்த்துக்கொள்தல்
மேலுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு, கற்றலுக்கும் டிஜிட்டல் உள்ளடக்கங்களை தயாரிப்பதற்கும் அதிகமான நேரங்களை எடுக்கும் நாம், அதற்கு அடுத்தபடியாக தகவல் தொடர்பாடல் திறனை வளர்த்துக்கொள்ள இணையத்தளத்தைப் பயன்படுத்த வேண்டும். இதில் உறவினர்களுடன் தொடர்பாடுதல், எமது அடைவுகளை பரிமாறுதல், மற்றும் அறிமுகமுள்ள நம்பிக்கையான நண்பர்களுடன் கல்விசார் விளையாட்டுக்களில் ஈடுபட நேரத்தை ஒதுக்க முடியும்.
வீடியோ விளையாட்டுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள்
வீடியோ விளையாட்டுக்களில் ஈடுபட, பொழுது போக்கிற்காக சமூக ஊடகங்களில் பிரவேசிக்க மிகவும் குறைவான நேரத்தை ஒதுக்க வேண்டும்.
எமது அன்றாட வாழ்வில் சத்துணவு கொள்கை என்பது எல்லோருக்கும் ஒன்றாக அமைவதில்லை. இது ஆளுக்காள் வேறுபடும். ஒருவருடைய வயது உடற்பருமன் என பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தனி ஒருவர் உட்கொள்ளும் போஷாக்கு வித்தியாசப்படும். டிஜிட்டல் சத்துணவு உட்கொள்கையும் இவ்வாறு தான். ஒருவரது வயது தொழில், கல்வி, தேவை, பொழுதுபோக்கு, சமூக ஈடுபாடு, ஆர்வம் என்பனவற்றை பொறுத்து ஆளுக்காள் மாறுபடும். இதில் உலக நியமம் என்று எதுவும் கிடையாது. சமூக ஊடகங்கள் எமது இணையதள அனுபவத்தை அதிகம் பாதிக்கின்றது. இவை எமது சமூகத் தொடர்பாடலை உறுதிப்படுத்தும் அதேவேளை, உளச்சோர்வு, பதகளிப்பு, பாதுகாப்பின்மை, சமூக ஒப்பீடு, உடல்வாகு ஒப்பீடு மற்றும் ஓய்வின்மை போன்றவற்றை ஏற்படுத்துகின்றன. எமது நிம்மதியை இல்லாமல் செய்கின்றன. அத்தோடு, பெறுமதியான நேரத்தை எம்மிடமிருந்து பறித்து விடுகின்றன. சமூக ஊடகங்களின் தொழில்நுட்பம் எப்போதும் எமது அவதானத்தை ஈர்ப்பதாக உள்ளது. எனவே, மிகப் போஷாக்கான அதாவது மிகப் பிரயோசனம் உள்ள நன்மை தரக் கூடிய விடயங்களில் நாம் அதிக நேரத்தை செலவிட வேண்டியுள்ளது.- Vidivelli